You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"ஆப்கன் முன்னாள் படை வீரர்கள் தாலிபன்களால் கொல்லப்பட்டனர்"
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், அந்த நாட்டில் முன்பு அரசின் படை வீரர்களாக இருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போய் விட்டனர் என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது .
தாலிபன்கள் தலைமையால் அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பு, முன்னாள் படைவீரர்களையும் காவல்துறையையும் உள்ளூர் தளபதிகள் குறிவைப்பதை தடுக்கவில்லை என்று மனித உரிமைக் குழு கூறியுள்ளது.
வேண்டுமென்றே செய்யப்படும் இந்த கொலைகளை, தாலிபன் தலைமை மன்னித்துவிடுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு குற்றம்சாட்டுகிறது.
எந்த பழிவாங்கும் கொலைகளும் நடக்கவில்லை என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் அண்மையில் மறுத்திருந்தார்.
இருபது ஆண்டு கால போரில், கடந்த ஆகஸ்டு மாதம் தனது கடைசி வீரர்களையும் அமெரிக்கா விலக்கிக் கொண்டது. இதையடுத்து ஆஷ்ரப் கனியின் ஆட்சியை அகற்றி, தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
ராணுவம், காவல்துறை மற்றும் நாட்டில் உள்ள இதர பிரிவுகளில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் பொது மன்னிப்பின் மூலம் பாதுகாக்கப்படுவார்கள் என்று தாலிபன் உறுதியளித்தனர்.
ஆனால், பலரும் தாலிபன்களின் பொதுமன்னிப்பு சந்தேகித்தனர். ராணுவத்தினரையும் பொதுமக்களையும் கொன்ற நீண்ட வரலாறு தாலிபனுக்கு உண்டு.
2020ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுவது வரை, கொடூரமான, இரக்கமற்ற படுகொலைகளுக்கு காரணமாகியுள்ளது இந்த குழு. இதில், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அமைதிக்கான செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரும் அடக்கம்.
விமர்சகர்களை அகற்றுவதும், எஞ்சி உயிர் பிழைத்திருப்பவர்களுள் அச்சத்தை புகுத்துவது என்ற வகையில் இந்த பிரசாரம் வடிவமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மனித உரிமை கண்காணிப்பகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, "தாலிபன்களின் ஆட்சியின் கீழ் குறிவைக்கப்பட்ட மரணங்கள் தொடர்கின்றன. குறிப்பாக, கந்தகார், காஸ்னி, ஹெல்மன்ட், குந்தூசு ஆகிய நான்கு மாகாணங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போய் விட்டனர்.
மேலும், சரணடைந்த பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்களை தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தங்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு தாலிபன் வழிநடத்தியது. ஆனால், இந்த பதிவு செய்த சில நாட்களில், அதிலுள்ள விவரங்களை கொண்டு அவர்களை அடையாளம் கண்டு, கொன்று விடுகிறார்கள் அல்லது காணாமல் போய்விட்டனர்.
முந்தைய அரசு விட்டுச் சென்ற வேலைவாய்ப்பக பதிவுகளில் இருந்து மக்களை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்தனர்; படுகொலை செய்தனர்.
"தாலிபன் தலைவர்கள் பொதுமன்னிப்பிற்கு உத்தரவாதம் அளித்தனர். ஆனால், உள்ளூர் தளபதிகள் முன்னாள் ஆப்கன் பாதுகாப்பு படைவீரர்கள் கொல்வதையும் காணாமல் போக செய்வதையும் அது நிறுத்தவில்லை." என்று தொண்டு நிறுவனத்தின் ஆசிய இணை இயக்குநர் (Associate Asia director at the charity) பாட்ரிசியா கோஸ்மன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், " மேலும் கொலைகளைத் தடுப்பது, அதற்கு காரணமானவர்களை தண்டிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பொறுப்பு தாலிபனுக்கு உள்ளது" என்கிறார்.
தாலிபன் பிரதமர் முகமது ஹாசன் அகுந்த், சனிக்கிழமை நடந்த பொது கூட்டத்தில் பேசுகையில், இது போன்ற எந்த பழிக்குபழி வாங்கும் செயலும் நடைபெறவில்லை என்று மறுத்துள்ளார்.
பழிவாங்கும் செயல் பற்றி பேசுகையில், அவர், தாலிபன்கள் பொறுப்பேற்றப்போது, " அனைவருக்கும் பொது மன்னிப்பு என்று அறிவித்தனர். இதற்கான உதாரணங்கள் இருக்கிறதா..? இங்கே யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை", என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- "ஒமிக்ரான் திரிபு: உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" WHO எச்சரிக்கை
- வேளாண் சட்ட வாபஸ் மசோதா: எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் - உறுதிகாட்டும் விவசாயிகள்
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்