பிறந்தது "2021": கொரோனா தொற்றுக்கு மத்தியில் கொண்டாட்டம்

புத்தாண்டு

பட மூலாதாரம், TWITTER

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா பெருந்தொற்று மற்றும் புதிய கொரோனா திரிபு பரவலுக்கு மத்தியில் உலகம் 2021ஆம் புத்தாண்டை புதிய நம்பிக்கையுடன் வரவேற்றது.

கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட எல்லா நாடுகளின் பெரும்பாலான நகரங்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இருந்தபோதும், மக்கள் வீடுகளில் இருந்தபடியும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவாறும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இந்தியாவில் என்ன நிலை?

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலையொட்டி பல்வேறு மாநில அரசுகள் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்க கட்டுப்பாடுகளை மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டித்திருக்கின்றன.

புதுச்சேரியில் உற்சாகத்துடன் தொடங்கிய கொண்டாட்டம்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கியிருந்ததால் வெளிநாடுகள், வெளியூர்களில் இருந்தும் புத்தாண்டை கொண்டாட மக்கள் வந்திருந்தனர். அங்குள்ள விடுதிகளில் கிட்டத்தட்ட 90 சதவீத அறைகள் டிசம்பர் 31ஆம் தேதி முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. உணவகங்கள், விடுதிகளில் மூடப்பட்ட சூழலில் புத்தாண்டை கொண்டாட மக்கள் அனுமதிக்கப்படாதபோதும் கடற்கரை சாலைகளில் மக்கள் சமூக இடைவெளியுடன் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க ஊக்குவிக்கப்பட்டார்கள்.

தமிழகத்தில் களையிழந்த கொண்டாட்டம்

தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டன.

சென்னையில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுக்கு அரசு தடைவிதித்தது. கடற்கரை சாலைகளில் வழக்கமாக புத்தாண்டையொட்டி மக்கள் கூடுவார்கள்.

இந்த ஆண்டு அவ்வாறு கூடுவதற்கு காவல்துறை தடை விதித்திருக்கிறது. எனினும் நள்ளிரவுக்கு முன்னதாக, மக்கள் கடற்கரை சாலைகளை தவிர்த்து வேறு பகுதி வழியாக வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் வீடுகளுக்கு அருகே வசித்தவர்களிடம் இனிப்புகளை பரிமாறு புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.

தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. சமூக இடைவெளியுடன் வரம்புக்கு உட்பட்ட அளவில் பார்வையாளர்கள் இந்த நிக்வுகளில் கலந்து கொண்டார்கள்.

டெல்லியில் என்ன நிலை?

டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன. டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. டிசம்பர் 31 இரவு 11 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி காலை 6 மணி வரை பொதுமக்கள் கூடுதற்கு டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்தது.

புத்தாண்டையொட்டி வழக்கமாக பொதுமக்கள் தலைநகர் டெல்லியில் நள்ளிரவு 12 மணியளவில் கனாட் பிளேஸ், இந்தியா கேட் ஆகிய பகுதிகளில் கூடி வாழ்த்து கூறுவார்கள். ஆனால், இந்த ஆண்டு அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் இரவு 11 மணிக்கு மேல் அந்த பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

டெல்லியில் பொது முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக, வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்தவர்கள், பட்டாசுகளை வெடித்து புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்கள்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்ட தின கட்டுப்பாடுகளுடன் சேர்த்து பிறப்பிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு ஜனவரி 5ஆம் தேதிவரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மக்களின் நடமாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உணவு விடுதிகள், மதுபான விடுதிகள் ஆகியவை இரவு 11 மணிக்கு மேல் திறக்க அனுமதிப்படவில்லை.

கர்நாடகா

பெங்களூரில் புத்தாண்டு பொது நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில உள்துறை தடை விதித்துள்ளது. அங்குள்ள எம்ஜி ரோடு, சர்ச் தெரு, பிரிகேட் சாலை, கோரமங்கலா மற்றும் இந்திரா நகர் பகுதிகள், இரவு 11 முதல் காலை 6 மணிவரை மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதிகளாக நகர காவல்துறை அறிவித்திருக்கிறது.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 2021ஆம் புது வருடத்தை வாண வேடிக்கை நிறைந்த காட்சிகளுடன் அங்குள்ள மக்கள் வரவேற்றனர்

நியூசிலாந்தில் கடுமையான பொது முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதால், அங்கு வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.

முதலாவதாக புத்தாண்டின் தொடக்கத்தை எதிர்கொண்ட நாடுகள்

புத்தாண்டு

பட மூலாதாரம், TWITTER

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கண் கவர் வாண வேடிக்கை இருந்தபோதும், துறைமுக பகுதியில் மக்கள் ஒன்று கூடி அந்த காட்சிகளை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

புத்தாண்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆக்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸால் புரட்டிப்போடப்பட்ட இயல்புநிலையை மீட்டெடுக்க உலக அளவில் பல நாடுகள் போராடி வருகின்றன. இந்த நிலையில், உலகின் பல நாடுகளில் முதலாவதாக புத்தாண்டை எதிர்கொண்ட நியூஸிலாந்தை, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, ஜப்பான், தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டை மக்கள் அமைதியான வகையில் வரவேற்றனர்.

புத்தாண்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெல்போர்னில் புத்தாண்டை வரவேற்ற பொதுமக்கள்

ஐரோப்பிய நாடுகளில் தொடரும் கட்டுப்பாடுகள்

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த அந்நாட்டு அரசு, விதிகளை மீறி நிகழ்ச்சிகளை நடத்துவோரை கண்காணிக்க ஒரு லட்சம் காவல்துறையினரை சிறப்பு கண்காணிப்பு பணிக்காக நியமித்தது.

இத்தாலியில் புத்தாண்டு கொண்டாட விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, அங்குள்ள முக்கிய நகரங்களின் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இத்தாலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இத்தாலியின் மிலன் நகரில் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நகரங்கள் உள்பட பல இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

சீனாவில் விளக்குகளின் ஒளிரும் நிகழ்ச்சிகளுக்கு இந்த ஆண்டு அரசு கட்டுப்பாடு விதித்ததால், லாந்தர் விளக்குகளை ஏற்றி புத்தாண்டை மக்கள் வரவேற்றார்கள்.

பிரிட்டனில், புதிய கொரோனா வைரஸ் திரிபு வேகமாகப் பரவி வருவதோடு, மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் 20 மில்லியன் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்நாட்டில் மக்கள் கோவிட்-19 சமூக இடைவெளி விதிகளை பின்பற்றுமாறு பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டார்.

அயர்லாந்து நாட்டில் வியாழக்கிழமை இரவு மிக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பிறரது வீடுகளுக்கு மக்கள் செல்ல முழு தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பணிகளில் அல்லாதவர்கள் ஐந்து கி.மீ தூரத்துக்கு மேல் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

புத்தாண்டு

பட மூலாதாரம், Huw Evans picture agency

படக்குறிப்பு, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் நகரின் முக்கிய வீதிகள்

ஜெர்மனி நாட்டில் ஜனவரி 10ஆம் தேதிவரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு புத்தாண்டையொட்டி பட்டாசு விற்பனைக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கையை பொதுமக்கள் சாதகமான நடவடிக்கையாக பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், "நாட்டில் "அமைதியான புத்தாண்டு கொண்டாட்டம்" ஆக 2021ஆம் ஆண்டு நினைவில் இருக்கும்," என்றார்.

நெதர்லாந்து நாட்டில் பொது முடக்கம் ஜனவரி 19ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் வழக்கமான புத்தாண்டு கவுன்ட் டவுன் நிகழ்ச்சிக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

துருக்கி நாட்டில் புத்தாண்டு நாளில் தொடங்கி நான்கு நாட்களுக்கு பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :