தாய்லாந்தில் கொரோனா: இறால் விற்ற பாட்டி மூலம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வைரஸ்

பிரசுரிக்கப்பட்டது

தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுச் சந்தையுடன் தொடர்புடைய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், தற்போது ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, சமூத் சகோன் என்ற மாகாணத்தை முழுமையாக மூட தாய்லாந்து அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த மாகாணத்தில்தான் தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுப் பொருட்கள் சந்தையான மகாசாய் சந்தை இருக்கிறது.

இந்த மாகாணம், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்குக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கடல்சார் உணவுச் சந்தையில் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் (குறிப்பாக மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள்) வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு தொழிலாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

சீனாவுக்குப் பிறகு, முதல் முறையாக கொரோனா பரவிய நாடு தாய்லாந்து தான் என்பது நினைவுகூரத்தக்கது.

பாதிப்பு அளவு அதிகரித்தது எப்படி?

கடந்த வியாழக்கிழமை, 67 வயது இறால் விற்கும் பாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவரிடமிருந்தே வைரஸ் பரவல் தொடங்கியதாக கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்த நாள் அங்கு நான்கு பேர் பாதிக்கப்பட்டார்கள். இப்படியாக ஞாயிற்றுக்கிழமை இறுதிக்குள்ளாக, 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் பலரும் மியான்மாரில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளிகள் என தாய்லாந்தின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுச் சந்தையான மகாசாய் சந்தையில் வியாபாரம் செய்த இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், இப்போது அங்கு தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

அந்த 67 வயது மூதாட்டி, வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை. அப்படி இருக்கும் போது, இந்த பாட்டிக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது, யாரால் தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயன்று வருகிறார்கள்.

என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்?

ஒரு பக்கம் கொரோனா பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் மகாசாய் சந்தையைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் வாழும் மியான்மார் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை கூறுகிறது.

மியான்மார் புலம்பெயர் தொழிலாளர்களை எங்கும் செல்லவிடாமல் வைத்திருக்கிறோம். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் அவர்களின் வசிப்பிடத்திலேயே வழங்கப்படுகிறது என சுகாதார அமைச்சரின் நிரந்தர செயலர் கெப்ட்கும் வாங்கிட் கூறினார்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் பலரும் அறிகுறிகள் ஏதும் இல்லாதவர்களாக இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

இன்று சுமாராக 360 புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் தாய்லாந்தில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பது இதுவே முதல் முறை.

10,300 பேரிடம் தொடர்பு தடமறிதல் நடவடிக்கை எடுக்கப்படும் என தாய்லாந்தின் கோவிட் - 19 சிறப்பு நடவடிக்கை குழு செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

"சமூத் சகோன் மாகாணத்தில் தொடர்ந்து ஊடரங்கு இருக்கும். அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி வரை இரவு நேர ஊடரங்கு தொடரும். 40,000 பேர் வரை கொரோனா பரிசோதனை நடத்தப்படும்," என அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எத்தகைய தாக்கம் ஏற்படும்?

மியான்மார் உட்பட, நான்கு நாடுகளின் எல்லைப் பகுதிகளைப் பகிர்ந்து கொள்ளும் தாய்லாந்தில் சுமாராக 70 மில்லியன் பேர் வாழ்கிறார்கள். தாய்லாந்தில், கொரோனா பரவலை அரசு குறைவாகவே வைத்திருந்தது போலத் தெரிந்தது.

"நாம் இந்த கொரோனா சுழற்சியை விரைவாகத் தடுக்க வேண்டும். நமக்கு இதில் ஏற்கனவே முன் அனுபவம் இருக்கிறது" என தாய்லாந்தின் பிரதமர் ப்ரயுத் சன் ஓசா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

தாய்லாந்தில் கொரோனாவை இறக்குமதி செய்வதாக, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான உணர்வு சமூக வலைதளங்களில் பரவுவதாக, சமுத் சகோனில் கொரோனா பரிசோதனையை நடத்த உதவிய மியான்மர் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர், ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறினார்.

மக்கள் ஒன்று கூட வேண்டாம் என்றும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொல்லியும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது தாய்லாந்து அரசு. அதோடு புத்தாண்டு கொண்டாட்டங்களை நிறுத்துமாறு, பொது மற்றும் தனியார் துறை அமைப்புகளிடம் கூறியிருக்கிறது அரசு.

கடந்த வியாழக்கிழமை தான், தங்களின் கடுமையான சட்டதிட்டங்களை எல்லாம் தளர்த்தி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாய்லாந்துக்கு வரலாம் என்றது அரசு. இந்த நிலையில், புதிய பரவல், தாய்லாந்தின் சுற்றுலா துறையை மேம்படுத்த எடுக்கபட்ட நடவடிக்கைகளை கடுமையாக பாதித்து இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :