இரான் அணுசக்தி நெருக்கடி: ஐ.நா ஆய்வாளர்களை கட்டுப்படுத்த புது சட்டம்

இரான்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரானிய யுரேனிய செறிவூட்டல் பகுதியை காண்பிக்கும் செயற்கைக்கோள் படம்
பிரசுரிக்கப்பட்டது

இரானிய நாடாளுமன்றத்தால் அந்நாட்டின் அணு ஆற்றல் பலத்தை பெருக்கிக் கொள்ள ஏதுவாக புதிய சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, இரான் தன் யுரேனியத்தை 20% செறிவூட்டும். இதே போல, இரானின் அணு உலைகளை மேற்பார்வையிட வரும் ஐநா ஆய்வாளர்களையும் தடுத்த புதிய சட்டம் வகை செய்யும்.

கடந்த வெள்ளிக்கிழமை, இரானின் முன்னணி அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே, டெஹ்ரானுக்கு அருகில் அப்சார்ட் எனுமிடத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இஸ்ரேல் மற்றும் இரானில் இருந்து வெளியேற்றப்பட்ட குழு தான் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆயுதத்தைப் பயன்படுத்தி சுட்டுக் கொன்றதாக நம்புகிறது இரான்.

இந்த கொலைக்குப் பிறகு தான், இரான் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறது.

இரானின் அணுசக்தித் திட்டங்களில், ஃபக்ரிஸாதே முக்கிய பங்கு வகித்தார். அணுசக்தி நடவடிக்கைகள் அனைத்துமே அமைதியான பயன்பாடுகளுக்குத் தான் என இரான் கூறி வருகிறது.

இரான் அணு ஆயுதங்களைத் தயாரித்துவிடக் கூடாது என மேற்கத்திய நாடுகள் இரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.

இரானின் புதிய சட்டம்

இரான் பாதுகாப்புச் சபை ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த சட்டத்தின் படி, 2015-ம் ஆண்டு அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இரண்டு மாத காலம் அவகாசம் கொடுக்கிறது இரான். இந்த இரண்டு மாத காலத்துக்குள், அமெரிக்கா 2018-ம் ஆண்டு இந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய போது, இரான் மீது விதித்த கச்சா எண்ணெய் மற்றும் நிதித் துறைத் தடைகளை நீக்க வேண்டும் என கோரி இருக்கிறது.

அப்படி தடைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் நீக்கவில்லை என்றால், மேம்படுத்தப்பட்ட சென்ட்ரிஃப்யூஜ் எனப்படும் இயந்திரங்களை நடன்ஸ் மற்றும் ஃபர்டோவ் பகுதிகளில் இருக்கும் அணு உலைகளில் இரான் நிறுவும். இந்த சென்ட்ரிஃப்யூஜ்களைதான் யுரேனிய செறிவூட்டலுக்கு அந்நாட்டு விஞ்ஞானிகள் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் இரான் தன் யுரேனியத்தை 20% செறிவூட்டும் என அவரகள் குறிப்பிடுகிறார்கள்.

இதைத்தொடர்ந்து, இரானின் அணு உலைகளை மேற்பார்வை செய்ய வரும் ஐ.நா ஆய்வாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என கூறுகிறது இரான்.

இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இரான் பாராளுமன்ற பேச்சாளர் இரானிய அதிபர் ரூஹானியிடம் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார் என இரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் டிசம்பர் 2ஆம் தேதி கூறியது.

இரான்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், "என் அரசுக்கு இந்த சட்டத்தில் உடன்பாடு இல்லை, இது ராஜீய நடவடிக்கைகளை பாதிப்பதாக இருக்கும்" என இந்த சட்டத்துக்கு இரான் பாராளுமன்றம் அனுமதி கொடுப்பதற்கு முன் இரான் அதிபர் ரூஹானி குறிப்பிட்டு இருக்கிறார்.

கடந்த மே 2018-ல் டொனால்ட் டிரம்ப், 2015-ம் ஆண்டில் இரானுடன் செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பல கடுமையான பொருளாதார கட்டுப்பாடுகளை இரான் மீது அமெரிக்கா விதித்தது.

2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்கும் சட்ட திட்டங்களை முறையாக இரான் கடைபிடித்தால் மட்டுமே அந்நநாடு மீதான பொருளாதார தடைகளை நீக்குவோம் என டிரம்ப் கூறினார். இந்த நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பைடன். 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணையும் என கூறியிருக்கிறார்.

ஒப்பந்தத்தை மீறிய இரான்

ஏற்கனவே 2015ஆம் ஆண்டில் இரான் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட 3.67% அளவை விட அதிகமாக, கடந்த ஜூலை 2019-ல் தன் யுரேனிய செறிவூட்டலை 4.5% கூடுதலாக்கியது. அதன் பின் இந்த அளவிலேயே தன் செறிவூட்டல் அளவை அந்நாடு வைத்திருக்கிறது.

3% - 5% யுரேனியம் 235 கொண்ட, குறைந்த அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்து, அணு மின் நிலையத்துக்கான எரிபொருளைத் தயாரிக்கலாம். 90% மற்றும் அதற்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்து அணு ஆயுதங்களைத் தயாரிக்கலாம்.

இரான் தனது அணுசக்தி திட்டத்தை ஒரு சாக்காக வைத்து, அணு குண்டை உருவாக்கிறது என ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஐ.நா சந்தேகித்தது. இது கடந்த 2010-ம் ஆண்டில் இரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தூண்டின.

இரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிக் கொள்வதற்கு பதிலாக, இரானின் அணுசக்தித் திட்டங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்த வடிவமைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :