ஆன்லைன் செக்ஸ் மன்னனுக்கு 40 ஆண்டுகள் சிறை - தென் கொரியா நீதிமன்றம் தீர்ப்பு

ஆன்லைன் செக்ஸ்

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது

(உலக அளவில் இன்றைய நாளில் நடந்த முக்கய செய்திகளின் சுருக்கத்தை இந்த பக்கத்தில் வழங்குகிறோம்.)

தென் கொரியாவை சேர்ந்த, சோ ச்சூ பின் என்கிற 25 வயது பட்டதாரி இளைஞர், பல பேரை மிரட்டி அந்தரங்க வீடியோ பதிவுகளை எடுத்து இருக்கிறார். அவருக்கு 40 ஆண்டுகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஜோ ச்சூ பின் பதிவு செய்த அந்தரங்க காணொளிகளால் 16 இளம் வயது பெண்கள் உட்பட 74 பேர் சுரண்டப்பட்டு இருக்கிறார்கள்.

அப்படி எடுக்கப்படும் விடியோக்களை, லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் டெலிகிராம் செயலியில் இருக்கும் சாட் ரூமில் ஜோ ச்சூ பின் பகிர்ந்து இருக்கிறார்.

இவரின் சாட் ரூமில் பணம் செலுத்தினால் அந்தரங்க விடியோக்களைக் காணலாம். இதற்கு அதிகபட்சமாக சிலர் 1,200 அமெரிக்க டாலர் வரை கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். குறைந்தபட்சமாக 10,000 பேர் இந்த சாட் ரூமை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பலரை மிரட்டியும், ஆசை வார்த்தைகளைச் சொல்லி மயக்கியும் எடுக்கப்பட்ட அந்தரங்க விடியோ காட்சிகளை, பரவலாக விநியோகித்து இருக்கிறார்கள் என சோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் குறிப்பிடுவதாகக் யோன்ஹாப் செய்தி ஏஜென்சியில் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த விவகாரம் தென் கொரிய அரசுக்கு தெரிய வர, அவரை கைது செய்து விசாரித்து அவர் குற்றம் செய்ததை உறுதி செய்து இருக்கிறது.

இந்த விவகாரத்தில் 124 பேரையும், 18 சாட் ரூம் மற்றும் சமூக வலைதளத்தை இயக்கி வந்தவர்களையும் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள்.

தற்போது சோ ச்சூபின்-க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி இருக்கிறது தென் கொரிய நீதிமன்றம். சோ ச்சூ பின்னுடன் தொடர்புடைய 5 பேருக்கு 7 - 15 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கி இருக்கிறது.

ஞானவேல் ராஜா மீதான பண மோசடி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

ஞானவேல் ராஜா

பட மூலாதாரம், GNANAVEL RAJA

சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீதான பண மோசடி வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து ரூ. 3 கோடி மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ராமநாதபுரம் போலீசார், ரூ.300 கோடி வரை மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தப் பண மோசடியில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாக்கு தொடர்பு இருப்பதாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் பெயர் சேர்க்கப்பட்டது.

இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஞானவேல் ராஜாவுக்கு ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதன்படி பஜார் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி அவரது சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

அப்போது மகாமுனி படத்திற்கான திரையரங்கு உரிமத்திற்காகவே ரூ 6.92 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.2 கோடி முன்பணமாக பெறப்பட்டு படத்திற்கான உரிமம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எந்த ஒரு பணம் மோசடியும் நடைபெறவில்லை என்று ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் தன்னை காவல்துறையினர் விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டும் என்றும் ஞானவேல்ராஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி நிஷாபானு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பதியப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், அவரது மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

குழந்தைகளின் இறப்பு விகிதம் சரிவு - திருச்சி அரசு மருத்துவமனைக்கு விருது

திருச்சி

குறைந்த எடையுடன் பிறந்த, அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை காப்பாற்றியதற்காக, தமிழக அரசு சார்பில், திருச்சியில் உள்ள, குழந்தைகள் பராமரிப்புக்கான சிறப்பு நோடல் மையத்திற்கு, விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை தொடர்ச்சியாக, மூன்று ஆண்டுகளாக இம்மையம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அறிவிப்பு படி, புதிதாக பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் வாரம், ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி சென்னையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கடந்த, 20ம் தேதி நடந்த இவ்விழாவில், சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவமனைகளுக்கு விருது வழங்கப்பட்டது.இதில், குறைந்த எடையுடன் பிறந்த, அதிக எண்ணிக்கையிலான, குழந்தைகளை காப்பாற்றியதற்காக, திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும், குழந்தைகள் பராமரிப்புக்கான சிறப்பு நோடல் மையத்திற்கு, விருது வழங்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு படி, பல்வேறு காரணங்களால், பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளின் விகிதத்தில், இந்தியா பொருத்தவரை 32 ஆகவும், தமிழகம் 15 ஆகவும் உள்ளது. இந்நிலையில் ஒன்றரை கிலோவை விட, குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, வென்டிலேட்டர் வசதியுடன் உயிர் பிழைக்க வைப்பதில், திருச்சி அரசு மருத்துவமனை முன்னிலையில் இருப்பதாக தெரிவித்தார், குழந்தைகள் பராமரிப்பு சிறப்பு நோடல் மைய தலைவர் மருத்துவர் செந்தில் குமார்.

மேலும், அவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரச்னைகளுடன் பிறக்கும், 4,500 க்கும் மேற்பட்ட, குழந்தைகளை சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மூலம் காப்பாற்றி வருகிறோம். கிட்டத்தட்ட, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளான, 325 கர்ப்பிணிகளின் குழந்தைகள், எந்த சிக்கலும் இன்றி, குழந்தை பராமரிக்கப்பட்டனர். இதில் பிறந்தவுடன், 10 குழந்தைகளுக்கு தொற்று உறுதியான நிலையில், சிகிச்சை மூலம் குணமடைந்து விட்டனர். இதற்கு காரணமான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட, அனைவரையும் பாராட்டும் வகையில், தமிழக அரசு இவ்விருது அளித்துள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இவ்விருதை பெறுகிறோம்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :