நானே வருவேன் - சினிமா விமர்சனம்

நானே வருவேன்

பட மூலாதாரம், @theVcreations/twitter

பிரசுரிக்கப்பட்டது

நடிகர்கள்: தனுஷ், இந்துஜா, எல்லி அவ்ராம், பிரபு, யோகிபாபு; ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்; இசை: யுவன் சங்கர் ராஜா; இயக்கம்: செல்வராகவன்.

செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் வெளியானாலும் கூட, செல்வராகவன், தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இருப்பதால், 'நானே வருவேன்' படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது. 'மயக்கம் என்ன' படத்திற்குப் பிறகு செல்வராகவனும் தனுஷும் இணைந்திருக்கும் படம் இது. 'பொன்னியின் செல்வன்' போன்ற மெகா பட்ஜெட் படத்தை எதிர்த்து களமிறங்கி இருந்தாலும் கூட, படக்குழுவினர் பெரிதாக விளம்பரங்களில் ஈடுபடவில்லை.

இந்தப் படத்தின் கதை இதுதான்: இரட்டையர்களாகப் பிறந்தவர்கள் கதிரும் பிரபுவும். இவர்களில் கதிர், சிறு வயதிலிருந்தே சற்று மாறுபட்ட மனநிலையைக் கொண்டவராக இருக்கிறார். அதைக்கண்டிக்கும் தந்தையையே கொலை செய்கிறார் கதிர். இதனால், கதிரை கைவிட்டுவிட்டு, பிரபுவை மட்டும் அழைத்துக் கொண்டு செல்கிறார் அவர்களது தாய். இருபது வருடங்களுக்குப் பிறகு பிரபு (தனுஷ்), திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிரபுவின் மகள் சத்யா உடம்பில் ஒரு பேய் புகுந்து கொள்கிறது. சத்யா உடம்பை விட்டு வெளியேற வேண்டுமென்றால் ஒரு கொலையைச் செய்யச் சொல்கிறது. யாரை கொல்லச் சொல்கிறது, எதற்காகக் கொல்லச் சொல்கிறது, கதிருக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நானே வருவேன்

"இரண்டாம் பாதி சொதப்பலா?"

படத்தின் முதல் பாதி மிகச் சிறப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் சொதப்பியிருக்கிறார்கள் என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.

"இந்தப் படத்தைப் பற்றி எதுவுமே தெரிந்துகொள்ளாமல் போய் அமர்வதுதான் சிறப்பாக இருக்கும். அப்போதுதான் நானே வருவேன் உங்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை அளிக்கும். இந்தப் படத்தை தனுஷும் செல்வராகவனும் ஏன் பிரமோட் செய்யவில்லை என்பதும் அப்போதுதான் புரியும். ஒரு சைக்கோ திரைப்படத்தை நாம் எதிர்பார்த்துச் செல்லும்போது, ஓர் அட்டகாசமான திகில் அம்சங்களைத் தருகிறார் செல்வராகவன். இந்தப் படத்தின் முதல் பாதியை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார் செல்வராகவன்.

நானே வருவேன்

ஆனால், இரண்டாம் பாதியில் முக்கியமான விஷயம் வெளிப்பட்ட பிறகு, படம் ஏமாற்றமளிக்கிறது. படத்தின் முதல் பாதியை ஒருவரும் பிற்பாதியை வேறொருவரும் எழுதியதைப் போல இருக்கிறது. படத்தின் இரண்டாம்பாதி ஒரு வழக்கமான பாதையில் சென்று திருப்தியளிக்காத உச்சகட்டத்தில் முடிவடைகிறது. பழைய யோசனைகளை மிக மோசமாக படமாக்கி, லாஜிக்கே இல்லாமல் படத்தை முடித்திருக்கிறார் செல்வராகவன்.

மூழ்கும் இந்தக் கப்பலைக் காப்பாற்ற தனுஷ் கடுமையாக முயற்சி செய்கிறார். தனது திறமையான நடிப்பால், இரண்டு பாத்திரங்களையும் நன்றாக வேறுபடுத்தி நடித்திருக்கிறார்.

நானே வருவேன் படத்தின் மூலம் சைக்கோ - த்ரில்லர் பட வகை திரைப்படத்தை முயற்சித்திருக்கிறார் தனுஷ். ஆனால், இரண்டாம் பாதியில் சொதப்பியிருப்பதால், ஒரு வீணடிக்கப்பட்ட முயற்சியாகி விட்டது," என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.

காணொளிக் குறிப்பு, நானே வருவேன் - பொதுமக்கள் விமர்சனம்

கேள்விகள் ஏராளம், சுவாரஸ்யம் குறைவு

இந்தியா டுடேவின் விமர்சனத்தைப் போலவே, இரண்டாம் பாதி மீது விமர்சனங்களை முன்வைக்கிறது இந்து தமிழ் திசை இணையதளம். நிறைய தர்க்க ரீதியான கேள்விகள் இரண்டாம் பாதியின் திரைக்கதையை சுவாரஸ்யமில்லாமல் வெறும் காட்சிகளாக கடக்க வழிவகுக்கின்றன என்கிறது அந்த இணைய தளம்.

'காஞ்சனா' முதல் 'கான்ஜூரிங்' வரை பார்த்து பழக்கப்பட்ட கதை என்றாலும், பல்வேறு முடிச்சுகளை தன்னுள் அடக்கிவைத்திருக்கும் திரைக்கதையால் படத்தின் முதல் பாதி சுவாரஸ்யம் நிறைந்த சஸ்பென்ஸுடன் கடக்கிறது. மாஸ் ஆன காட்சிகளின்றி, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நகரும் படம், ஒருபுறம் தந்தை - மகள் பாசத்தையும், மறுபுறம் மகளை மீட்கமுடியாமல் தவிக்கும் தந்தையின் கையறு நிலையையும், கூடவே சில அமானுஷ்ய காட்சிகளையும் பதிவு செய்வதன் மூலம் பார்வையாளர்களின் ஆவலை முதல் பாதி தூண்டுகிறது. குறிப்பாக, இடைவேளையில் வரும் திருப்பத்தைக் 'செல்வா சார் சம்பவம்' என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

நானே வருவேன்

பட மூலாதாரம், @theVcreations/twitter

கதையின் மையக்கருவைச் சுற்றி எழுப்பப்படும் காரணம், பலவீனமாக எழுதப்பட்டுள்ளதுடன் செயற்கைத் தன்மையோடு இருப்பதால் அதையொட்டி நடக்கும் சம்பவங்கள் பெரிய அளவில் நம்மை திரையுடன் ஒட்டவிடுவதில்லை. நிறைய தர்க்க ரீதியான கேள்விகள் இரண்டாம் பாதியின் திரைக்கதையை சுவாரஸ்யமில்லாமல் வெறும் காட்சிகளாக கடக்க வழிவகுக்கின்றன.

மொத்தத்தில் சஸ்பென்ஸுடன் ஹாரர் - த்ரில்லர் பாணியில் முதல் பாதி சுவாரஸ்யப்படுத்தினாலும், லாஜிக் பிரச்சனைகளாலும் பலவீனமான திரைக்கதையாலும் 'நானே வருவேன்' இரண்டாம் பாதி பெரிய அளவில் கைகொடுக்கவில்லை" என்கிறது இந்து தமிழ் திசை.

காணொளிக் குறிப்பு, நானே வருவேன் - சினிமா விமர்சனம்

நீண்ட ஃபிளாஷ்பேக்

"இந்தப் படத்தின் ஆரம்பகட்டக் காட்சிகளை அவருடைய முந்தைய படமான நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு முற்றிலும் மாறான வகையில் 'மினிமலிச' பாணியில் இயக்கியிருக்கிறார் செல்வராகவன். இருள் அதிகமிருக்கும் வகையில் செய்யப்பட்ட ஒளியமைப்பு, மிகக் குறைவான கதாபாத்திரங்கள், அச்சமூட்டும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ஆகியவையெல்லாம் சேர்ந்து ஒரு அச்ச உணர்வை நீட்டிக்கச் செய்கின்றன. நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீரியஸ் ஆகும்போது, இவை உச்சகட்டத்தை அடைகின்றன. இடைவேளை வரும்போது இயக்குனர் நம்மை சீட் நுனியில் உட்கார வைக்கிறார்.

இரண்டாம் பாதியும் இதேபோல இருக்குமென எதிர்பார்க்கும்போது, குறிப்பாக கதிர் கதாபாத்திரம் திரும்பிவந்த பிறகு, படத்தின் தீவிரம் குறைகிறது. செல்வராகவனின் உலகத்திலிருந்து ஒரு சைக்கோ கொலைகாரனின் உலகத்திற்குச் செல்கிறோம். அதற்குப் பிறகான சம்பவங்கள் எவ்வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தாமல், வழக்கமான பாணியில் நகர்கின்றன. பிறகு, கதிர் கதாபாத்திரத்திற்கான நீண்ட ஃப்ளாஷ் பேக் வருகிறது. அதற்குப் பிறகு எவ்வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தாத உச்சகட்ட காட்சி வருகிறது" என விமர்சித்திருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இணையதளம்.

பெரும்பாலான ஊடகங்கள், இந்தப் படத்தின் முதல் பாதியை வெகுவாகப் புகழந்துள்ள நிலையில், இரண்டாம் பாதி ஏமாற்றமளிப்பதாகவே கூறுகின்றன.

காணொளிக் குறிப்பு, பொன்னியின் செல்வன்: குந்தவையின் பழையாறை நகரத்தின் இன்றைய நிலை தெரியுமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: