You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரியங்கா சோப்ரா பிறந்தநாள்: விஜயுடன் நடித்த 'தமிழன்' படம் தொடங்கி ஹாலிவுட் வரை
பிரியங்கா சோப்ரா. இந்தியத் திரை உலகில் தமது பயணத்தைத் தொடக்கி சர்வதேச அளவில் வெற்றியும் புகழும் பெற்ற மிகச்சில கலைஞர்களில் இவரும் ஒருவர். இன்று அவருக்கு 40ஆவது பிறந்தநாள்.
உலகில் அதிகம் அறியப்பட்ட பெண்களில் ஒருவராக மட்டுமல்லாது, உலகில் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராகவும் இருக்கும் பிரியங்கா சோப்ரா குறித்த சில சுவாரசிய தகவல்கள் இதோ.
2000ஆவது ஆண்டில் பிரியங்கா சோப்ரா உலக அழகிப் பட்டமான 'மிஸ் வோர்ல்டு' பட்டத்தை வென்றபோது அவருக்கு வயது வெறும் 18 மட்டுமே.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2002இல் ஒரு இந்தி திரைப்படம் மூலம் அவர் திரையுலகுக்கு அறிமுகமாக வேண்டியிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அவர் அந்த இந்திப்படத்தில் நடிக்காததால், விஜயுடன் இணைந்து நடித்த தமிழ் திரைப்படமான 'தமிழன்' அவருக்கு முதல் படமானது.
அதன்பின்னர் பெரும்பாலும் அவருக்கு ஏறுமுகம்தான்.
ரன்பூர் கபூருடன் இணைந்து பர்ஃபி, ரன்வீர் சிங்குடன் இணைந்து பாஜிராவ் மஸ்தானி, 'தி ஸ்கை இஸ் பிங்க்' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட மேரி கோம் திரைப்படத்தில் நடித்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றார்.
திரைத்துறை மட்டுமே இவருக்கு இவ்வளவு பெயர் வரக் காரணம் அல்ல.
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப்-க்கு இந்தியாவுக்கான நல்லெண்ணத் தூதுவராக 2010ஆம் ஆண்டும், உலகுக்கான நல்லெண்ணத் தூதுவராக 2016ஆம் ஆண்டும் இருந்தார்.
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் ஒன்றுக்கு இரண்டு முறை, அதாவது 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றார் பிரியங்கா சோப்ரா. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்தியப் பெண்ணும் இவர்தான்.
டைம்ஸ் பத்திரிகை 2019இல் வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள் பட்டியலிலும் இடம் பெற்றார் பிரியங்கா சோப்ரா.
இந்தியாவின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது, பத்மஸ்ரீ உள்பட பல விருதுகளை வென்றவர் பிரியங்கா சோப்ரா.
பே வாட்ச், தி மேட்ரிக்ஸ் ரிசரக்ஷன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களிலும், குவாண்டிகோ எனும் பிரபலமான திரில்லர் தொலைக்காட்சி தொடரிலும் நடித்து மேற்கத்திய ரசிகர்களின் உள்ளங்களை அள்ளிய பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக் ஜோனசை 2018இல் மணந்தார்.
தம்மைவிட 10 வயது இளையவரை பிரியங்கா சோப்ரா காதலித்து திருமணம் செய்தது பலரின் புருவங்களையும் உயர்த்தியது.
இந்த இணை இந்த ஆண்டுதான் தங்கள் பெண் குழந்தையை வாடகைத் தாய் மூலம் வரவேற்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்