You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கார்த்தி பிறந்தநாள்: மணிரத்தினம் உதவி இயக்குநரில் இருந்து 'பொன்னியின் செல்வன்' கதாநாயகன் வரை
நடிகர் கார்த்தி சினிமாவை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பரிசோதனை களங்களையும் கமர்ஷியல் வெற்றி படங்களையும் கொடுக்க தவறவில்லை. 'பருத்திவீரன்' படத்தில் ஆரம்பித்த பயணம் 'பொன்னியின் செல்வன்' வந்தியத்தேவனாக நீள்கிறது.
மே 25ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
'பொன்னியின் செல்வன்' தவிர்த்து 'விருமன்', இரட்டை வேடத்தில் நடிக்கும் 'சர்தார்' ஆகிய படங்கள் கைவசம் இருக்கிறது. இதில் நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு 'விருமன்' படத்தின் முதல் பாடலை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.
அவர் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் இதோ.
1. இயக்குநர் மணிரத்தினத்திடம் கார்த்தி உதவி இயக்குநராக இருந்தார். கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமா ஆசையில் அமெரிக்கா படிக்க சென்றவர் தன் சினிமா கனவை வீட்டில் சொல்லியே மீண்டும் இந்தியா வந்திருக்கிறார். 'ஆயுத எழுத்து' பட சமயத்தில் அந்த படத்தில் நடிகர் சித்தார்த்தின் கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க கார்த்திக்குதான் வாய்ப்பு வந்தது. ஆனால், அப்போது அந்த வாய்ப்பை மறுத்தவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன். 'ஒரு படம் நடித்து தான் பார்ப்போமே' என உடல் எடை குறைத்து, நடனம், சண்டை பயிற்சி என தயாரானது 'பருத்திவீரன்' படத்திற்காக.
2. கார்த்தி கதை நாயகனாக அறிமுகமான 'பருத்திவீரன்' திரைப்படம் அவருக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவுக்குமே முக்கியமானதொரு படமாக அமைந்தது. ஏற்றி கட்டிய லுங்கியும் பரட்டை தலையும் தாடி மீசையும் என அசல் மண்ணின் நாயகனாக வந்த கார்த்திக்கு அறிமுக படத்திலேயே அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் பல விருதுகளும் கிடைத்தன. படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், தன்னுடைய முதல் படத்தை மறக்க முடியாததாக மாற்றி கொடுத்த அமீருக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.
3. ''பருத்திவீரன்' ஒரு படம் மட்டும் ஆசைக்கு நடித்து விடலாம். எனக்கு சரிவரவில்லை என்றால் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பி விடலாம்' என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்' என்பார் சிரித்து கொண்டே.
4. "உங்களுக்கு பிடித்த எந்தவொரு விஷயத்தையும் தொடங்குவதற்கு ஓர் அசாத்தியமான தைரியம் தேவைப்படுகிறது. அப்படியான ஒரு துணிச்சலில்தான் நான் நடிக்க வந்தேன். நீங்கள் ஆசைப்பட்ட விஷயத்தை தொடங்கிய பிறகு அதற்கான தகுதியை வளர்த்து கொள்ளுங்கள். இது என் அண்ணா எனக்கு கொடுத்த அறிவுரை. பின்பு வெற்றிக்கான பொறுமை மிக முக்கியம்" என்பார் கார்த்தி.
6. 'பருத்தி வீரன்' படத்தில் தொடங்கி 'ஆயிரத்தில் ஒருவன்', 'பையா', 'காஷ்மோரா', 'மெட்ராஸ்', 'கைதி' என பரிசோதனை கதை களங்களை தேர்ந்தெடுப்பதிலும் புதுமுக இயக்குநர்களை நம்பி படம் நடிப்பதிலும் கார்த்தி எப்போதும் தயங்கியதே இல்லை. அந்த வகையில் 'தோழா', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய திரைப்படங்களின் கதை தனக்கு கேட்டதுமே பிடித்து விட்டது என்பார்.
7. வண்டலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார் கார்த்தி. அவருக்கு உலக நடப்பு தெரிய வேண்டும் என்பதற்காக பேருந்தில்தான் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார் தந்தை சிவக்குமார். அதில் தனது பெரும்பாலான கல்லூரி நாட்களை பல்லவன் பேருந்தில் கழித்ததை தன் நண்பர்களுடனான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் கார்த்தி.
8. சிறுவயதில் கார்த்தி மீது வீட்டில் அனைவருக்கும் அதிக செல்லம் இருந்ததால் அவரை எப்போதும் வம்பிழுக்கும் சேட்டைக்கார அண்ணனாக இருந்திருக்கிறார் நடிகர் சூர்யா. வளர்ந்த பிறகுதான் இருவருக்கும் இடையில் புரிதல் வந்ததாகவும் அதற்கான சம்பவம் ஒன்றையும் நடிகர் சிவக்குமார் பிபிசி தமிழுடன் பகிர்ந்திருக்கிறார். "அப்போது எல்லாம் இ-மெயில் வளர்ந்து வந்த காலம். எனக்குள்ளே தாழ்வு மனப்பான்மை காரணமாக உன்னை வெறுத்து, தம்பியே வேண்டாம் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால், நீ எப்படி அமெரிக்கா தைரியமாக போனாய். நான் விமானத்தில் ஏறினால், அங்கு பாத்ரூமில் போய் அழுதுவிட்டு வருவேனே தவிர அமெரிக்கா போயிருக்க மாட்டேன்' என ஒரு பக்கத்திற்கு அழுது கொண்டே சூர்யா மெயில் அனுப்ப, அண்ணன் என்றால் அது சூர்யாதான் என கார்த்தி பதில் அனுப்பினார்" என்கிறார் சிவக்குமார்.
9. நடிகர் சூர்யா கல்வியில் மாணவர்களுக்கு உதவ 'அகரம் ஃபவுண்டேஷன்' நடத்தி வர தம்பி கார்த்தியோ விவசாயம் மற்றும் உழவர்களுக்கான 'உழவன் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
10. இயக்குநர் மணிரத்தினத்தின் உதவி இயக்குநராக சினிமாவுக்குள் வந்தவருக்கு இப்போது 'காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக அவரது இயக்கத்தில் மீண்டும் நடித்திருக்கிறார். மணிரத்தினத்தின் கனவு படமான 'பொன்னியின் செல்வன்' படத்தின் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. இந்த படத்தின் முதல் பாகம் இந்த வருடம் வெளியாக இருக்கிறது. இதில் கார்த்தி தான் பணிபுரிந்த இயக்குநர்களில் இரண்டாவது முறை கைக்கோர்ப்பது மணிரத்தினத்துடன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்