‘கே.ஜி.எஃப்’, ‘RRR’ பான் இந்தியா படங்களா? எப்போது தொடங்கியது இந்த கலாசாரம்?

ராம் சரண் - ராஜ மௌலி

பட மூலாதாரம், Twitter@RRRMovie

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

'பான் இந்தியா திரைப்படங்கள்' என்ற சொற்றொடர் மீது சமீபத்தில் அதிக கவனம் குவிய தொடங்கி இருக்கிறது. குறிப்பாக கடந்த 2015-ல் வெளியான 'பாகுபலி' திரைப்படம், சமீபத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்', இந்த மாதம் வெளிவர இருக்கும் 'கே.ஜி.எஃப்2' ஆகிய பான் இந்திய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் உருவாகும் இந்த பான் இந்திய படங்களின் கலாசாரம் உண்மையில் எப்போது தொடங்கியது? இந்த படங்களுக்கான அவசியம் என்பது என்ன? அனைத்து முன்னணி கலைஞர்களுக்கும் குறிப்பாக இயக்குநர்கள் நடிகர்களுக்கு இந்த பான் இந்தியா என்பது அழுத்தம் தரும் ஒன்றாக மாறி இருக்கிறதா என்பது போன்ற பல கேள்விகள் இதை சுற்றி உள்ளது.

எப்போது தொடங்கியது இந்த பான் இந்தியா படங்கள்?

பான் இந்தியா படங்கள் என்ற பதமே கடந்த 2015இல் இருந்து தான் அதிகமாக தோன்றியதாக கூறப்படுகிறது. உண்மையில் 1948ஆம் வருடம் வெளியான 'சந்திரலேகா' படம் மூலமாகவே இந்த 'பான் இந்தியா படம்' என்ற சொற்றொடர் என்பது ஆரம்பித்து விட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே சமயத்தில் அத்தனை மொழிகளிலும் அந்த படம் தயாரானது. இந்தியில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் இந்த படம் வரலாறு படைத்தது என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

இதற்கு பிறகான பான் இந்தியா படம் என்றால் அது மணிரத்தினம் இயக்கிய 'ரோஜா', 'பாம்பே' படங்களை சொல்வர். அந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் காஷ்மீர் விவகாரம், முஸ்லிம் தொடர்பான பிரச்னைகளே அனைவரின் கவனத்தை கவர முக்கியம் காரணம் என குறிப்பிடுகிறார்.

இதில் 'சந்திரலேகா' படத்தை தவிர மேலே சொன்ன மற்ற படங்கள் எல்லாம் பிரமாண்டமான அளவுகோலில் வரவில்லை. பின்பு 2010இல் இயக்குநர் ஷங்கர் அந்த பிரமாண்டமான பட்ஜெட்டில் 'எந்திரன்' படத்தை பான் இந்தியாவாக உருவாக்கினார்.

இந்த கதையில் முதலில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்து பின்பு பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானிடம் சென்று அதன் பிறகுதான் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வந்தது. இவையும் நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சனும் இந்த கதையில் நடித்தது பாலிவுட் பக்கம் இந்த படத்திற்கான ஆர்வத்தை அங்கு விதைத்தது. இதன் நீட்சியாகவே, '2.0' படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் களம் இறக்கப்பட்டார்.

இதற்கு முன்பே இயக்குநர் ஷங்கரது 'அந்நியன்' படமும் இந்தியில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. பிறகு 'நான் ஈ' படம் அந்த கதைக்காகவே பான் இந்தியா அளவில் வெற்றி பெற இயக்குநர் இராஜமெளலியின் அடுத்த படமான 'பாகுபலி' கதையும் அந்த வெற்றியை பான் இந்தியா அளவில் தக்க வைத்தது.

பான் இந்தியா படங்களுக்கான திட்டமிடல் எவ்வாறு இருக்கும்?

ஒரு பிராந்திய மக்களுக்கான கதை எனும் போதே சினிமாவுக்கான பட்ஜெட் என்பது பெரிது. பான் இந்தியா படம் எனும் போது கதை, பல மொழி நடிகர்கள், லொகேஷன், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள், புரோமோஷன் என படத்தின் பட்ஜெட் கோடிகளில் பிரம்மாண்டமாக விரிவடையும். உண்மையில் இப்படி கோடிகளை செலவழித்து எடுக்கப்படும் பான் இந்தியா படங்கள் எப்படி திட்டமிடப்படுகின்றன?

இந்த பான் இந்தியா படங்களுக்கான திட்டமிடல் குறித்து விளக்க சமீபத்திய 'ஆர்.ஆர்.ஆர்' மற்றும் 'ராதே ஷ்யாம்' படங்களை உதாரணங்களாக எடுக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன். இந்த படங்களை திட்டமிட்டு எடுக்கப்பட்ட 'Planned PAN India' படங்கள் என்கிறார்.

"'ஆர்ஆர்ஆர்', 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்கள் தெளிவாக திட்டமிட்டு எடுக்கப்பட்டவை. "திட்டமிட்டு எடுக்கப்படும் பான் இந்தியா படங்கள் என்றால் என்ன? கதை, நடிகர்கள், தொழில்நுட்ப குழு படம் எடுத்த முடித்த பிறகு படத்திற்கான புரோமோஷன்கள் என அனைத்தும் திட்டமிட்டு எடுக்க வேண்டும். பான் இந்தியாவுக்கான கதையை அமைக்காமல் ஒரு மொழியில் எடுத்து விட்டு அதே படத்தை மற்ற மொழிகளில் டப் செய்து எடுப்பதை பான் இந்தியா படங்கள் என்றால் ஏற்று கொள்வது கடினம். சில சமயம் அது வெற்றி பெறும், சில சமயம் அது நடக்காமல் போகும். ஏன் பான் இந்தியா படமாக திட்டமிட்டு எடுத்த 'ராதே ஷ்யாம்' தோல்வியை தானே தழுவியது?" என கேள்வி எழுப்புகிறார்.

ராம் சரண் - ராஜ மௌலி - ஜூனியர் என்டிஆர்

பட மூலாதாரம், Twitter@RRRMovie

ஒரு பிராந்திய மக்களுக்கான கதை, நடிகர்கள் என்பதை தாண்டி பான் இந்தியா படமாக விரிவடையும் போது தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அழுத்தம் இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்கிறார். பான் இந்தியா தான் என முடிவெடுத்த பின்பு அதற்கேற்றாற் போல தான் திட்டமிடுவார்கள். அதனால் அந்த அழுத்தம் முறையான திட்டமிடலால் குறையும் என்கிறார் தனஞ்செயன்.

விளம்பர உத்திகள் என்னென்ன?

கோடிகளை கொட்டி எடுக்கப்படும் இது போன்ற பான் இந்தியா படங்களை எப்படி படக்குழு புரோமோட் செய்கிறது, அதற்கான விளம்பர உத்திகள் என்னென்ன என்பது முக்கியமானது. படம் குறித்தான அறிவிப்பில் இருந்து, பூஜை, படத்திற்கான தனி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி படப்பிடிப்பின் சுவாரஸ்யங்கள், புகைப்படங்களை பகிர்வது என இந்த பட்டியலும் அதற்கான உழைப்பும் பெரிது. இது போன்ற பான் இந்தியா படங்களில் நிச்சயம் இந்த தலைமுறை இணையத்தில் ரீல்ஸ், ரிங்க்டோன் என மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்படியான ஒரு வெற்றி பாடல்களையும் வசங்களையும் அமைத்து விடுகிறார்கள். அதற்கு சமீபத்திய ஒரு உதாரணமாக 'புஷ்பா' படத்தின் 'ஓ சொல்றியா' பாடலை சொல்லலாம்.

அது இணையம் மூலமாக உலக அளவிலும் பெரும்பாலானோரால் கவனிக்கப்படும் பாடலாக மாறிவிடுவதும் இந்த படத்திற்கான கவனக்குவிப்பாகவே பார்க்கப்படுகிறது.

"'ஆர்.ஆர்.ஆர்.' படம் டெல்லியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்க்கும் வீரர்கள் என்று சொல்லி இருப்பார்கள். அது பான் இந்தியா படமாக எல்லாரும் ஏற்று கொள்ள முடியும். 'ஆர்.ஆர்.ஆர்.' படக்குழு படம் எத்தனை முறை தள்ளிப்போனாலும் அது குறித்து கவலைப்படாமல், சென்னை, ஹைதராபாத், குஜராத், டெல்லி, மும்பை என இந்தியா முழுவதும் சென்று புரோமோட் செய்தார்கள். அவர்களின் புரோமோஷன் உத்திகளும் பேசப்பட்டது. கதை, நடிகர்கள், டெக்னீஷியன் குழு, புரோமோஷன் என இவை நான்கிலும் நீங்கள் பான் இந்தியா படம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்".

அல்லு அர்ஜூன் / புஷ்பா திரைப்படம்

பட மூலாதாரம், Twitter@PushpaMovie

சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் பான் இந்தியா என்ற வார்த்தையே எரிச்சலூட்டுவதாக கூறியிருந்ததை பற்றி கேட்ட போது, "துல்கரின் அந்த கருத்து பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. மலையாளத்தில் ஒரு படம் எடுக்கப்பட்டு அது மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றால் அந்த மலையாளம் படம் குறித்து பேசுங்கள். அதை பான் இந்தியா படம் என சொல்வது பொருத்தமாக இருக்காது என்பதைதான் அப்படி சொன்னார்".

உண்மையில் இது போன்ற பான் இந்தியா படங்களை அதிகம் உருவாக்குவதில் டோலிவுட் தான் முன்னணியில் இருப்பது போன்ற பிம்பம் உண்மையா?

"தமிழில் நாமுமே 'எந்திரன்', 'அந்நியன்' போன்ற படங்களை உருவாக்கி உள்ளோமே! ஆனால், தெலுங்கில் அந்த பிரம்மாண்டத்தின் அளவு இன்னும் பெரிதாக இருப்பதால் அது போன்ற பிம்பம் இருக்கலாம்! மேலும், தமிழில் அதிக எண்ணிக்கையில் பான் இந்தியா படங்கள் வெளியாக முன்னணி நடிகர்களும் முன் வர வேண்டும். மேலும், இது போன்ற பான் இந்தியா படங்களை உருவாக்கும் போது நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்குமான மார்க்கெட்டும் விரிவடையும்" என்கிறார், தனஞ்செயன்.

பான் இந்தியா படம் சினிமா கலைஞர்களுக்கான அழுத்தமாக மாறி இருக்கிறதா?

'பாகுபலி' திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்ற பிறகு நடிகர் பிரபாஸ்ஸின் அடுத்தடுத்த படங்களான 'சாகோ', 'ராதே ஷ்யாம்' போன்றவையும் பான் இந்தியாவாகவே உருவாகின. ஆனால், அவை எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை எனும் போது இது போன்ற படத்திற்கு பின்பு அடுத்தடுத்து பான் இந்தியா படங்களாக நடிக்க வேண்டும் என்று அழுத்தமாக மாறி இருக்கிறதா?

பான் இந்தியா என்ற சொல் மீதே தனக்கு பெரிதாக உடன்பாடு இல்லை என்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. கதை அனைத்து பகுதி மக்களுக்கும் பிடித்ததாக இருந்தால் போதுமானது. சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படம் ஆந்திர பகுதியில் இருந்த தமிழ் தெலுங்கு பேசும் ஒரு பகுதி மக்களுடைய கதையை அனைத்து பகுதிகளுக்கும் சொல்ல விரும்பி பான் இந்தியா படமாக எடுத்தது. அதை விடுத்து படத்திற்கான பூஜை போடும்போது மட்டும் மற்ற மொழிகளை சேர்ப்பது மட்டும் கூடாது. பான் இந்தியா படங்களுக்கான மெனக்கெடல்கள் அதிகம். 'மாநாடு' படமே நாங்கள் பான் இந்தியாவாக தான் எடுக்க விரும்பினோம். ஆனால், பட்ஜெட் காரணமாக அது சாத்தியப்படாமல் ஆகிவிட்டது.

ஜூனியர் என்டிஆர் - ராஜமௌலி

பட மூலாதாரம், Twitter@RRRMovie

மற்றபடி, பான் இந்தியா என்பது அழுத்தமாக மாறவில்லை. ரசிகர்களுக்கு இப்போது ஓடிடி களம் இன்னும் பெரிதான வாய்ப்பை திறந்து விட்டிருக்கிறது. அந்த சவாலைத்தான் இப்போது இயக்குநர்களும் நடிகர்களும் சமாளிக்க வேண்டும் என்கிறார் வெங்கட்பிரபு.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: