சமந்தா - நாகசைதன்யா விவகாரத்து: "புரளிகளும், மணவிலக்கும் என்னை மனதளவில் பாதித்துள்ளன"

சமந்தா

பட மூலாதாரம், FACEBOOK/CHAY.AKKINENI

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடனான திருமண உறவை முறித்து கொள்வதாக அறிவித்த பிறகு, சமூக வலைதள பக்கத்தில் தன் மீது தவறாக பரப்பப்படும் வதந்திகள் குறித்தும், மணவிலக்கு ஏற்படுத்தியுள்ள வலி குறித்தும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தவறான வதந்திகள்

"என்னுடைய தனிப்பட்ட பிரச்னை மீது நீங்கள் அனைவரும் காட்டிய அக்கறை என்னை நெகிழ செய்தது. என் மீது காட்டிய கருணைக்கு நன்றி. அதேபோல, இந்த விவாகரத்து அறிவிப்புக்கு பின்னால் என்னை சுற்றி நிறைய வதந்திகளும் வலம் வருகின்றன. நான் பிறருடன் தவறான உறவில் இருக்கிறேன், குழந்தை வேண்டாம் என மறுத்தேன், சந்தர்ப்பவாதியாக இருந்தேன், கருக்கலைப்பு செய்திருக்கிறேன் என இப்படி ஏராளாமான வதந்திகள் வந்து கொண்டே இருந்தன.

மணவிலக்கு என்பது உண்மையில் மனதளவில் பாதிக்கக்கூடிய ஒரு விஷயம். இந்த வலியில் இருந்து நான் மீள்வதற்கு சிறிது காலம் ஆகும். மேலே சொன்னபடி, தனிப்பட்ட முறையில் என் மீதான தவறான வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், நான் ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். இப்போது என் வாழ்க்கையில் நடந்த விஷயமோ அல்லது வேறு எதுவோ என்னை உடைக்க முடியாது," என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சமந்தா.

மணவிலக்கு அறிவித்த சமந்தா- நாக சைதன்யா

கடந்த வாரம் சனிக்கிழமை அன்று சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்திருந்தனர். இதற்கு முன்பே சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'சமந்தா அக்கினேனி' என்ற பெயரை 'S' என மாற்றினார். இதனால், இருவருக்கும் இடையில் மனக்கசப்பு, மணவிலக்கு கோரி விண்ணப்பித்து இருக்கிறார்கள் என தகவல்கள் வெளிவர ஆரம்பித்த போது அப்போது இருவருமே இது குறித்து எதுவும் சொல்லவில்லை.

சமந்தா அறிவிப்பு

இந்த நிலையில்தான், கடந்த வாரம் "பல உரையாடல்கள் மற்றும் யோசனைகளுக்கு பிறகு நானும் சாயும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் அழகான நட்பு உள்ளது. அது இனியும் தொடரும்" என அதில் இருவருமே குறிப்பிட்டு இருந்தார்கள்.

விவாகரத்து குறித்து நாகர்ஜுனா

இந்த மணவிலக்கு குறித்து நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

"சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையில் நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதனை நான் கனத்த இயத்துடன் சொல்கிறேன். கணவன் மனைவியாக இவர்கள் இருவருக்குள்ளும் நடந்தது தனிப்பட்ட விஷயம். எப்போதுமே இருவரும் எங்களுடைய அன்புக்குரியவர்கள்தான். சமந்தா எங்கள் குடும்பத்தில் இருந்த மகிழ்ச்சியான தருணங்களை எப்போதுமே மறக்க மாட்டோம். இருவருக்கும் இதனை கடந்து வர கடவுள் வலிமையை தரட்டும்," என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை அவருடைய மனைவியும், நடிகையுமான அமலாவும் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஜீவனாம்ச தொகையை மறுத்தாரா சமந்தா?

மணவிலக்கு குறித்த அறிவிப்பு வெளியானதும், அதற்கு காரணம் என்று கூறி நிறைய புரளிகள் சமூக வலைத்தளங்களில் கிளம்பின. 'தி ஃபேமிலிமேன்' தொடரில் நடித்ததுதான் விவாகரத்துக்கு காரணம் எனவும், குழந்தை வேண்டாம் என சமந்தா சொன்னார் எனவும் பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வலம் வந்தன. அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாகதான் சமந்தா தற்போது தன்னுடைய சமூக வலைதளப்பக்கங்களில் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவருக்கும் நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா இருவருக்கும் கடந்த 2017-ல் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் பிசியாக படங்களில் நடித்து வந்தனர்.

'பாணா காத்தாடி' திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமான சமந்தா 'நீ தானே என் பொன்வசந்தம்', 'மெர்சல்', 'சூப்பர் டீலக்ஸ்' 'தெறி' உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

தெலுங்கில் சமந்தாவின் அறிமுகமே 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ரீமேக்கில் நாகசைதன்யாவுடன்தான். அதன் பிறகு சில படங்களில் ஒன்றாக நடித்தவர்களின் நட்பு காதல் ஆனது. 2017-ம் ஆண்டு இருவருக்கும் இந்து- கிறித்துவ முறைப்படி கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள திருமணம் நடைபெற்றது.

நேற்று, சமந்தா - நாக சைதன்யாவின் நான்காவது திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் சமந்தா பதிவிட்ட புகைப்படமும், அதற்கான கேப்ஷனுமே சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும், நாகர்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு ஜீவனாம்ச தொகையாக பல கோடி ரூபாய் கொடுக்க முன்வந்ததாகவும், தான் சுயமாக சம்பாதிப்பதால் அந்த தொகை தனக்கு வேண்டாம் என சமந்தா மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதன் உண்மை தன்மை குறித்து உறுதி செய்ய முடியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :