நவரசா: விமர்சனம்

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

நடிகர்கள்: விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ரேவதி, யோகி பாபு, நெடுமுடி வேணு, ரம்யா நம்பீசன், அரவிந்த் சாமி, பிரசன்னா, அதிதி பாலன், ரோஹினி, தில்லி கணேஷ், பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், ரித்விகா, ரமேஷ் திலக், சித்தார்த், பார்வதி திருவோட்டு, அம்மு அபிராமி, அதர்வா, அஞ்சலி, கிஷோர், சூர்யா, பிரயாகா மார்டின்; இயக்குநர்கள்: பிஜோய் நம்பியார், ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், வசந்த், கார்த்திக் சுப்புராஜ், அரவிந்த் சாமி, ரதீந்திரன் ஆர். பிரசாத், கே.எம். சர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன்.

காதல், கோபம், நகைச்சுவை, அருவருப்பு போன்ற மனிதனின் ஒன்பது உணர்வுகளை எடுத்துக்கொண்டு, அவற்றை வெளிப்படுத்தும் ஒன்பது குறும்படங்களின் தொகுப்பே 'நவரசா'.

இந்தத் தொடரின் முதல் படம் எதிரி. கருணையை அடிப்படையாகக் கொண்ட படம் என டைட்டில் சொல்கிறது. தன் அண்ணனின் மரணத்திற்கு காரணமானவனை, தம்பி கொலைசெய்துவிட்டு, கருணையை எதிர்நோக்குவதுதான் கதை. ஆனால், படம் முடிவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்புவரை, படம் எதை நோக்கிச் செல்கிறது என்பதே புரியவில்லை. ஆங்காங்கே தத்துவ உரையாடல்கள் வேறு. முடிந்த பிறகும் எந்தவித நிறைவையும் ஏற்படுத்தாத படமாக அமைந்திருக்கிறது இந்த 'எதிரி'. இந்தத் தொடரிலேயே மிகச் சுமாரான படமாக இருக்கும்போலிருக்கிறது என்று தோன்றவைக்கிறது.

அடுத்த படம், Summer of 92. பள்ளிக்கூடத்தில் சரியாகப் படிக்காத மாணவன், பெரிய நடிகராகி தன் சொந்த ஊருக்கு வந்து தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதுதான் கதை. இதில் உள்ள சில ரசிக்கவைக்கும் காட்சிகளால் பரவாயில்லை என்று சொல்லலாம். யோகிபாபுவும் ரம்யா நம்பீசனும் படத்தை தொடர்ந்து பார்க்க வைக்கிறார்கள்.

மூன்றாவது படம், Project Agni. கடந்த காலத்திற்குச் செல்லும் முறையைக் கண்டுபிடிக்கும் ஒருவன், அங்கே செய்த தவறால் தன் நிகழ்காலத்தைத் தொலைத்துவிடுகிறான். இதனால், அந்த ரகசியத்தை தன் நண்பனிடம் கொடுத்துவிட்டு சாக நினைக்கையில் ஒரு எதிர்பாராத திருப்பம். இந்தப் படம், சற்று சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது. ஆனால், படத்தின் பெரும்பகுதி வசனங்கள் ஆங்கிலத்திலேயே அமைந்திருப்பது சறுக்கல். ஆனால், படம் நெடுக சுவாரஸ்யத்தைத் தக்கவைத்திருக்கிறார்கள்.

நான்காவது படம், பாயாசம். அருவெருப்பை அடிப்படையாகக் கொண்ட படம். தி.ஜாவின் கதையைப் படமாக்கியிருக்கிறார் வசந்த். தன் குடும்பத்தில் நல்லது நடக்கவில்லையென்பதால், தன் அண்ணன் மகனின் குடும்பத்திலும் யாரும் சந்தோஷமாக இருக்கக்கூடாது என நினைக்கும் ஒரு மனிதனின் கதை. ஒட்டுமொத்தத் தொடரிலும் சிறந்த படமென்றால் இந்தப் படத்தைச் சொல்லலாம். திரைக்கதை, நடிப்பு எல்லாவற்றிலும் பிற படங்களைவிட மேம்பட்டு நிற்கும் குறும்படம் இது.

ஐந்தாவது படம், Peace. ஈழத்தில் ஒரு போர்ச் சூழலில் நாய் ஒன்றைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரைக் கொடுக்கும் வீரனின் கதை. இதுவும் முழுமையில்லாத, அமெச்சூரான கதை. பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன் போன்றவர்கள் இருந்தாலும் எவ்விதத்திலும் வசீகரிக்காமல் கடந்துசெல்கிறது படம்.

ஆறாவது படம். ரௌத்திரம். அரவிந்த் சாமி இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையுடன் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தின் கதை மிகப் பழையதாக இருந்தாலும் திரைக்கதை மூலம் ஆச்சரியத்தை அளிக்கிறது. தங்கள் தாயை வேறொரு ஆணுடன் பார்த்துவிட்ட குழந்தைகளின் வெவ்வேறு விதமான கோபங்கள்தான் படம். பரவாயில்லை ரகம்.

ஏழாவது படம், இன்மை. சொத்துக்காக பணக்காரர் ஒருவரைக் கல்யாணம் செய்துகொண்டு, குட்டிச்சாத்தான் மூலம் சாகடிக்கும் பெண்ணுக்கு, தண்டனை கிடைக்கிறது. அது எப்படி நடக்கிறது என்பதை இஸ்லாமியப் பின்னணியில் சொல்லியிருக்கிறார் ரதீந்திரன். இதுவும் ஒரு சுவாரஸ்யமான படம்தான் என்றாலும், படம் மெதுவாக நகர்வது ஒரு பலவீனம்.

எட்டாவது படம், துணிந்த பின். கதாநாயகன் காட்டுக்குள் நக்சலைட்டுகளை வேட்டையாடச் செல்லும் சிறப்பு அதிரடிப் படையின் வீரன். ஒரு நக்சலைட்டை உயிரோடு பிடித்துவரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. கதை, திரைக்கதை, படமாக்கம் எல்லாமே இந்தப் படத்தில் சிக்கலாக இருக்கிறது. நக்சலைட்டைப் பிடித்துவந்து, கடைசியில் கோட்டைவிடுகிறார் கதாநாயகன். முன்பே தப்பிக்கவிட்டிருந்தால், நாமும் தப்பியிருக்கலாமே என்று தோன்றுகிறது.

ஒன்பதாவது படம், கிடார் கம்பி மேலே நின்று. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். சுமார் முக்கால் மணி நேரம் நீளும் இந்தப் படத்தின் பெரும் பகுதி பாடல்களிலேயே கழிகிறது. மீதமிருக்கும் படத்தில் கதாநாயகன் பைக்கில் கதாநாயகியை அழைத்துச் செல்கிறார் (அப்போதும் பின்னணியில் பாடல் ஒலிக்காமலா போய்விடும்?). ஒரு காதல் உருவாவதை மிக செயற்கையாகக் காட்டி முடித்திருக்கிறார் கௌதம். இந்தத் தொடரின் முதல் படமான 'எதிரி'யைப் பார்க்கும்போது, இந்தத் தொடரிலேயே சுமாரான படம் என்று தோன்றியதல்லவா? இந்தப் படத்தை பார்த்தவுடன் அந்த எண்ணம் மாறிவிடும்.

இந்த ஒன்பது குறும்படங்களும் சேர்ந்து சுமார் நான்கே முக்கால் மணி நேரத்திற்கு ஓடுகின்றன. இந்த ஒன்பது படங்களில் பாயாசம், இன்மை, Summer of 92, Project Agni, ரௌத்திரம் ஆகிய படங்கள் பரவாயில்லை என்று சொல்லலாம். மீதப் படங்கள் பெரும் ஏமாற்றமளிக்கின்றன.

எல்லாப் படங்களிலுமே மிகத் திறமையான நடிகர்கள், இசையமைப்பாளர்கள், கதாநாயகர்கள், டெக்னீஷியன்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால், கதை, திரைக்கதையில் கோட்டைவிட்டிருப்பதால் படங்கள் சொதப்பியிருக்கின்றன. இவற்றில் பல படங்களை இயல்பான வேகத்தில், நகர்த்தினால், வெறும் 10 நிமிடங்களுக்கு உரிய கதையை மட்டுமே கொண்டிருக்கின்றன.

ஆகவே, அவை ஒரு குறும்படமாக முழுமைபெறாமல், ஒரு திரைப்படத்தின் சில காட்சிகளைப் போல கடந்துசெல்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :