You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பீஸ்ட்', 'வலிமை', 'டி43'…மீண்டும் தொடங்கிய சினிமா படப்பிடிப்புகள் - புதிய தகவல்கள்
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
கொரோனா முதல் அலை முடிந்து, இரண்டாம் அலை எதிர்கொண்டு, மூன்றாம் அலைக்கு மக்கள் தயாராகி கொண்டிருக்கும் இந்த வேளையில் இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்து சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்புகள் கடந்த மாத இறுதியிலேயே சென்னையில் தொடங்கிய நிலையில், இந்த மாதத்திலிருந்து சினிமா படப்பிடிப்புகளும் ஆரம்பித்திருக்கின்றன.
இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு, படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் (Post Production) தொடங்கப்பட்டுள்ளன. என்னென்ன படங்கள், அவற்றில் என்ன அப்டேட்? என அலசலாம்.
பீஸ்ட்
'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' படங்களுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படம் 'பீஸ்ட்'. நடிகர் விஜய்யின் 65-வது படத்தில் ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன், சுதா கொங்கரா, மகிழ்திருமேனி என பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட நெல்சன் திலீப்குமார்தான் இயக்குநர் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படம் மார்ச் மாதம் வெளியாவதாக அப்போது அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால், அந்த படத்திற்கான வெளியீட்டு வேலையை முடித்து விட்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 'பீஸ்ட்' பட வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கொரோனா சூழலால் 'டாக்டர்' வெளியீடு தள்ளிப்போக, ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது ஓட்டினை பதிவு செய்த கையோடு நடிகர் விஜய் மற்றும் 'பீஸ்ட்' படக்குழு படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றது. அங்கு சண்டைக்காட்சிகள் உள்ளிட்ட சில முக்கிய காட்சிகள் படமாக்க திட்டமிட்டிருந்த வேலையில், காலநிலை காரணமாக முழுதாக 5 நாட்கள் மட்டுமே முதல் கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது.
தற்போது இந்த கொரோனா தளர்வுகளுக்கு பின்பு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கதாநாயகி பூஜா ஹெக்டேவுடன் இன்று சென்னையில் தொடங்கியுள்ள இந்த படப்பிடிப்பு, 20 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. பாடல், அதிரடி சண்டை காட்சிகளும் இடம் பெறும் வகையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இருக்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கு முன்பே பூஜா ஹெக்டே தனது சமூக வலைதள பக்கங்களில் 'பீஸ்ட்' படத்தின் பாடல் படப்பிடிப்புக்காக நடன ஒத்திகையில் இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடத்தில் படத்தை வெளியிட திட்டம் இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
வலிமை
நடிகர் அஜித்தின் 60வது படமான 'வலிமை'-க்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவரது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. கொரோனா சூழல் காரணமாக கடந்த வருடத்தில் இருந்தே படத்தின் வெளியீடு தள்ளி போய்கொண்டே இருக்கிறது. 'வலிமை' அப்டேட் வேண்டும் என அரசியல் தலைவர்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் வரை ரசிகர்கள் கேட்க சமூக வலைதளங்களில் 'வலிமை அப்டேட்' ட்ரெண்ட் ஆனது.
'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பிறகு அஜீத்துடன் இரண்டாவது முறை இணைகிறார் இயக்குநர் ஹெச். வினோத். 'வலிமை' படத்தில் போலீஸ் அதிகாரி சத்யமூர்த்தி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் அஜீத்.
ஆக்ஷன், குடும்ப செண்டிமெண்ட் என அஜீத் ரசிகர்களுக்கான படமாக இது இருக்கும் என்கிறது படக்குழு. ஹைதராபாத், சென்னை என மாறி மாறி நடந்த படப்பிடிப்பில் இன்னும் சில நாட்களுக்கான படப்பிடிப்பு இருக்கிறதாம்.
இந்த மாதம் அந்த பணிகளும் முழுவீச்சில் முடித்து, அஜீத் ரசிகர்களுக்கான விருந்தாக மோஷன் போஸ்டருடன் முதல் பார்வை வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டிருக்கிறது. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. அதிரடியான அறிமுக பாடல், அம்மா செண்டிமெண்ட் பாடல் என அஜித் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடும்படி பாடல்கள் இருக்கும் என்று சொல்கிறார் யுவன்.
'டி43'
தமிழ், தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் படங்கள் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் 'தி கிரேமேன்' ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தனுஷ் அதன் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்தார். படப்பிடிப்பு முழுவதுமாக முடிய இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை திரும்பியிருந்தார் தனுஷ். 'தி கிரேமேன்' படப்பிடிப்பிற்காக செல்வதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதமே கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிக்கும் 'டி43' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்திருந்தது. தனுஷ் இல்லாத மற்ற நடிகர்களுக்கான படப்பிடிப்பு இரண்டாம் கட்டமாக நடந்து முடிய, தற்போது நடக்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷ் பங்கேற்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்து இருந்தது.
இதனையடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியிருக்கும் 'நானே வருவேன்' படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. இதுமட்டுமில்லாமல், பாலிவுட் படமான 'அந்தரங்கிரே', சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம், தெலுங்கில் இயக்குநர் வம்சியுடன் படம், மாரி செல்வராஜூடன் மீண்டும் ஒரு படம், 'ஆயிரத்தில் ஒருவன்2' என பல படங்கள் அடுத்தடுத்து தனுஷ் கைவசம் இருக்கிறது.
'சூர்யா 40'
பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யாவின் 40-வது படமாக உருவாகி கொண்டிருக்கிறது 'சூர்யா 40'. குடும்ப செண்டிமெண்ட் பாணியில் உருவாகும் இந்த படத்தில் சூர்யா ரசிகர்களுக்கான ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும் என்பது படம் வெளியிட்ட முதல் பார்வையில் உறுதியானது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்தான செய்தியை வெளியிட்டிருந்தார்.
படம் 35% காட்சிகளுடன் முடிந்துவிட்டதாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்பு பொதுமுடக்க தளர்வுகளுக்கு பிறகு தொடங்கும் எனவும், படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று படத்தலைப்பு அறிவிப்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
'சியான் 60'
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ், வாணி போஜன், சிம்ரன் நடிக்கும் படம் 'சியான்60'. கேங்க்ஸ்டர் பாணியில் உருவாகும் இந்த கதைக்கான திரைக்கதை பணியில், இந்த பொதுமுடக்க காலத்தில் இருந்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். நடிகர் விக்ரமின் 60வது படமான இதன் படப்பிடிப்பு இந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
'மாநாடு'
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலரும் நடிக்கும் படம் 'மாநாடு'. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் ஒரு சண்டைக்காட்சி (Flight Fight Sequence) மட்டுமே மீதமிருந்தது. இதற்கான அனுமதி ஓசூரில் கிடைக்க படக்குழு தற்போது அந்த படப்பிடிப்பில் உள்ளனர். இது முடிந்த பின்னர் படத்திற்கு பிறகான பணிகள் விரைவில் முடித்து அக்டோபர் அல்லது தியேட்டர் திறப்பை பொருத்து தியேட்டரில் வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டபோது தெரிவித்திருந்தார்.
இவை தவிர, படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்த நிலையில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த', படப்பிடிப்பு தொடங்கும் நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன் 2', 'விக்ரம்', இயக்குநர் மணிரத்னமின் 'பொன்னியின் செல்வன்', படப்பிடிப்பு முடிந்த 'டாக்டர்', 'அயலான்', 'கோப்ரா', 'தலைவி' 'சார்பட்டா பரம்பரை', 'கடைசி விவசாயி', 'துக்ளக் தர்பார்' என பெரிய பட்ஜெட் படங்களில் இருந்து சின்ன பட்ஜெட் படங்கள் வரை ஏராளமான படங்கள் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியீட்டிற்கு காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்