You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிஷோர் கே.சாமி மீது ரோகிணி போலீஸ் புகார்: "ரகுவரன் பற்றியும் என்னைப் பற்றியும் அவதூறாக பதிவிட்டார்"
தன்னைப் பற்றியும் மறைந்த தன் கணவர் ரகுவரன் குறித்தும் அவதூறாக பதிவிட்டதாக கிஷோர் கே. சுவாமி என்பவர் மீது சென்னை நகரக் காவல்துறையில் திரைக்கலைஞர் ரோகிணி புகார் அளித்துள்ளார்.
ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் தொடர்ந்து எழுதி வந்த கிஷோர் கே சுவாமி, பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் ஆபாசமாகவும் அவதூறாகவும் எழுதிவந்த நிலையில், அவர் மீது பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்கள் புகார்களை அளித்தனர். இவற்றில் சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி, ஜாமீனில் விடப்பட்டார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை குறித்து சில நாட்களுக்கு முன்பாக அவதூறான கருத்து ஒன்றைப் பதிவுசெய்தார். இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில், அவரை சென்னை சங்கர் நகர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்குப் பிறகு, பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஏற்கனவே அளித்திருந்த புகாரில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜூன் 30ஆம் தேதிவரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் திரைக்கலைஞர் ரோகிணி ஆன்லைன் மூலம் சென்னை நகரக் காவல் துறையிடம் ஆன்லைனில் புகார் ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.
அதில், தன்னைப் பற்றியும் மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்தும் ஃபேஸ்புக்கில் அவதூறாக கிஷோர் கே சாமி எழுதியுள்ளதாக ரோகிணி புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கிஷோர் கே. சுவாமி கைது செய்யப்பட்டபோது அரசியல் தலைவர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகப் பதிவிட்ட நிலையில், சில வருடங்களுக்கு முன்பாக கிஷோர் பல தலைவர்களைப் பற்றி மிக இழிவாகவும் அவதூறாகவும் எழுதிய ஃபேஸ்புக் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை முன்வைத்து சிலர் நியாயம் கேட்டனர்.
இந்தப் பதிவில்தான் ரோகிணி - ரகுவரன் தம்பதி குறித்து கிஷோர் மிக மோசமாக எழுதியிருந்தார். அதை முன்வைத்தே இப்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை ரோஹிணிக்கும் நடிகர் ரகுவரனுக்கும் 1996ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். 2004ல் இந்த தம்பதி விவகாரத்து பெற்றனர். இருப்பினும் ரகுவரனின் கடைசி காலத்தில் அவருடன் சுமூகாகவே ரோஹிணி பழகி வந்தார்.
பிற செய்திகள்:
- தனக்கென ஒரு தனி விண்வெளி நிலையம்: அதற்கென மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பிய சீனா
- ரோனால்டோவால் கோகோ கோலா சந்தை மதிப்பு சரிவு: நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துமா?
- அதிருப்தியாளர்களை அணிதிரட்டும் சசிகலா: எடப்பாடியை வீழ்த்துமா புதிய வியூகம்?
- அதானி குழுமத்தின் பங்குதாரர்களுக்கு ஒரே நாளில் பெரும் இழப்பு - ஏன்?
- இந்தியா Vs நியூஸிலாந்து: கோலி அணிக்கு இங்கிலாந்தில் காத்திருக்கும் சவால்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்