You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஜித் நடிக்கும் வலிமை படம் குறித்த புதிய தகவல்கள்: இந்த வார சினிமா செய்திகள்
இந்த வாரம் தமிழ் சினிமாத் துறையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு இது.
அஜித் நடிக்கும் வலிமை படம் பற்றிய சிறப்பு தகவல்
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60வது படமாக உருவாகி வருகிறது 'வலிமை'. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.
ஓராண்டுக்கும் மேலாக வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் படம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருக்கும் யுவன் சங்கர் ராஜா, வலிமை படத்தின் இசை கோர்ப்பு பணிகள் தொடங்கியிருப்பதாக சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
திரைத்துறையில் கால்பதிக்கும் சந்தானத்தின் மகன்
பிரபுதேவா நடிக்கும் படத்தில் நடிகர் சந்தானத்தின் மகன் நிபுன் அறிமுகமாகவிருக்கிறார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ராகவன் இயக்கத்தில் 'மஞ்சப்பை' என்ற படம் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்தது. அடுத்ததாக, ஆர்யாவை வைத்து கடம்பன் படத்தை இயக்கியிருந்தார் ராகவன். தற்போது, தனது மூன்றாவது படத்தை பிரபுதேவாவை வைத்து இயக்கவிருக்கிறார். இப்படத்தில்தான், சந்தானத்தின் மகன் நிபுன் அறிமுகமாகிறார்.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம்
'தமிழ்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் ஹரி. அவரது இயக்கத்தில், சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, சிங்கம், வேங்கை என பல படங்கள் வெளியாகியுள்ளன.
ஹரி தனது அடுத்த படத்தை அருண் விஜய்யை நாயகனாகக் கொண்டு எடுக்கவிருக்கிறார். அருண் விஜய் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இது இருக்கும். இந்த படத்தின் ஷூட்டிங் 2021 பிப்ரவரியில் தொடங்கவுள்ளது என்றும் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஷகிலா வாழ்க்கை குறித்த படம் எப்போது வெளியாகிறது?
1990களின் இறுதியில் தமிழிலும் மலையாளத்திலும் 'அடல்ட்ஸ் ஒன்லி' படங்களில் நடித்து பிரபலமானவர் ஷகிலா.
அந்த காலகட்டத்தில் தனது குடும்பத்தினராலேயே புறக்கணிக்கப்பட்டது, ஷகிலாவின் படங்களை தடை செய்ய வேண்டும் என மலையாளத் திரையுலகினரே போராடியது உள்ளிட்ட அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் திரைப்படமாக்கியுள்ளார் கன்னட இயக்குநர் இந்திரஜித் லோகேஷ்.
ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை ஷம்மி நன்வானி, சரவண பிரசாத் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஹிந்தியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ளது.
விஷால், ஆர்யா நடிக்கும் 'எனிமி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
'அவன் இவன்' படத்திற்குப் பிறகு நடிகர் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' திரைப்படம் விஷாலின் 30வது படமாகவும் ஆர்யாவின் 32வது படமாகவும் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தை 'அரிமா நம்பி', 'இருமுகன்' படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார்.
'எனிமி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால், "அன்புள்ள எதிரி ஆர்யா, இனி நீ என் சிறந்த நண்பன் அல்ல. நீ என் மோசமான எதிரி என்பதை உறுதிப்படுத்தப்போகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் மகன் அறிமுகம்
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான '36 வயதினிலே' படத்தை தனது '2டி என்டர்டைன்மென்ட்' மூலம் தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமானார் நடிகர் சூர்யா. அதனைத்தொடர்ந்து, 'பசங்க 2', 'மகளிர் மட்டும்', 'கடைக்குட்டி சிங்கம்', 'சூரரைப் போற்று' உள்ளிட்ட படங்களை அவர் தயாரித்தார்.
தற்போது குழந்தைகளை மையப்படுத்தி ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார். இதில் நடிகர் அருண் விஜய்யின் மகன் அறிமுகமாகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்