You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிடத் தடை - என்ன காரணம்?
ரஜினிகாந்த் நடித்து, லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ரஜினிகாந்த் - நயன்தாரா நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் திருநாளை ஒட்டி, ஜனவரி 9ஆம் தேதியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரி மலேசியாவைச் சேர்ந்த டிஎம்ஒய் என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
லைகா நிறுவனம் ரஜினிகாந்தை வைத்து இதற்கு முன்பாகத் தயாரித்த 2.0 படத்திற்காக 12 கோடி ரூபாயை கடனாக வழங்கியதாக கூறிய டிஎம்ஒய் நிறுவனம், அந்தத் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும், அதனை வழங்காத நிலையில், படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென தனது மனுவில் கோரியிருந்தது.
இந்த வழக்கு இதற்கு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, லைகா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், டிஎம்ஒய் நிறுவனத்திற்கு தங்களுடைய நிறுவனம் பாக்கி வைக்கவில்லை என்றும் அந்த நிறுவனம்தான் தங்களுக்கு 1 கோடியே 45 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தது.
அந்த கடனுக்குப் பதிலாகத்தான் காலா படத்தின் சிங்கப்பூர் வெளியிட்டு உரிமையை டிஎம்ஒய் நிறுவனத்திற்கு அளித்ததாகவும் லைகா கூறியது. ஆனால் காலா படத்தை கடனுக்கு பதிலாக அளித்ததாக எந்த ஒப்பந்தமும் இல்லையென டிஎம்ஒய் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜெயச்சந்திரன், லைகா நிறுவனம் 4 கோடியே 90 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்றும் அதுவரை தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிட இடைக்கால தடை விதிப்பதாகவும் கூறினார். இந்தத் தடை மலேசியாவுக்கு மட்டுமே பொருந்துமென்றும் இந்தியாவுக்குப் பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் ஏழாயிரம் திரையரங்குகளிலும் இந்தியாவில் சுமார் 4,000 திரையரங்குகளிலும் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :