இந்தியாவின் வெளியுறவில் அமெரிக்காவின் இடத்தை சீனாவால் நிரப்ப முடியுமா?

இந்தியாவின் வெளியுறவில் அமெரிக்காவின் இடத்தை சீனாவால் நிரப்ப முடியுமா?
பிரசுரிக்கப்பட்டது

"அமைதி அல்லது சமரசம் என்பது ஆதிக்கம் செலுத்துபவரை தூண்டிவிடவே செய்யும். பலதரப்பு வர்த்தக அமைப்பை பாதுகாப்பதில் இந்தியாவுடன் சீனா உறுதியாக நிற்கும்."

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், அதைக் கண்டித்து இந்தியாவுக்கான சீனத் தூதர் ஷு ஃபீஹோங் கூறிய கருத்துதான் இது. இந்தியாவில் உள்ள ஒரு வெளிநாட்டு தூதர் மூன்றாவது நாடு குறித்த இத்தகைய கருத்தை கூறுவது அசாதாரணமானது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். வரி விவகாரத்தால் இந்தியா மற்றும் அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்காவின் இடத்தை சீனாவால் நிரப்ப முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது? உண்மையில் அது சாத்தியமா?

அமெரிக்காவின் வரிகளுக்கு எதிராக குரல் எழுப்பும் நாடுகளில் சீனா முன்னணியில் உள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே வரி விவகாரத்தில் அதிகரித்த பதற்றம், இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தின் படி வரியை குறைக்க ஒப்புக்கொண்டதும் தணிந்தது. ஆனால், இருவருக்கும் இடையேயான வரி பிரச்னை

இன்னும் தீர்க்கப்படவில்லை.

தற்போது அமெரிக்காவுக்கு எதிராக மீண்டுமொரு முறை குரல் எழுப்பியுள்ளது சீனா. ஆனால் இந்த முறை வெளிநாட்டு மண்ணில், அதாவது இந்தியாவிலிருந்து இந்தக் குரலை எழுப்பியுள்ளது.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீன தூதர், அமெரிக்காவை ஒரு தொல்லை செய்யும் நாடு என குறிப்பிட்டார். தடையற்ற வர்த்தகத்தின் மூலம் அமெரிக்கா நீண்ட காலம் பலன் பெற்றதாக கூறிய அவர் தற்போது மற்ற நாடுகளிடம் வரிகளை பேரம் பேசும் கருவியாக பயன்படுத்துகிறது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா மீது 50% வரிகளை விதித்துள்ள அமெரிக்கா, மேலும் கூடுதல் வரிகளை விதிக்கப் போவதாக எச்சரித்துள்ளது. சீனா இதை வலுவாக எதிர்க்கிறது. அமைதியாக இருப்பது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் நாட்டை ஊக்குவிக்கும் எனத் தெரிவித்தார்.

இருநாடுகளையும் ஆசியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான 'இரட்டை என்ஜின்கள்' எனக் குறிப்பிட்ட அவர், இந்தியா மற்றும் சீனா இடையே நிலவும் ஒற்றுமை ஒட்டுமொத்த உலகுக்கும் நன்மை பயக்கும் எனத் தெரிவித்தார்.

ஒருபுறம் அமெரிக்கா உடனான இந்தியாவின் வர்த்தக உறவுகளில் நிலையற்ற தன்மை நிலவி வரும் நிலையில், மறுபுறம் இந்தியா சீனா உறவில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தோ-பசிபிக் ஸ்டடீஸ் மையத்தின் பேராசியர் சிந்தாமணி மகாபத்ரா, இந்தியா மற்றும் சீனா இடையே இடைவெளி குறைய அமெரிக்கா மட்டுமே ஒரே காரணமல்ல என நம்புகிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், "இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிப்பதற்கான பல காரணங்களில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த சில மாதங்களாக இருநாடுகளுக்கும் இடையே தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனா பொருளாதார வளமிக்க நாடாக உள்ளது. கால்வான் பள்ளத்தாக்கு நிகழ்வுக்குப் பிறகு ஏற்பட்ட கசப்புத்தன்மையை நீக்க சாதாரண நடைமுறை இது" என்றார்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு வந்திருந்தார். அப்போது இந்தியாவும் சீனாவும் ஒருவரையொருவர் எதிரிகள் அல்லது அச்சுறுத்தல்கள் எனப் பார்க்காமல் "கூட்டாளிகளாக" பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

வாங் யீ-ஐ சந்தித்த பின், இந்தியா மற்றும் சீனா இடையேயான நிலையான, நம்பத்தகுந்த மற்றும் ஆக்கப்பூர்வமான உறவுகள் பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது உலக அமைதி மற்றும் செழிப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என பிரதமர் மோதி தெரிவித்தார்.

சரி, கேள்விக்கு வருவோம். உண்மையில் சீனாவால் அமெரிக்காவின் இடத்தை நிரப்ப முடியுமா?

சீன இணையதளமான குவான்சாவில் வெளியான அறிக்கையில், டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடனான நெருங்கிய உறவின் பலன்கள், இரண்டாம் ஆட்சிக் காலத்தில் வரிகளால் பாதிக்கப்படலாம். இந்த மாற்றங்களால் சில வழிகளில் சீனா பலனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக அமெரிக்கா உள்ளது. அதே சமயம் சீனா உடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இத்தகைய சூழலில் அமெரிக்காவுக்கான மாற்றாக இந்தியாவுக்கு சீனா இருக்க முடியுமா என்றால் அது எப்போதும் நடக்காது என்கிறார் சிந்தாமணி

இதற்கான காரணத்தை கூறும் சிந்தாமணி, "சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நட்பில் எந்த விரிசலும் இருக்கப் போவதில்லை. சீனாவால் எப்போதும் அமெரிக்காவின் இடத்தை நிரப்ப முடியாது. இந்தியா தான் ஏற்றுக்கொண்டுள்ள பன்முகக் கூட்டணி கொள்கை மூலம் சீனா உடனான தனது உறவுகளை மேம்படுத்த முயன்று வருகிறது" என்றார்.

இந்தியா மற்றும் சீனா இடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் பல விவகாரங்கள் பற்றிய கேள்விகள் தற்போதும் உள்ளன.

இருநாடுகளும் மூன்று ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தெளிவற்ற எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதனால் இருநாடுகளின் ராணுவங்களும் கடந்த சில வருடங்களில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்தியா நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தானை குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது சீனா.

தலாய் லாமா மற்றும் திபெத்திய அகதிகளுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்து வருகிறது. இதை தனது உள்நாட்டு அரசியலில் தலையிடுவதாக சீனா பார்க்கிறது.

இத்தகைய சூழலில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்துக்காக சீனா செல்லும் இந்திய பிரதமர் மோதியின் பயணத்திற்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் புதிய திசை கிடைக்குமா என்பதில் தான் அனைவரின் கவனமும் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு