லிங்கம்: போலீசாக விரும்பிய இளைஞரின் வாழ்க்கை ஒரு கபடி போட்டியால் தலைகீழாக மாறிய கதை

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

1980களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமாக இருந்த கபடி விளையாட்டிற்கு பெயர்போன ஓர் இளைஞர், போலீஸ் அதிகாரியாக ஆசைப்படுகிறார். ஆனால், பிற்காலத்தில் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியாக மாறும் அவர், வெறும் 36 வயதில் நாகர்கோவில் மாவட்ட கிளைச் சிறையில் 20க்கும் மேற்பட்ட நபர்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார்.

அவரது தலை துண்டிக்கப்பட்டு, அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் வீசப்படுகிறது.

"தமிழ்நாட்டில் ஒரு சிறையில், வெளியிலிருந்து சிறைக்குள் நுழைந்த பலரால், இவ்வளவு கொடூரமாக ஒருவர் கொல்லப்பட்டது எனக்கு தெரிந்து அதுவே முதல் முறை. அந்தச் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் இருந்த சிறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது" என்கிறார் மதுரை மத்திய சிறையின் உதவி சிறை அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற நல்லதம்பி.

அப்படி நாகர்கோவில் கிளைச் சிறையில் ஏப்ரல் 9, 1996, அதிகாலையில் கொலை செய்யப்பட்ட அந்த நபரின் பெயர், லிங்கம் என்கிற முத்துலிங்கம்.

"லிங்கம் என்பவரை நிச்சயம் நல்லவர் என்ற வரையறைக்குள் பொருத்திப் பார்க்க முடியாது. ஆனால் அவர் விரும்பி கத்தி எடுத்தவர் அல்ல. வாழ்க்கையில் திசைமாறிப் போனவர். அவர் செய்த தவறுகளை நியாயப்படுத்தாமல் காட்சிப்படுத்தியுள்ளேன்" என்கிறார் 'லிங்கம்' இணையத் தொடரின் இயக்குநரும் எழுத்தாளருமான லக்ஷ்மி சரவணகுமார்.

ரெண்டாம் ஆட்டம், போர்க்குதிரை, ரூஹ், கானகன் போன்ற பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள இவர், ஜூன் 26-ஆம் தேதி வெளியான 'லிங்கம்' இணையத் தொடர் மூலம் இயக்குநராக மாறியுள்ளார்.

"80கள் மற்றும் 90களில் நடந்த ஒரு கதையை இப்போதும் சொல்ல வேண்டியதன் காரணம், அதில் இருக்கும் சுவாரஸ்யம் மட்டுமல்ல, அந்தக் கதை இன்றும் தொடர்கிறது. இன்றும் அது தொடர்பான நபர்கள் உயிருடன் உள்ளனர், வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்கிறார் அவர்.

யார் இந்த லிங்கம்?

80களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு கபடி வீரர் தான் முத்துலிங்கம்.

"கன்னியாகுமரியின் விவேகானந்தா கேந்திரா அருகில் தான் அவரது வீடு இருந்தது. மிகச்சிறந்த கபடி வீரர். முதலில் ஒரு போட்டியில் அவருக்கு எதிராக ஆடினோம், அதன் பிறகு அவருடன் இணைந்து சில போட்டிகளில் விளையாடியுள்ளேன்" என்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசன்.

1994-ல் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, 1995-ல் விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான அர்ஜூனா விருதை பெற்ற இவரது வாழ்க்கையை மையப்படுத்தி கடந்த வருடம் 'பைசன்' திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

"எனக்கு இந்திய கபடி அணியில் இடம்பெற வேண்டும் என்ற தீராத வேட்கை இருந்ததைப் போல அவருக்கு காவல்துறையில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தது" என்கிறார் மணத்தி கணேசன்.

1987இல் ஏர்வாடியில் நடந்த ஒரு கபடிப் போட்டி தான் லிங்கத்தின் வாழ்க்கையை மாற்றுகிறது.

அந்தப் போட்டியில் லிங்கத்தின் அணியும், ஜெயசீலன் என்பவரது அணியும் மோதுகின்றன. ஜெயசீலன் குற்றப்பின்னணி கொண்டவர்.

இரு அணிகளும் மிக ஆக்ரோஷமாக மோதிக் கொள்கின்றன, சில உரசல்களும் நிகழ்கின்றன. ஒருகட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட, சில நிமிட சலசலப்புக்குப் பிறகு, களத்தில் ஜெயசீலன் இறந்து கிடக்கிறார். அதிர்ச்சியில் லிங்கமும் அவரது அணியினரும் அங்கிருந்து தப்பிச் செல்கிறார்கள்.

"இதில் லிங்கத்திற்கு உண்மையிலேயே தொடர்பு இருந்ததா என்பது அப்போதிருந்து மர்மமாகவே தான் உள்ளது. ஆனால், ஜெயசீலனுக்கு சிலருடன் அப்போது பகை இருந்தது உண்மை. இருப்பினும், இந்தக் கொலையால் அதிகம் பாதிக்கப்பட்டது லிங்கம் தான்," என்று நாகர்கோவில் மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற டிஎஸ்பி இளங்கோ, கடந்த 2024 ஜனவரியில் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவம் நடந்தபோது, அவர் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றினார்.

"லிங்கத்திற்கு அப்போது வயது 24 தான் இருக்கும். அவர் காவல்துறையில் தேர்வாகி, சான்றிதழ் சரிபார்ப்பிற்காகக் காத்திருந்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த வேலை கிடைக்கவில்லை," என்றார் அந்த அதிகாரி.

ஜெயசீலன் கொலை வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் லிங்கம்.

"அந்த வழக்கு அவரது வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அதில் அவரது நெருங்கிய நண்பர் பிரபுவும் கைது செய்யப்படுகிறார். இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின்னர், இருவரும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பிரபலமான குற்றவாளிகளாக மாறினர்" என்கிறார் மதுரை மத்திய சிறையின் உதவி சிறை அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற நல்லதம்பி.

1985 முதல் 2021 வரை நல்லதம்பி சிறைத்துறையில் பணியாற்றியுள்ளார். தனது பணி அனுபவத்திலிருந்து 'சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் பாகம் 1 மற்றும் 2' ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

வெறும் 7, 8 ஆண்டுகளில் லிங்கம் அடைந்த வளர்ச்சி என்பது அசாதாரணமானது என்று குறிப்பிடும் இயக்குநர் லக்ஷ்மி சரவணகுமார், "90களில் கன்னியாகுமரி பகுதியில் பல்வேறு மதுக் கடைகள் அவரது கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. இன்னும் ஒரு சுவாரசியமான விஷயம், லிங்கம் எங்கு சென்றாலும் 'சைரன்' வைத்த காரில் தான் செல்வார். அவரது கும்பலின் உறுப்பினர்களுக்கு ஒரு சீருடை கூட இருந்தது" என்கிறார்.

"லிங்கத்தின் கூட்டாளிகள் ஷேக் மீரான், ராதாகிருஷ்ணன் மற்றும் செல்வம் ஆகியோர் இன்றும் சிறைகளில் உள்ளனர். இதில் செல்வம் சிறையில் இருந்தவாறே 80களின் இறுதியில் கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்ற மோதல்கள் குறித்து ஒரு புத்தகம் கூட எழுதியுள்ளார்" என்கிறார் நல்லதம்பி.

'ஒரு தூக்கு கைதியின் வாக்குமூலம்' என்ற சிறையில் இருந்தவாறே தான் எழுதிய புத்தகத்தில், லிங்கம் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார் செல்வம்.

'லிங்கம் - மோதல்களில் எந்தப் பங்கும் வகிக்காத எதிராளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மீது கைவைக்கக் கூடாது என்ற எழுதப்படாத சட்டத்தை மீறிவிட்டார்'.

நண்பர்கள் இடையே மோதல்

"அப்படி லிங்கம் அழித்தது, ஒரு காலத்தில் தனக்கு நெருங்கிய நண்பனாக இருந்த பிரபுவின் குடும்பத்தை. 80களில் நெருங்கிய நண்பர்களாக இருந்த லிங்கமும் பிரபுவும், 90களில் நடந்த சில சம்பவங்களால் பகைவர்களாக மாறினார்கள். முதலில் தொழில் ரீதியில் மோதிக் கொண்டவர்கள், பின்னர் ஆயுத மோதலில் ஈடுபட்டார்கள்."

"ஒருகட்டத்தில் பிரபு, பிரபுவின் அண்ணன் ஆகியோரைக் கொன்ற லிங்கம், மற்றொரு சகோதரரைக் கடுமையாக தாக்கியதில், அந்தச் சகோதரர் தனது ஒரு கை மற்றும் காலை இழந்தார். அதுவே லிங்கத்தின் மரணத்திற்கு வழிவகுத்தது எனச் சொல்லலாம்" என்கிறார் நல்லதம்பி.

பல முக்கிய குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்த லிங்கத்திற்கு, நாகர்கோவில் கிளைச் சிறை என்பது புதிதல்ல. அப்படி 1996, ஏப்ரல் மாதம் சிறையில் இருந்தபோது தான் லிங்கம் கொல்லப்பட்டார்.

"நாகர்கோவில் கிளைச் சிறை லிங்கத்திற்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு சிறை தான். அவர் மீது பல குற்ற வழக்குகள் இருந்ததால் நியாயமாக அவரை ஒரு மத்திய சிறையில் தான் அப்போது அடைத்திருக்க வேண்டும். அதிலும் அவரது உயிருக்கு ஆபத்து என தெரிந்திருந்தும் பெரிய மதில் சுவர்கள் இல்லாத அந்த கிளைச் சிறையில் அடைத்து வைத்தது ஏன் என தெரியவில்லை. லிங்கம் இறந்தபிறகு சிறை நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது" என்கிறார் நல்லதம்பி.

நல்லதம்பி கூற்றுப்படி, ஏப்ரல் 9, 1996. அதிகாலை. நாகர்கோவில் கிளைச் சிறையின் மதில் சுவர்களை தாண்டிக் குதிக்கும் 20க்கும் மேற்பட்டோர், கத்தி, நாட்டுத் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களுடன் சிறைக் காவலர்களை மிரட்டி, சிறைகளின் சாவிகளைப் பறித்து லிங்கம் இருக்கும் ப்ளாக்கிற்குள் நுழைகின்றனர்.

"ஏணிப்படி, கயிறுகள், பூட்டை உடைப்பதற்கான சுத்தியல், உளி, பயங்கர ஆயுதங்கள் என முழு ஏற்பாடுகளுடன் அவர்கள் சிறையில் நுழைந்தனர். லிங்கம் இருந்த சிறை அறைக்குள் புகுந்து அவனைத் தாக்குகிறார்கள். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட, அவன் தப்பித்து கழிவறைகள் இருக்கும் பகுதிக்குச் செல்கிறான்" என விவரிக்கிறார் நல்லதம்பி.

"அங்கு அவன் கையில் கிடைத்த இரும்பு வாளியைக் கொண்டு தன்னை தாக்க வருபவர்களை தடுக்க முயற்சிக்க, துப்பாக்கியால் சுட்டு, பின்னர் அவனது தலையை வெட்டி எடுத்துச் செல்கிறார்கள்".

'லிங்கம் கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவரான மோகன் என்பவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது பகிர்ந்த தகவல்களின் அடிப்படையில், லிங்கம் தொடர்பாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளதாகக்' கூறுகிறார் நல்லதம்பி.

லிங்கம் இறந்தபோது, அவருக்கு ஐந்து வயதில் மகளும், மூன்று வயதில் சுஜித் என்ற மகனும் இருந்தனர். லிங்கம் கொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 2013ஆம் ஆண்டு, லிங்கத்தின் மகன் சுஜித், தனது தந்தையைக் கொன்றவர்களில் ஒருவரான சகாயத்தைக் கொலை செய்தார்.

"லிங்கத்தின் கபடி ஆட்டம் தனித்துவமானது. அவரது ஆட்டத்திற்கு நிறைய ரசிகர்கள் இருந்தனர், நானும் அவரது ஆட்டத்தில் இருந்து சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்" என்கிறார் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசன்.

'இந்த முரட்டுத்தனமும், கோபமும் இவனை தவறான பாதையில் கொண்டு போய் விடக்கூடாது, கபடி வேண்டாம்' என 'பைசன்' திரைப்படத்தில் மணத்தி கிட்டானின் தந்தை (பசுபதி) கூறுவது போல காட்சிகள் இருக்கும். ஆனால், குற்றவாளியாக மாறக்கூடிய சூழல்களைக் கடந்து அதே கபடி மூலம் மணத்தி கிட்டான் (துருவ் விக்ரம்) உயர்வார்.

மணத்தி கணேசனின் வாழ்க்கையை மாற்றியதும், லிங்கத்தின் வாழ்க்கையை மாற்றியதும் கபடி தான்.

"80, 90களில் என்னுடன் கபடி விளையாடிய பலர் பாதை மாறி போய்விட்டார்கள். இதில் தனி மனிதர்களை மட்டுமே பொறுப்பாக்கி விட முடியாது, சூழல்களும் தான் காரணம்" என்கிறார் மணத்தி கணேசன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு