‘உள்ளே வச்சுப் பாருங்க’ சீமான் சவாலும் நாம் தமிழர் - திமுக மோதலும்

சீமான்

பட மூலாதாரம், Naam Tamilzhar

பிரசுரிக்கப்பட்டது

திமுக, நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் கற்களை வீசி தாக்கி கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதில் சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் மேனகா நவநீதன் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், கட்சிகளிடையே மோதல் போக்கு உருவாகியது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று திமுகவினர் தாக்கியதில், நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க மாநிலத் தலைவர் அன்பு தென்னரசுவின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. புதுக்கோட்டையைச் சேர்ந்த நாகசுந்தரின் முகத்திலும் காயம் ஏற்பட்டது.

கடந்த 20-ஆம் தேதி அனுமதியினறி ஆலமரத் தெருவில் பிரசாரம் மேற்கொண்ட குற்றச்சாட்டில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஈரோடு காவல் நிலையத்தில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா உள்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்குமிடையே புகைந்துகொண்டிருந்த பிரச்சனை இன்று கற்கள், கட்டைகளை வீசி தாக்கி, கார் கண்ணாடிகள் உடைத்ததோடு, கட்சியினரின் மண்டைகளும் உடைக்கப்பட்டதால், மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது பிரச்சாரத்தில்?

புதன்கிழமையன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட, வீரப்பன் சத்திரம் பகுதியிலுள்ள காவேரி ரோட்டில் சீமான் தலைமையில் அக்கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திமுகவினரின் தேர்தல் பணிமனையில் கூட்டமாக இருந்துள்ளனர். கூட்டமாக இருந்தவர்களை, நாம் தமிழர் கட்சியினர் அவர்களது செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

காரணம் இல்லாமல் தங்களை போட்டோ வீடியோ எடுக்க வேண்டாம் என திமுகவினர் எச்சரித்தனர். இதைமீறி நாம் தமிழர் கட்சியினர் திமுகவினரை வீடியோ எடுத்ததால் இரு தரப்பினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடும் சண்டையாக மாறியது.

இதில் ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது.

இதில் சீமானின் பிரசாரத்தில் வந்த ஒரு சொகுசு கார் திமுகவினரிடம் சிக்கியது. அந்த கார் கண்ணாடிகளை உடைத்த திமுகவினர் கார் டயர் காற்றை பிடுங்கி விட்டு காரில் வந்தவர்கள் தப்பிச் செல்ல முடியாமல் செய்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசி மோகன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர், தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நாம் தமிழர்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தக் கலவரத்தில் படுகாயம் அடைந்த இரு தரப்பினரும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தை தடுக்க திமுகவினர் ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு ஊர்வலமாக வந்தனர். அவர்களை வழியிலேயே தடுத்த காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

சீமானின் பொதுக்கூட்டத்திற்கு ஏராளமான காவல்துறையினர் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் ஏந்திய துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வந்த ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசி மோகன், பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு காரணமாக உடனடியாக பொதுக்கூட்டத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.

இதனை அடுத்து சீமான் பொதுக்கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார்.

மேலும் திமுக அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்காமல் பொதுக்கூட்டத்தை உடனடியாக முடித்துக் கொள்ளுமாறு தெரிவிப்பதாக வேதனை தெரிவித்தார்.

சீமான்

பின்னர் கலவரத்தில் காயம் அடைந்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியினரை சந்தித்த சீமான், கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தொண்டர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசி மோகன், “அடிதடியில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் கலைத்து விட்டுள்ளோம். சீமான் பொதுக் கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. புகார் வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

சீமான் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “தாக்குதல் நடத்துவதற்கு திமுகவிற்கு காரணமா வேணும். பயம் அச்சம்தான் காரணம். என்ன பேசிவிட்டேன் என என் மீது வன்கொடுமை வழக்கு போடுறீங்க. கொலுசு கொடுக்கிறது, பட்டுப்புடவை , பணம் கொடுக்கிறது. மக்களை மண்டபத்தில் அடைப்பது. குக்கர் கொடுக்கிறது, இதெல்லாம் அனுமதியோடுதான் கொடுக்கிறார்களா?” என கேள்வி எழுப்பினார்.

“அருந்ததியரை பற்றி நான் என்ன சொன்னேன்? கலெக்டர், தேர்தல் ஆணையம் என புகார் கொடுத்தீங்க. என்னை தூக்கி உள்ளே வச்சுட்டீங்களா என்ன? உள்ளே வச்சு பாருங்க. உங்க அப்பா நிறைய முறை என்னை உள்ளே வச்சார். உங்க டர்ன் வந்திருக்கு உள்ளே வச்சு பாருங்க” என சவால் விடுத்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: