You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களில் யாருக்கெல்லாம் மாதம் ரூ.1,000 கிடைக்கும்?
தமிழ்நாட்டில் 6ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். தனது உரையின் தொடக்கத்தில், இதற்கு முன்பாக இருந்த அரசுகள் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை நிதியமைச்சர் பட்டியலிட்டார்.
நிதி நெருக்கடி, இயற்கைப் பேரிடர், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு நடுவில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதாகக் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியை உறுதி செய்யும் விதமாக 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றார். இந்த திட்டத்தின் கீழ் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என கூறினார். இந்த திட்டத்தை நிறைவேற்ற வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும், புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் 2022இல் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்று பயனடைந்து வருவதாகக் கூறிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உயர்கல்வியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக பேசினார்.
உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஊரகப்பகுதிகளில் இருக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எதிர்வினையாற்றியுள்ளார். வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லை எனவும் அதிமுக கொண்டு வந்த மக்கள் நலன் சார்ந்த திட்டத்தை நிறுத்திவிட்டு வேறு பெயரில் நிதியை குறைத்து மாற்று திட்டங்களை திமுக அரசு அறிவிப்பதாகவும் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)