You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்கா - இரான் ஒப்பந்தம் - யாருக்கு லாபம்?
அமெரிக்கா - இரான் ஒப்பந்தத்தால் இரு நாட்டுக்கும் கிடைப்பது என்ன?
அமெரிக்கா மற்றும் இரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இரு தரப்புமே தாங்களே வெற்றி பெற்றதாக கூறி வருகின்றனர். கையெழுத்தான ஒப்பந்தம் மோதலை தற்போதைக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. ஆனால், இதைவிட கடினமான பேச்சுவார்த்தைகள் இனிதான் தொடங்கவுள்ளன.
இந்த ஒப்பந்தத்தால் இரு தரப்புக்கும் கிடைத்தது என்ன என்பது குறித்து பிபிசி பாரசீக சேவையை சேர்ந்த அமீர் அசிமி ஒரு பகுப்பாய்வு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளவற்றை இந்த காணொளியில் பார்க்கலாம்.
இரானை பொறுத்தவரை, அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் வெறும் போர்நிறுத்தம் மட்டுமல்ல. அதைவிட மேலாக, போரில் சரணடையாமல் இன்னும் வலிமையுடன் எழுச்சி பெற்றுள்ளோம் என உரிமை கோருவதற்கான வாய்ப்பை இரானுக்கு வழங்கி உள்ளது.
தொடக்கத்திலிருந்தே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை தோற்கடிப்பதை விட அவர்களை தடுத்து நிறுத்துவதே இரானின் முதன்மை நோக்கமாக தெரிந்தது. இஸ்லாமியக் குடியரசின் தலைமை கட்டமைப்பு மற்றும் பேச்சுவார்த்தையில் தனது குரலுக்கான வலிமை ஆகியவை சிதையாமல் போரிலிருந்து வெளியேறுவதே இரானின் இலக்காக இருந்தது.
இந்த ஒப்பந்தம், இரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு 60 நாள் காலக்கெடுவை நிர்ணயிக்கிறது. மேலும், லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துதல், நாடுகளின் இறையாண்மையை பரஸ்பரம் மதித்தல், ஹோர்மூஸ் நீரிணையை திறத்தல், இரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படை முற்றுகையை நீக்குதல் ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது.
இரான் மேற்கொள்ளவிருக்கும் உடனடி நடவடிக்கைகள் முக்கியமானவை என்றாலும், அவை ஒப்பீட்டளவில் வரையறுக்கப்பட்டவையாகவே உள்ளன. போருக்கு முந்தைய ஆண்டுகளில் நிலவிய சூழலை போலவே, ஹோர்மூஸ் வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதிசெய்ய இரான் ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்கு மாறாக, அமெரிக்காவின் உறுதிமொழிகள் பெரிதாக தெரிகின்றன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கும், இரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு விலக்கு அளிக்கும், முடக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட இரானிய சொத்துக்களுக்கான அணுகலை வழங்கும். மேலும் தனது கூட்டாளிகளுடன் இணைந்து குறைந்தது 300 பில்லியன் டாலர் மதிப்பில் இரானுக்கு மறுசீரமைப்பு திட்டங்களை முன்னெடுக்கும்.
இரானிய இறையாண்மை அங்கீகரிக்கப்பட்டிருப்பதாலும், முற்றுகை நீக்கப்படுவதாலும், தடைகளை தளர்த்த முன்மொழியப்பட்டிருப்பதாலும், புனரமைப்புக்கான நிதி ஆவணத்தில் வெளிப்படையாக சேர்க்கப்பட்டிருப்பதாலும், இதை ஒரு வெற்றியாக முன்வைக்க இரான் தலைமைக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
ஆனால், மிக சிக்கலான விவகாரங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இரானின் அணுசக்தி திட்டம் குறித்த விஷயங்கள் எதிர்காலப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது இரான் தலைமைக்கு சவாலான சூழலாக அமைந்துள்ளது. ஏனெனில், அரசு ஊடகங்கள், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை, தீவிரப் போக்குடைய தலைவர்கள் என பலரும், இரான் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தோற்கடித்துவிட்டதாக தங்கள் ஆதரவாளர்களிடம் பல வாரங்களாக கூறி வருகின்றனர். எனவே அணுசக்தி விவகாரத்தில் செய்யப்படும் எந்தவொரு சமரசமும் வெற்றி அறிவிக்கப்பட்ட பின் செய்யப்பட்ட விட்டுக்கொடுப்பாக விமர்சகர்களால் பார்க்கப்படக்கூடும்.
ஆனால், சமரசம் செய்ய மறுப்பதும் ஆபத்தானதாக அமையலாம். ஏனெனில் இந்த விஷயத்தில் இரான் நெகிழ்வுத்தன்மையை காட்ட மறுத்தால், பேச்சுவார்த்தைகள் முறியக்கூடும். அத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தமும் நெருக்கடிக்கு உள்ளாகி மீண்டும் மோதல் ஏற்படலாம்.
டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவிற்கு பெரிய வெற்றி என கூறுகிறார். இரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை தடுப்பதே போரில் தனது முக்கிய நோக்கம் என்றும், அந்த நோக்கத்தை இந்த ஒப்பந்தம் இறுதியில் நிறைவேற்றும் என்றும் அவர் கூறுகிறார்.
ஆனால் குறுகிய கால அடிப்படையில் டிரம்பிற்கு மிக முக்கிய வெற்றி, ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதும், அதன் விளைவாக உலகளவில் வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதுமே.
போர் நீண்டுகொண்டே சென்றதாலும், பெட்ரோல் விலை உயர்வு மற்றும் போரினால் தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அமெரிக்க மக்கள் அதிருப்தி அடைந்து வருவதை கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து காட்டின.
பொருளாதார நிலைமை குறித்த அதிருப்தியே அமெரிக்க மக்கள் டிரம்பை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று. எனவே அவர் தொடங்கிய போர், மக்களின் பணப்பையை பாதிக்கிறது என்ற கருத்து அவருக்கு அரசியல் சிக்கலாக மெல்ல மாறி வந்தது.
இத்தகைய சூழலில், இந்த ஒப்பந்தம் டிரம்பிற்குச் சற்று நிம்மதி அளிக்கும். போரை ஒப்பீட்டளவில் விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்தவராகவும், தேர்தல் பிரசாரத்தில் அவர் தொடர்ந்து விமர்சித்த முடிவில்லாத போர்களில் அமெரிக்கா சிக்கிக்கொள்வதை தடுத்தவராகவும் டிரம்பை முன்னிறுத்த முடியும் என அவரது அரசியல் கூட்டாளிகள் நம்புகின்றனர்.
இருப்பினும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் உட்பட இந்த ஒப்பந்தத்தை விமர்சிப்பவர்கள், டிரம்ப் அதிகப்படியான சலுகைகளை வழங்கி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
அவர்கள் குறிப்பிடும் முக்கிய விஷயம், 300 பில்லியன் டாலர் மறுசீரமைப்பு நிதி பற்றித்தான்.
இந்தப் பணம் எதையும் அமெரிக்கா நேரடியாக வழங்காது என டிரம்ப் மற்றும் அவரது நிர்வாக அதிகாரிகள் வலியுறுத்திய போதிலும், கட்சியின் சில உறுப்பினர்களுக்கு இது இன்னும் கவலையளிப்பதாகவே உள்ளது.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்காவின் சில போர் நோக்கங்கள் இந்த ஒப்பந்தத்தில் இல்லை. உதாரணமாக, போரின் தொடக்கத்தில் இரானின் ஏவுகணைகளை அழிப்பது, அதன் ஏவுகணை உற்பத்தி துறையை முற்றிலும் அழிப்பது ஆகியவற்றை அமெரிக்க ராணுவம் மேற்கொள்ளும் என டிரம்ப் உறுதியளித்திருந்தார். ஆனால், அது தொடர்பான எதுவும் ஒப்பந்த்தத்தில் இல்லை.
அதேபோல, இரான் பிராந்தியத்தில் உள்ள ஆயுத குழுக்களுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி வழங்குவதை தடுப்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா பணியாற்றி வருகிறது என டிரம்ப் கூறி இருந்த போதிலும், இரானுக்கும் பிராந்திய குழுக்களுக்கு இடையேயான உறவு குறித்து எந்த குறிப்பும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் ஹெஸ்பொலா பற்றி அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறும் போது, இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்துவதிலிருந்து ஹெஸ்பொலா விலகி இருக்கும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாக கூறினார். அதேபோல, போர்நிறுத்தங்கள் சற்று குழப்பமான சூழலைக் கொண்டவை என்றும், அங்கொன்றும் இங்கொன்றுமாக பதற்றங்களும் மோதல்களும் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஒன்று மட்டுமே, இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அமெரிக்க கொள்கையின் அசைக்க முடியாத கோட்பாடாக கருதும் குடியரசு கட்சியினரிடையே இந்த ஒப்பந்தத்தை செல்வாக்கற்றதாக மாற்றிவிடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு