பாஜக மகளிர் அணி பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு - தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசனுக்கு தேசியச் செயலாளர் பதவி

பட மூலாதாரம், VanathiBJP
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், கட்சியின் புதிய நிர்வாகிகளை திங்கள்கிழமையன்று அறிவித்துள்ளார்.
புதிய தேசியத் துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கான பெயர்கள் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
பாஜக 13 தேசியத் துணைத் தலைவர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. இதில் வசுந்தரா ராஜே சிந்தியா, தீரத் சிங் ராவத், ராம் மாதவ் மற்றும் பேராசிரியர் தாரிக் மன்சூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல், தேசியப் பொதுச் செயலாளர் பதவிக்கு 8 பேரின் பெயர்களும், தேசியச் செயலாளர் பதவிக்கு 16 பேரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசன், 16 தேசியச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு அணிகளின் தலைவர்கள் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டு, புதிய தலைவராக ரூப் குமாரி செளத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
குன்வர் பாசித் அலி சிறுபான்மையினர் அணியின் தலைவராகவும், ஹேமங் ஜோஷி இளைஞர் அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தீபக் மாஸ்கே புதிய சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இந்தப் பொறுப்பில் பிரபல பாஜக தலைவர் அமித் மால்வியா இருந்தார்.

பட மூலாதாரம், Vishnu Deo Sai/FB
வானதி சீனிவாசன் விடுவிப்பு
பாஜக தேசிய மகளிர் அணி தலைவராக சத்தீஸ்கரை சேர்ந்த ரூப் குமாரி செளத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் வகித்து வந்தார்.
''கடந்த பதவிக்காலத்தில் பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய கட்சிக்கும், தலைமைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
''புதிய அணிக்கு எனது வாழ்த்துகள். அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டு, இந்தப் பயணத்தை வெற்றிகரமாகவும் மனநிறைவு அளிப்பதாகவும் அமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன். கட்சியை மேலும் உயர்ந்த நிலைக்கு அவர்கள் கொண்டு செல்லட்டும்.'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு முஸ்லிம் முகங்களுக்கு இடம்
பாஜக தலைவர் நிதின் நபினின் புதிய அணியில் இரண்டு முஸ்லிம் தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர். இருவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களில் முதலாவது பேராசிரியர் தாரிக் மன்சூர். இவர் தேசியத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது குன்வர் பாசித் அலி. இவர் சிறுபான்மையினர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், பேராசிரியர் தாரிக் மன்சூர் ஏற்கெனவே 2023ஆம் ஆண்டில் தேசியத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். மேலும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.

பட மூலாதாரம், FB/TARIQ MANSOOR
இளைஞர் அணி தலைவர் யார்?
பாஜக மேலும் ஏழு வெவ்வேறு அணிகளின் தலைவர்களுக்கான பெயர்களையும் அறிவித்துள்ளது.
இளைஞர் அணியின் புதிய தலைவராக ஹேமங் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை இதற்கு முன்பு பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா வகித்து வந்தார்.
பாஜக தேசியப் பொருளாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்தப் பதவியில் ராஜேஷ் அகர்வால் இருந்தார். பி.எல். சந்தோஷ் தேசியப் பொதுச் செயலாளராகத் தொடர்ந்து பதவி வகிக்கிறார்.
16 தேசியச் செயலாளர்களில், கேரளாவைச் சேர்ந்த கே. சுரேந்திரன் மற்றும் அனில் ஆண்டனி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

பட மூலாதாரம், ANI
பெண்களுக்கு இடம்
பாஜக தனது புதிய நிர்வாகிகள் பட்டியலில் பல பெண்களுக்கு இடமளித்துள்ளது. கட்சியின் தேசிய நிர்வாகிகள் மத்தியில் மொத்தம் 12 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள 13 பேரில் 6 பேர் பெண்கள். ராஜஸ்தானைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த டி. புரந்தேஸ்வரி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேகா வர்மா, குஜராத்தைச் சேர்ந்த வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாரதி பிரவீண் பவார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மதுச்சந்திரா கர் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
எட்டு தேசியப் பொதுச் செயலாளர்களில் ஸ்மிருதி இரானி மட்டுமே பெண். 16 தேசியச் செயலாளர்களில் மூன்று பேர் பெண்கள்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ரூப் குமாரி செளத்ரிக்கு மகளிர் அணியின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் நால்வரில் ப்ரீத்தி காந்தி மட்டுமே பெண்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































