You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆபாசப் பட பிரச்னையால் திணறும் ஜப்பான் - செல்போனில் ரகசியமாக படம் பிடிப்பதைத் தடுக்க புதுமையான முயற்சி
- எழுதியவர், கெல்லி என்ஜி
- பதவி, பிபிசி செய்திகள்
- பிரசுரிக்கப்பட்டது
சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலின்றி அவர்களை பாலியல் ரீதியாக சுரண்டும் வகையிலான படங்கள் அல்லது காணொளியாக பதிவு செய்வதற்கு எதிராக ஜப்பானில் முதல் முறையாக தேசிய அளவிலான சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை அந்நாட்டு எம்.பிக்கள் அறிமுகப்படுத்தவுள்ளனர்.
பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் ஆபாச படம் அல்லது காணொளியை பதிவு செய்து சுய இன்பம் காணும் "ஃபோட்டோ வோயூரிஸம்" எனப்படும் போக்குக்கு எதிரான மசோதா, சட்ட வடிவம் பெற்றால், அது ஒருவரது அனுமதியின்றி அவர் தமது மேலாடையை கழற்றும்போது அதை ரகசியமாக வேறொரு நபர் பதிவு செய்வதை தடை செய்யும்.
ஜப்பானில் தற்போது வரை, இத்தகைய குற்றவியல் செயல்களுக்கு உள்ளூர் மாகாண சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்படும். ஆனால், அங்கு மாகாணத்துக்கு மாகாணம் இந்த குற்றங்களுக்குான தண்டனைகள் பெரிய அளவில் மாறுபடுகின்றன.
இந்நிலையில், தற்போது அறிமுகமாகவிருக்கும் சட்ட மசோதா, பாலியல் குற்றங்கள் தொடர்பான ஜப்பானிய சட்டங்களின் மிகப்பெரிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும், பாலியல் வல்லுறவு என்பதன் விளக்கத்தையும் இந்த மசோதா விரிவாக பொருள்படுத்தும்.
ஒருவரின் பிறப்புறுப்புகள் உள்ளிட்ட அரை நிர்வாணம் அல்லது முழு நிர்வாண கோலத்தை அவரது அனுமதியின்றி மற்றொருவர் புகைப்படம் எடுப்பதையோ விநியோகிப்பதையோ அல்லது வைத்திருப்பதையோ இந்த மசோதா தடை செய்கிறது.
மேலும், பாலியல் நிலைகளில் அவர்களுக்குத் தெரியாமல் புகைப்படங்களை எடுப்பதையும் இது குற்றமாக்குகிறது. குறிப்பாக, "நியாயமான காரணமின்றி பாலியல் உணர்வைக் கொண்ட வகையில் குழந்தைகள் படம் பிடிக்கப்படுவதையும்" இந்த மசோதா தடை செய்கிறது.
ஜப்பானில், குழந்தை மாடல்கள் - பெரும்பாலும் சிறுமிகள் - வழக்கமாக பாலியலைத் தூண்டுதல் வழிகளில் சித்தரிக்கப்படுவதாக சர்ச்சை உள்ளது. உதாரணமாக, சிலர் உள்ளாடைகள் அல்லது நீச்சலுடைகளில் போஸ் கொடுக்கும்படி கேட்கப்படுவர்.
உள்ளூர் ஊடக செய்திகளில் வரும் தகவல்களின்படி, விளையாட்டு உடையில் தோன்றும் வீரர்களின் புகைப்படங்கள், சில சமயங்களில் பாலியல் அல்லது தீங்கிழைக்கும் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றால், குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 3 மில்லியன் ஜப்பானிய யென் (£17,500; $22,000) வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்பேசி மூலம் ஆபாச படம் எடுப்பதன் மூலம் நடக்கும் குற்றங்களுக்கு எதிராக வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மக்களின் குரல்கள் ஒலித்த வேளையில் இந்த மசோதா அறிமுகமாகவிருக்கிறது.
2021ஆம் ஆண்டில் ரகசிய புகைப்படம் எடுத்ததற்காக 5,000க்கும் மேற்பட்டோரை ஜப்பானிய காவல்துறையினர் கைது செய்தனர். இந்த எண்ணிக்கை 2010இல் பதிவான கைதுகளின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட தேசிய விமான ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் கணக்கெடுப்பின்படி, ஜப்பானில் உள்ள 10 விமான பணிப்பெண்களில் ஏழு பேர் தங்கள் புகைப்படங்கள் ரகசியமாக எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
ஏற்கெனவே, ஜப்பானில் உள்ள பெரும்பாலான செல்போன் உற்பத்தியாளர்கள் ரகசிய படப்பிடிப்பைத் தடுக்க, தங்கள் மொபைல் சாதனங்களில் கேமரா கிளிக் சத்தம் அதிகமாக கேட்கக்கூடிய வகையில் ஷட்டர் ஒலிகளை நிறுவியுள்ளனர்.
பல ஆசிய நாடுகளில் 'வோயூரிஸத்திற்கு' எதிராக சட்டங்கள் உள்ளன, ஆனால் ஒவ்வொன்றிலும் அவற்றின் அமலாக்கத்தின் தீவிரம் மாறுபடும்.
தென் கொரியாவில், பாலியல் ரீதியிலான படங்களை ரகசியமாக படம்பிடித்த குற்றவாளிகளுக்கு 10 மில்லியன் வோன் (£6,000; $7,500) வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஆனால் கொரிய பெண் வழக்கறிஞர்கள் சங்கம், 2011 மற்றும் 2016க்கு இடையில் நீதிமன்றத்திற்குச் சென்ற 2,000 சட்டவிரோத படப்பிடிப்பு வழக்குகளில் 5% மட்டுமே சிறைத்தண்டனைக்கு வழிவகுத்தன என்று கூறுகிறது.
சிங்கப்பூரில், ஒருவருக்கு வோயூரிஸம் குற்றம் நிரூபணமானால் , அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம், கசையடி அல்லது இந்த தண்டனைகளின் கலவையை அவர் சந்திக்க நேரிடும்.
அங்கு 14 வயதுக்கு குறைவான பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கிய வோயூரிஸ்டிக் குற்றங்களுக்கு, கட்டாய சிறை தண்டனை, அபராதம் மற்றும் கசையடி தண்டனை விதிக்கப்படும்.
2019ஆம் ஆண்டில் பலர் பாலியல் வன்புணர்வு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்த ஜப்பான் அதன் தண்டனை சட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வர உத்தேசித்து வருகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரியில், ஜப்பானிய நீதித்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற குழு, பாலியல் செய்கைக்கு ஒப்புகை தெரிவிக்கும் வயதை 13-ல் இருந்து 16-ஆக உயர்த்த பரிந்துரைத்தது. பாலியல் வன்புணர்வு தொடர்பான சம்பவத்தை பதிவு செய்யும் கால வரம்புகள் 10 ஆண்டுகளில் இருந்து 15 ஆக அதிகரிக்கப்படும்.
இந்த அமைச்சக குழுவின் முன்மொழிவு சிறார்கள் தவறான பாதைகளுக்கு செல்வதை தடுக்கவும் பாலியல் வன்புணர்வுக்கான விளக்கத்தை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகின் வளர்ந்த நாடுகளில் பாலியல் செய்கை ஒப்புதலுக்கான வயதைக் குறைவாகக் கொண்டுள்ள நாடாக ஜப்பான் உள்ளது. மேலும் G7 நாடுகள் குழுவில் இருக்கும் உறுப்பு நாடுகளில், பாலியல் செய்கை ஒப்புகைக்கான குறைந்த வயது வரம்பை நிர்ணயித்த நாடாக ஜப்பான் இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்