ஹீரோ விஜய் சங்கர்! ஒரே ஓவரில் குஜராத் அணிக்கு திருப்புமுனை - கோட்டைவிட்ட கொல்கத்தா

கேகேஆர் Vs ஜிடி

பட மூலாதாரம், KKR

பிரசுரிக்கப்பட்டது

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் இன்றைய ‘ஹீரோ’ விஜய் சங்கர்தான். என்ன மாதிரியான ஃபினிஷிங், அதிரடி ஆட்டம். வருண் சக்கரவர்த்தியின் 17-வது ஓவரில் மட்டும் ‘டீப் மிட் விக்கெட்’, ‘டீப் ஸ்குயர் லெக்’, ‘ஆப்சைட்’ என 3 சிக்ஸர்களை விஜய் சங்கர் பறக்கவிட்டார்.

போட்டி நெருக்கடியாகச் செல்லும் என குஜராத், கொல்கத்தா ரசிகர்கள் எதிர்பார்த்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் சிக்ஸர்கள், பவுண்டரிகளை விளாசி குஜராத் டைட்டன்ஸ் அணியை விஜய் சங்கர் எளிதாக வெற்றிபெறச் செய்தார்.

ஒரே ஓவரில் மாற்றம்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றி ஒரே ஓவரில் (17-வது ஓவர்) அதுவும் விஜய் சங்கரால் முடிவு செய்யப்பட்டது. விஜய் சங்கரின் ஆக்ரோஷமான ஆட்டம், குஜராத் வெற்றியை சொல்லி அடித்தது.

தமிழக வீரர்கள் யாருடைய செயல்பாடு சிறப்பாக இருந்தது என்பதை நிரூபிக்க அவர்களுக்குள் போட்டி போட்டிக்கொண்டது போலத்தான் இன்றைய ஆட்டம் இருந்தது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் ஜெகதீசன், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஒருபக்கம் ஆட, குஜராத் டைட்டன்ஸ் அணியில் விஜய் சங்கர் ஆகியோருக்கு இடையே மறைமுகப் போட்டி இருந்தது போலத்தான் இருந்தது. ஆனால், அதில் இறுதியாக விஜய் சங்கர் தனது அதிரடியான பேட்டிங்கால் ஹீரோவாக ஜொலித்தார்.

கடைசி 5 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டது. பந்துகளைவிட தேவைப்படும் ரன்ரேட் அதிகமாக இருந்ததால் போட்டி நெருக்கடியாகச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

விஜய் சங்கரின் சிக்ஸர் மழை

ஆனால், 16 –வது ஓவரில் இருந்து விஜய் சங்கர் தனது ஆட்டத்தின் கியரை மாற்றி டாப் கியருக்கு நகர்ந்தார். ரஸல் வீசிய 16வது ஓவரில் லாங் ஆன்திசையில் சிக்ஸர் அடித்து தனது சிக்ஸர் கணக்கை சங்கர் தொடங்கினார்.

வருண் வீசிய 17-வது ஓவர்தான் ஆட்டத்தின் திருப்புமுனை. விஜய் சங்கர், வருண் சக்கரவர்த்தி இருவருமே தமிழக அணியில் ஆடியிருந்தாலும் விஜய் சங்கரின் விஸ்வரூப ஆட்டத்தை இன்றுதான் வருண் பார்த்திருப்பார்.

வருண் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தை விஜய் சங்கர் டீப் மிட் விக்கெட்டிலும், 2வது பந்தை டீப் ஸ்கொயர் லெக்கிலும் இரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். விஜய் சங்கரின் பெரிய ஷாட்களை வருண் கண்கள் விரிய வியப்புடன் பார்த்தார்.

5வது பந்தில் லெக்-பையில் பவுண்டரியும், கடைசிப் பந்தில், ஆப்-சைடில் 3வது சிக்ஸரையும் விஜய் சங்கர் விளாசினார். 24 ரன்கள் இந்த ஓவரில் சேர்த்தபின் ஆட்டம் தலைகீழாக மாறி, குஜராத் டைட்டன்ஸ் பக்கம் திரும்பியது.

தலைகீழாக மாறிய ஆட்டம்

16வது ஓவர் தொடக்கத்தில் பந்துகள் குறைவாகவும், வெற்றிக்குத் தேவைப்படும் ரன்கள் அதிகமாக இருந்தது. ஆனால், 18-வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் அணிக்கு பந்துகள் அதிகமாகவும், தேவைப்படும் ரன் குறைந்து ஆட்டம் தலைகீழாக மாறியது.

ராணா வீசிய 18-வது ஓவரையும் விஜய் சங்கர் விட்டுவைக்கவில்லை. முதல் பந்தில் லெக்-திசையில் ஒரு பவுண்டரியும், 5வது பந்தில் பேக்வேர்ட் ஸ்குயர் லெக் திசையில் பெரிய சிக்ஸரையும் விளாசி 24 பந்துகளில் விஜய் சங்கர் மின்னல் வேக அரைசதத்தை அடித்தார்.

வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டநிலையில் ராணா வைடாக வீசியதால் குஜராத் அணி 13 பந்துகள் மீதமிருக்கையில் எளிதாக வென்றது.

ஹீரோவான விஜய் சங்கர்

கேகேஆர் Vs ஜிடி

பட மூலாதாரம், KKR

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இந்த வெற்றியை எளிமையாகப் பெற்றுக் கொடுத்தமைக்கு முக்கியக் காரணம் விஜய் சங்கர் மட்டும்தான் என்றால் மிகையல்ல. விஜய் சங்கர் பொறுப்புடன், இந்த கேமியோவை ஆடாமல் இருந்திருந்தால், டேவிட் மில்லரும் சேர்ந்து அடித்து ஆட வேண்டியதிருக்கும்.

ஆனால், விஜய் சங்கர் ‘நான் பார்த்துக்குறேன் கூல் டவுன்’ என்பதுபோல் அவரின் விளாசலை நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் மில்லர் ரசித்தார். விஜய் சங்கர் அடித்த ஒவ்வொரு சிக்ஸர், பவுண்டரியையும், பேட்டில் கைதட்டி ரசித்து, மில்லர் உற்சாகப்படுத்தினார்.

இந்த ஆட்டத்தில் சொந்த நாட்டு வீரர்களும், சொந்த மாநில வீரர்களும் சக நண்பர்கள் பந்துவீச்சை விளாசிய ஒற்றுமை சம்பவம் நடந்தது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் பந்துவீச்சை அதே நாட்டைச் சேர்ந்த குர்பாஸ்(கொல்கத்தா) வெளுத்து வாங்கினார்.

சேஸிங்கின்போது, தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சை மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் துவம்சம் செய்துவிட்டார்.

ரசிகர்களை வாணவேடிக்கை காட்டிய விஜய் சங்கர் 24 பந்துகளில் 51ரன்கள் சேர்த்து(5சிக்ஸர்கள்,2பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். துணையாக ஆடிய டேவிட் மில்லர் 18 பந்துகளில் 32 ரன்களுடன்(2சிக்ஸர்,2பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஒட்டுமொத்தத்தில் விஜய் சங்கரின் அசுரத்தனமான ஃபார்ம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும் வகையில் வலிமையான நடுவரிசை பேட்டிங்காக மாறியிருக்கிறது.

கடந்த ஆட்டத்தில் சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபினவ் மனோகர், திவேட்டியாவுக்கு வேலையே வைக்காமல் விஜய் சங்கர் கச்சிதமாக ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார்.

முதலிடத்தில் குஜராத்

கேகேஆர் Vs ஜிடி

பட மூலாதாரம், @KKRiders

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்விகளுடன், 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நிகர ரன்ரேட் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னெள அணியைவிடக் குறைவாக இருந்தபோதிலும், புள்ளிக்கணக்கில் முதலிடத்தை குஜராத் டைட்டன்ஸ் பெற்றுள்ளது.

2வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 3வது இடத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும், 4வது இடத்தில் சிஎஸ்கே அணியும் உள்ளன. 3 அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் நிகர ரன் ரேட் அடிப்படையில் போட்டி போடுகின்றன. நாளை நடக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆட்டத்துக்குப்பின் சிஎஸ்கே அணியின் தரவரிசை மாறக்கூடும்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

சேஸிங்கில் கிங்

குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 4 போட்டிகளை வெளி மாநிலத்தில் விளையாடி 4 ஆட்டங்களையும் வென்றுள்ளது. டெல்லி, பஞ்சாப், லக்னெள, கொல்கத்தாவில் ஹர்திக் பாண்டியா ஆர்மி வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சேஸிங் என்றாலே அல்வா சாப்பிட்டது போன்றதுதான். கடந்த காலப் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், கடந்த 12 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே குஜராத் அணி தோற்றுள்ளது, மற்ற 11 ஆட்டங்களையும் சேஸிங்கில் வென்றுள்ளது.

கில் அதிரடி தொடக்கம்

180 ரன்களை துரத்திய குஜராத் அணிக்கு சுப்மான் கில், சாஹா இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சுப்மான் கில் பேட்டிங்கை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ரஸல் வீசிய 2வது ஓவரில் இருந்து கில் பேட்டிலிருந்து பவுண்டரிகள் பறந்தன. அவரின் ஒவ்வொரு ஷாட்டும் அற்புதமானவை.

அதிலும் ஹர்ஷித் ராணா வீசிய 3வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார். 2வது பந்தில் ஸ்டான்ட்ஆன் பொஷிசனில் இருந்து டீப் எக்ஸ்ட்ரா கவரில் அடித்த பவுண்டரி அழகு.

தொடக்க ஆட்டக்காரர் சாஹா-கில் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது. தொடக்கத்தில் இருந்தே ஷாட்கள் ஆட திணறிய சாஹா 10 ரன்னில் ரஸல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, கில்லுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஏற்கெனவே கால்காப்பில் வாங்கி, அப்பீலில் இருந்து கில் தப்பித்த நிலையில், ஹர்திக் பாண்டியா கால்காப்பில் வாங்கி 26 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அரைசதத்தை நோக்கி நகர்ந்த கில் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மில்லர், விஜய் சங்கர் ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் 87 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர்.

நூர், லிட்டல் கட்டுக்கோப்பு பந்துவீச்சு

பந்துவீச்சிலும் குஜராத் அணி சிறப்பாகவே செயல்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குர்பாஸ் ஆட்டத்தால் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்ற நிலையில் குஜராத் அணியின் ஜோஸ் லிட்டல், நூர் முகமது, முகமது ஷமி ஆகியோர் பெரிய ஸ்பீடு பிரேக்கர் அமைத்தனர்.

4 ஓவர்கள் வீசிய ஜோஸ் லிட்டல் 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். ஜோஸ் லிட்டல் பந்துவீச்சில் காட்டிய வேறுபாடுகள், ஸ்லோவர் பந்துகள், பவுன்ஸர்கள் கொல்கத்தா பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றன. லிட்டல் வீசிய முதல் இரு ஓவர்கள், 7-வது மற்றும் 9-வது ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே வி்ட்டுக்கொடுத்தார்.

ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் முகமதுவும் தனது ஸ்லோவர் பந்துகளாலும், லைன் லென்த்தாலும் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ரன்சேர்க்கும் வேகத்தைக் குறைத்தார். நூர் முகமது 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். அதேநேரம், சர்வதேச வீரர் ரஷித் கான், 4 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினார். 4 ஓவர்களில் 54 ரன்களை வழங்கி ஐபிஎல் தொடரில் மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.

வேகப்பந்துவீச்சாளர் ஷமி ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதத்தை பயன்படுத்தி பவர்ப்ளே ஓவருக்குள், தாக்கூர், ஜெகதீசன் விக்கெட்டுகளை சாய்த்து கொல்கத்தாவுக்கு நெருக்கடி அளித்தார்.

ஆனால், விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும், குர்பாஸ் மட்டும் தனி ஆவர்த்தனம் செய்து ஆடி வந்தார். இதனால் ஸ்கோர் 200 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ரஸலும் கடைசி நேரத்தில் கேமியோ (34 ரன்கள்) ஆடினார், ஆனால், 200 ரன்களுக்குள் குறைவாகவே சேர்த்தது. நடுப்பகுதி ஓவர்களில் குஜராத் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகப் பந்துவீசியதே கொல்கத்தா ரன்ரேட் குறையக் காரணமாகும்.

இதே ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம்

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “நூர் முகமது, லிட்டில் இருவரும் போட்டியை எங்கள் பக்கம் இழுத்துவிட்டனர். குர்பாஸ் பேட்டிங் அற்புதமாக இருந்தது. நூர், லிட்டல் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. எந்த சூழலாக இருந்தாலும் வெற்றி பெறுவோம் என நினைத்தோம், நல்ல கிரிக்கெட்டை ஆடினோம். விஜய் சங்கர் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது, நம்பிக்கையுடன் அருமையான ஃபார்மில் இருக்கிறார், அவரின் ஷாட்கள் ஆட்டத்தின் முடிவை மாற்றிவிட்டன. இதேபோன்ற ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

குர்பாஸ் மிரட்டல் ஆட்டம்

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை குர்பாஸ்(81ரன்கள்) (39பந்துகள், 7 சிக்ஸர், 5பவுண்டரிகள்), ரஸல்(34) ஆகியோரைத் தவிர பெரிதாக எந்த பேட்ஸ்மேனும் நம்பிக்கையளிக்கவில்லை.

குர்பாஸ் ஆட்டத்தைப் பற்றி குறிப்பிட்டே தீர வேண்டும். குஜராத் பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கி 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவரின் ஷாட்களையும், ரன் வேகத்தையும் பார்த்தபோது, 200 ரன்களை கொல்கத்தா அணி தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நடுவரிசையில் ஷர்துல் தாக்கூர்(0), நிதிஷ் ராணா(4), வெங்கடேஷ்(11), ரிங்கு சிங்(19) என ஏமாற்றம் அளிக்கும் வகையில் பேட் செய்ததும், நல்ல பார்ட்னர்ஷிப் அமையாததுமே தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

சேஸிங்கிற்கு போதாது

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 200 ரன்களை எளிதாகச் சேர்க்கக்கூடிய தன்மை கொண்டது. இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் என்பது ஓரளவுக்கு டிபெண்ட் செய்யக்கூடிய ஸ்கோர் என்றாலும், குஜராத் அணியில் இருக்கும் வலிமையான பேட்ஸ்மேன்கள் வரிசை உள்ள அணிமுன் இதுபோதுமானது இல்லை.

நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை

தோல்விக்குப்பின் கொல்கத்தா கேப்டன் ராணா கூறுகையில் “ 20 முதல் 25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். குஜராத் போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக கேட்சுகளை கோட்டைவிட்டிருக்கக் கூடாது. முடிவுகள் எவ்வாறு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் கேட்சுகளை விட்டிருக்ககூடாது. குர்பாஸ், ரஸல் தவிர மற்றவர்கள் சரியாக விளையாடவில்லை. நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களும் கிடைக்கவில்லை.

அவ்வாறு பார்ட்னர்ஷிப் இருந்தால்,ஸ்கோர் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். நடுப்பகுதி ஓவர்களில் ரன் சேர்க்கத் தவறிவிட்டோம், வாய்ப்பை தவறவிட்டோம். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கிச் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும். இல்லாவிட்டால் முடிவு நமக்கு சாதகமாக இருக்காது. பெரிய தருணங்களைவிட சிறிய தருணங்கள் முக்கியமானவை,” எனத் தெரிவித்தார்

பிறந்தநாள் பேபி ரஸல்

ஆன்ட்ரூ ரஸலுக்கு இன்று பிறந்தநாள் மட்டுமல்ல கொல்கத்தா அணிக்காக 100வது போட்டியில் களமிறங்கினார். இதனால் தனது அணிக்காக வெற்றிக்கு கடுமையாக பந்துவீச்சு, பேட்டிங்கிலும் உழைத்தார். ஆனால், ரஸல் பந்துவீச்சில் இரு கேட்சுகளை தவறவிட்டனர். இரு கேட்சுகளும் ஒருவேளை பிடிக்கப்பட்டிருந்தால், ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டிருக்கும். அதில் 2வது கேட்ச் மில்லருக்கு கோட்டைவிடப்பட்டது.

ரஷித் கானுக்கு 100வது ஆட்டம்

அதேபோல குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கானுக்கும் இது 100-வது ஐபிஎல் போட்டியாகும். 2017ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்ட ரஷித் கானை, குஜராத் அணி ஏலத்தில் விலைக்கு வாங்கியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: