You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யா: மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதலின்போது என்ன நடந்தது? அதற்கு யார் பொறுப்பு?
மாஸ்கோவின் எல்லையில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபிசி சரிபார்த்த வீடியோ காட்சிகளின்படி, வடமேற்கு புறநகர் கிராஸ்னோகோர்ஸ்கில், குறைந்தது நான்கு பேர் உடல் முழுவதும் மறைத்தவாறு உடை அணிந்துகொண்டு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருந்தது. அப்போது அரங்கிற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது தீவிரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் கட்டடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது மட்டுமின்றி, மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில் பலியானவர்களில் குழந்தைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்த "பயங்கரவாத தாக்குதலை" கடுமையாக கண்டனம் செய்துள்ளது.
இணையத்தில் பரவிவரும் சரிபார்க்கப்படாத அறிக்கையின்படி, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஐஎஸ் தீவிரவாதக் குழு இருப்பதாகக் கூறப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)