'குறைந்த விலையில் தங்கக் காசு, ரூ.8 கோடி மோசடி': காவலர்களையே ஏமாற்றியதாக கைதான காவல் ஆய்வாளரின் பின்னணி

சென்னை, தங்கக் காசு மோசடி, காவல் துறை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, கைதான காவல் ஆய்வாளர் ஷீலா மேரி மற்றும் பிரபுமணி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு போலி நிதி நிறுவனங்களிடம் பணத்தை இழக்கும் பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளிப்பது வழக்கம்.

ஆனால், காவல் ஆய்வாளர் ஒருவரே தங்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்துவிட்டதாகப் பொதுமக்கள் புகார் அளித்துள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

குறைந்த விலையில் தங்கக்காசு மற்றும் வீட்டு மனை பெற்றுத் தருவதாகக் கூறி 8.17 கோடி ரூபாயை மோசடி செய்ததாக, காவல் ஆய்வாளர் உள்பட நான்கு பேரை ஜூன் 7 ஆம் தேதி காவல்துறை கைது செய்துள்ளது.

முன்னதாக, மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக காவல் ஆய்வாளரை சென்னை வடக்கு காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். என்ன நடந்தது?

சென்னையில் தனியார் வங்கி ஒன்றில் கிளை மேலாளராகப் பணிபுரிந்து வரும் வெங்கட்ராமன் என்பவர், கடந்த மே மாதம் சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

'சந்தை விலையைவிட மிகக் குறைவு'

சென்னை கொடுங்கையூரில் விநாயகா என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் 89.32 லட்ச ரூபாயை தான் முதலீடு செய்திருந்ததாக, புகார் மனுவில் அவர் கூறியிருந்தார்.

அவர் கூறியுள்ள தகவலின்படி, '2023 ஆம் ஆண்டில் ராயபுரம் வங்கிக் கிளையில் மேலாளராக பணியாற்றியபோது, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளரை நிலையான வைப்புத் திட்டத்தில் (fixed deposit) முதலீடு செய்ய வைப்பதற்காக அணுகினேன்' எனத் தெரிவித்துள்ளார்.

'அந்த உதவி ஆய்வாளர் தனது உயர் அதிகாரியான காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் தம்பி நடத்தும் முதலீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்தினால் அதிக வருமானம் கிடைக்கும்' எனக் கூறியதாகப் புகாரில் கூறியுள்ளார்.

சந்தை விலையைவிட ஒரு கிராம் தங்கம் 1,400 ரூபாய்க்கும் குறைவான விலையில் தங்க நாணயங்களாக கிடைக்கும் என்றும் அதுவும் மிகக் குறுகிய காலத்திலேயே கிடைக்கும் என்றும் காவல் உதவி ஆய்வாளர் கூறியதாகப் புகாரில் வெங்கட்ராமன் குறிப்பிட்டுள்ளார்.

'காவல்துறைக்கு மட்டும் சலுகை'

பணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதனைத் தொடர்ந்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை வெங்கட்ராமன் சந்தித்துள்ளார்.

'அப்போது ஷீலா மேரி, 'காவல்துறையினருக்கு மட்டுமே இந்தச் சலுகையை வழங்குகிறேன். என்னுடைய தந்தை (புகார்தாரர்) ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் என்பதால் இந்தச் சலுகை கிடைக்கும்' எனக் கூறியதாகப் புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

காவல் ஆய்வாளர் கூறியதையடுத்து, கொடுங்கையூரில் உள்ள விநாயகா என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு வெங்கட்ராமன் சென்றுள்ளார். அங்கு அவரிடம் பேசிய ஷீலா மேரியின் உறவினர் பிரபுமணி, 'வடசென்னையில் உள்ள பெரும்பாலான காவலர்கள் தங்களிடம் முதலீடு செய்துள்ளனர்' எனக் கூறியதாக புகாரில் வெங்கட்ராமன் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கூற்றுப்படி, அதிகபட்ச தொகையை முதலீடு செய்யுமாறு பிரபுமணி கூறியதால் கடன் பெற்றும், மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் 2024 ஏப்ரல் முதல் 2024 ஜூலை வரை பல்வேறு தவணைகளாக 89 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயை வெங்கட்ராமன் கொடுத்துள்ளார்.

இந்தத் தொகை பிரபுமணி மற்றும் விநாயகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு தங்க நாணயங்களை வழங்காமல் பிரபுமணி என்னைத் தவிர்க்கத் தொடங்கினார். ஒருகட்டத்தில் 27 லட்சத்து 81 ஆயிரம் ரூபாயை பல்வேறு தவணைகளில் கொடுத்தார். அதன்பிறகு தலைமறைவாகிவிட்டார்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் பணத்தை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீதமுள்ள 61 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயை மீட்டுத் தருமாறு புகார் மனுவில் வெங்கட்ராமன் கூறியுள்ளார். தன்னைப் போல பலரும் இதுபோல ஏமாந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பிரபுமணியை தனது சகோதரர் என காவல் ஆய்வாளர் ஷீலா மேரி கூறியிருந்தார். ஆனால், அவர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் என்பது பின்னர் தெரியவந்ததாகவும் புகாரில் வெங்கட்ராமன் கூறியிருந்தார்.

'வாட்ஸ்ஆப் குழு.. மாத வட்டி'

புகாரின்பேரில், சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வந்தது. காவல் ஆய்வாளர் மோசடியில் ஈடுபட்டதாக 56 பேர் புகார் அளித்துள்ளதாக, ஜூலை 7 ஆம் தேதி காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

"2023 ஆம் ஆண்டில் வாட்ஸ்ஆப் குழு மூலம் முதலீட்டுத் திட்டம் ஒன்றை ஷீலா மேரி அறிமுகப்படுத்தினார். குறைந்த விலையில் தங்க நாணயங்களை வழங்குவதாகவும் வைப்புத் தொகைக்கு ஏற்ப மாதம் வட்டி தருவதாகவும் உறுதியளித்தார். இதனைச் செயல்படுத்தவே விநாயகா என்டர்பிரைசஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது" என்கிறார், காவல்துறை அதிகாரி ஒருவர்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திட்டத்தை பிரபலப்படுத்தும் வேலையில் ஷீலா மேரி ஈடுபட்டு வந்தார். வடசென்னையில் உள்ள காவலர் குடியிருப்புகளில் வசிக்கும் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இதில் முதலீடு செய்தனர்." என்கிறார் அவர்.

"முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் காவல் ஆய்வாளரே பேசியதால் யாருக்கும் எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை," எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "தொடக்கத்தில் ஷீலா மேரியுடன் சென்று குறைந்த விலையில் தங்க நாணயங்களை பிரபுமணி விநியோகித்துள்ளார். இதனை பார்த்து ஏராளமானோர் முதலீடு செய்ய முன்வந்தனர். ஆனால், அடுத்து வந்த மாதங்களில் அவர்கள் உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை." என்கிறார்.

56 பேரிடம் 8 கோடி ரூபாய் மோசடி என புகார்

சென்னை, தங்கக் காசு மோசடி, காவல் துறை

பட மூலாதாரம், GCP

காவல்துறையின் விசாரணையில் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் என சுமார் 56 பேரிடம் 8 கோடியே 17 லட்ச ரூபாயை இந்நிறுவனம் ஏமாற்றியது தெரியவந்ததாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வழக்கில் பிரபு என்கிற பிரபுமணி, ஷீலாமேரி, விநாயகா என்டர்பிரைசஸ் நிறுவன ஊழியர்கள் செந்தில்குமார், கல்பனா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 9 ஆம் தேதியன்று சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் பிரபுமணியை கைது செய்தது. அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நிதி மோசடியில் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவரை கடந்த ஜூன் 16 ஆம் தேதியன்று சென்னை வடக்கு காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தான் கைது செய்யப்படலாம் என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷீலா மேரி முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். 'அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது' என அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு காட்டப்படவே, கடந்த 7 ஆம் தேதி அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சி.குமரப்பன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, நிதி மோசடி வழக்கில் ஷீலாமேரியை செவ்வாய்க்கிழமையன்று பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் கைது செய்துள்ளது.

'தவறைக் கண்டறியாத காவல்துறை'

சென்னை, தங்கக் காசு மோசடி, காவல் துறை

பட மூலாதாரம், Karunanidhi

படக்குறிப்பு, ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி

காவல்துறையினர் மத்தியிலும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே இந்தச் சம்பவம் காட்டுவதாகக் கூறுகிறார், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்ததால், அதனை நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர்." என்கிறார்.

"ஷீலா மேரி தரப்பினரிடம் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரையில் பலரும் ஏமாந்துள்ளதால், அவர்கள் வெளியில் சொல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன." என்கிறார் கருணாநிதி.

தாங்கள் ஏமாந்த தகவல் வெளியில் வந்தால் துறைரீதியாக கெட்ட பெயர் ஏற்படும் என்பது ஒரு காரணமாக உள்ளதாகக் கூறும் அவர், " ஆனால், மோசடி செய்தவர்களின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தால் பணத்தை இழந்தது யார் யார் என்பது தெரிந்துவிடும்." என்கிறார்.

நிதி மோசடி தொடர்பாக 56 பேர் வரை புகார் கொடுத்துள்ளதாகப் பொருளாதார குற்றத் தடுப்புக் காவல்துறை தெரிவித்தாலும், இதன் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது என, பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'விநாயகா என்டர்பிரைசஸ் நிறுவனம் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் இருந்தால் சென்னை பொருளாதார குற்றப்பிரிவை அணுகி புகார் தெரிவிக்கலாம்' எனக் கூறியுள்ளது.

"காவல்துறையில் பணியாற்றும் ஓர் அதிகாரி, இதுபோன்ற வர்த்தகங்களில் ஈடுபடுவதே தவறானது" எனக் கூறும் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, "காவல் எல்லைக்குள் எது நடந்தாலும் அதைக் கண்காணிக்கும் காவல்துறை, தங்கள் மத்தியில் நடந்த தவறைக் கண்டறிய முடியாமல் போய்விட்டது" என்கிறார்.

"அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் பலரும் பணத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்" எனக் கூறும் அவர், "எந்தவொரு நிதி சார்ந்த திட்டமாக இருந்தாலும் அதன் பின்னணியில் யார் இயங்குகிறார்கள் என்பதை ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு