'எடுபடாத மிரட்டல்கள்' - இரானுடன் மோதலை நிறுத்த டிரம்புக்கு உள்ள ஒரே சிறந்த வழி என்ன?

'எடுபடாத மிரட்டல்கள்' - இரானுடன் மோதலை நிறுத்த டிரம்புக்கு உள்ள ஒரே சிறந்த வழி என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜெர்மி போவன்
    • பதவி, சர்வதேச ஆசிரியர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் தொடர்பாகவும், பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாடு எட்டப்படும் சாத்தியம் குறித்தும் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், டிரம்ப் அமெரிக்காவின் அதிபர்.

துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் பின்வருமாறு கூறினார்.

"இனி அவர்களுடன் எனக்கு எந்தத் தொடர்பும் தேவையில்லை. அவர்கள் மதிப்பற்றவர்கள். மதிப்பற்றவர்கள் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் மிக மோசமான மனநிலை கொண்டவர்கள். மோசமான மனநிலை கொண்டவர்களால் அவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். மேலும் அவர்கள் கொடூரமான, வன்முறை குணம் கொண்டவர்கள்."

"அவர்களிடம் அணுஆயுதங்கள் இருந்தால், அவர்கள் அதைப் பயன்படுத்துவார்கள். என்னைப் பொறுத்தவரை, இது முடிந்துவிட்டது" என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், இந்த விஷயத்தில் இவைதான் அவரது கடைசி வார்த்தைகளா? நிச்சயமாக இல்லை.

இந்தப் போர் குறித்தும், தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் அவர் தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

அவரது கருத்துகள், வெற்றியை அறிவிப்பதிலிருந்து தொடங்கி, இரானிய நாகரிகத்தை அழித்துவிடுவோம் என்ற மிரட்டல்கள் வரை, பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவிப்பது வரை மாறிக்கொண்டே இருந்துள்ளன.

பின்னர் அவர் தனது சமீபத்திய அச்சுறுத்தல்களை மேலும் வலுப்படுத்தும் விதமாக, அமெரிக்கா "அநேகமாக இன்று இரவும் அவர்கள் மீது இன்னும் பலத்த தாக்குதலை நடத்தும்" என்று கூறினார்.

இரானைத் தாக்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் திறன் குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடல் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் உரிமை உள்ளிட்ட தனது அடிப்படை கோரிக்கைகளை கைவிடும்படி இரானை வற்புறுத்துவதற்கோ அல்லது இரான் ஆட்சி அதிகாரத்தின் உறுதியைக் குலைக்கும் அளவுக்கோ அமெரிக்காவால் இதுவரை எதுவும் செய்ய முடியவில்லை.

'எடுபடாத மிரட்டல்கள்' - இரானுடன் மோதலை நிறுத்த டிரம்புக்கு உள்ள ஒரே சிறந்த வழி என்ன?

பட மூலாதாரம், Getty Images

தற்போது என்ன நிலை?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

டிரம்பின் சமீபத்திய கடுமையான வார்த்தைத் தாக்குதல்களுக்குள் மறைந்திருந்த ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், பேச்சுவார்த்தைகள் தொடரும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.

பிப்ரவரி 28 அன்று போரின் முதல் நாளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரானின் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்காக இரான் சில நாட்கள் காத்திருந்ததால், இந்த பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான தாக்குதல்கள், அதேபோல் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் சில அரபு கூட்டாளிகள் மீதான தாக்குதல்கள் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டதைக் குறிக்கிறதா என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு தனது முக்கிய பேச்சுவார்த்தை பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரைக் குறிப்பிட்டு அவர், "எனக்குக் கவலையில்லை, அவர்கள் பேசலாம். ஆனால் அவர்கள் தங்களது நேரத்தை வீணடிக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்" என்றார்.

பின்னர், இரானிய ஆட்சி அதிகாரம் குறித்து, "அவர்கள் ஒரு பொய்யர்களின் கூட்டம்" என்றார்.

அமெரிக்க அதிபர் எவ்வளவு தான் ஆரவாரம் செய்தாலும், பேச்சுவார்த்தைகளைத் தவிர அவரிடம் வேறு சிறந்த வழிகள் இல்லை என்பதற்கான மற்றொரு ஒப்புதலாகவே இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

இஸ்ரேலுடன் இணைந்து, இரானிய ஆட்சியை அழிக்க அமெரிக்கா முயன்று தோற்றுப்போனது.

ஆனால், இந்த பேச்சுவார்த்தை செயல்முறை மிகவும் பலவீனமாக உள்ளது.

பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முயலும் மத்தியஸ்தர்களில் ஒருவர், சமீபத்திய நிகழ்வுகளை "நிச்சயமாக ஒரு பின்னடைவு" என்று விவரித்துள்ளார். மேலும், தற்போதைய சூழல் "மிகுந்த பதற்றமாக உள்ளது" என்றும் கூறப்படுகிறது.

ஏதேனும் ஒப்பந்தம் ஏற்பட்டாலும் அதை எதிர் தரப்பு மதித்து செயல்படுத்தும் என்ற நம்பிக்கை இரு நாடுகளுக்கும் இல்லாத நிலையில், சமீப நாட்களில் நடந்த சம்பவங்கள் இரண்டு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கு மிகவும் மோசமான சூழலை உருவாக்கியுள்ளன என்பதே அதன் பொருள்.

இரானின் மறைந்த அதி உயர் தலைவர் அலி காமனெயியின் இறுதிச் சடங்கு இந்த வாரம் நடைபெற்றது.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல் நடத்தியபோது நடந்த வான்வழித் தாக்குதலில் உயிரிழந்த இரானின் மறைந்த அதி உயர் தலைவர் அலி காமனெயியின் இறுதிச் சடங்கு இந்த வாரம் நடைபெற்றது.

மோதல்களின் மையப்புள்ளி எது?

இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே சமீபத்தில் நடந்த ராணுவ மோதல்களின் மையப்புள்ளி என்னவென்றால், பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இருந்த பழைய நிலைமைக்குத் திரும்பிச் செல்லக் கூடாது என்பதில் இரான் ஆட்சி உறுதியாக இருப்பதுதான்.

ஹோர்முஸ் நீரிணையின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ள இந்த ஆட்சி உறுதியாக உள்ளது.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் உட்பட, உலகளாவிய அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்தைத் தடுக்கும் திறன், உலகப் பொருளாதாரத்தின் மீது அதற்கு ஒரு பிடியை வழங்குகிறது.

அது ஒரு அணுஆயுதத்தை உருவாக்க முயற்சிப்பதற்கான சாத்தியக்கூறுகளை விட, மிகவும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு ஆயுதமாகும்.

ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க இரான் ஒப்புக்கொள்ளாது.

அதனால் தான், இனி பழைய நிலைக்குத் திரும்புவது சாத்தியமில்லை என்பதை உணர்த்துவதற்காக, இரானுக்கு சாதகமான பல சலுகைகள் நிறைந்ததாக இருந்தபோதிலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளது.

இந்த நீரிணையில் தனக்கு இருப்பதாக அது நம்பும் உத்தி உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, தேவைப்பட்டால் போர் தொடரும் அபாயத்தையும் ஏற்கத் தயாராக உள்ளது.


'எடுபடாத மிரட்டல்கள்' - இரானுடன் மோதலை நிறுத்த டிரம்புக்கு உள்ள ஒரே சிறந்த வழி என்ன?

பட மூலாதாரம், Getty Images

தங்களை அழிக்க நினைத்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தோல்வியால் இரானில் உள்ள ஆட்சி மேலும் துணிச்சல் பெற்றுள்ளது.

அவர்கள் தங்கள் தாக்குதலைத் தொடங்கியபோது கொல்லப்பட்ட உச்ச தலைவரின் இறுதிச் சடங்குகள், அந்த இஸ்லாமிய ஆட்சிக்கு வலுவான ஆதரவுத் தளம் உள்ளது என்பதை நிரூபித்துள்ளன.

உள்நாட்டு எதிர்ப்பு முற்றிலும் மறைந்துவிடவில்லை.

ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் தெருக்களில் இறங்கிப் போராடியதற்காக ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, போராட்டங்களை ஒடுக்குவதற்கு இந்த ஆட்சி இரக்கமின்றிப் பயன்படுத்திய வன்முறைக் காரணமாக, அந்த எதிர்ப்பு தற்போது வெளியில் தெரியாமல் அடங்கிப் போயுள்ளது.

இரு தரப்பிற்கும் இடையிலான இந்த மோதல் தீவிரமடைவதைத் தடுக்க முடிந்தால், கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்து செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தத்தை இரானுடன் செய்ய முடியும் என்று பேச்சுவார்த்தை செயல்முறையில் ஈடுபட்டுள்ள மத்தியஸ்தர்கள் நம்புகின்றனர்.

அந்த ஒப்பந்தத்தில் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள இரானிய சொத்துக்களை விடுவிப்பது, இரான் தனது எண்ணெயை விற்க அனுமதிப்பது மற்றும் அந்த ஆட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையின் மீதான இரானின் அதிகாரத்தை அங்கீகரிப்பது போன்ற அம்சங்கள் இடம்பெறலாம்.

இதற்குப் பதிலாக, யுரேனியம் செறிவூட்டுவதற்கான வரம்புகளை இரான் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஐ.நா அணுசக்தி ஆய்வாளர்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும், மேலும் டிரம்ப் "அணுசக்தி தூசு" என்று அழைக்கும் இருப்புக்கான கணக்கைக் காட்ட வேண்டும். அதாவது, ஏற்கனவே அணுஆயுதம் தயாரிக்கக்கூடிய அளவிற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பு விவரங்களை அளிக்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு