You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கிரிக்கெட் ஆடினால் மட்டும் போதாது, 20 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்த வேண்டும்' - வைபவ் சூர்யவன்ஷி பேட்டி விவரம்
இந்திய டி20 அணிக்குத் தேர்வாகியுள்ள 15 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்து புதிய நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை வைபவ் சூர்யவன்ஷியின் நேர்காணல் ஒன்றை சமூக ஊடகங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் பகிர்ந்தது. இதில் வைபவ் எதிர்காலத்தில் கிரிக்கெட் விளையாடுவது குறித்தும் தனது கனவுகள் குறித்தும் பேசினார். அவர் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்தும் பேசினார்.
அந்த நேர்காணலில், கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் விளையாடுவதே தனது கனவு என்று வைபவ் சூர்யவன்ஷி கூறியுள்ளார். "நான் வெறுமனே கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை, 10-20 ஆண்டுகள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது குறித்து என்ன சொன்னார்?
நேர்காணலின் போது வைபவிடம் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது.
வைபவ் சூர்யவன்ஷி தானும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புவதாகக் கூறினார்.
அவர், "நான் ரெட் பால் (சிவப்பு பந்து) போட்டிகளுக்காக நிறைய விளையாடுகிறேன். பயிற்சி செய்கிறேன். எனது மாநில அணிக்காகவும் ரெட் பால் போட்டிகளில் விளையாடியுள்ளேன். சர்வதேச அளவிலும் டெஸ்டில் நான் விளையாட வேண்டும், அதற்காகப் பயிற்சியும் பெறுகிறேன்" என்றார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் சுனில் கவாஸ்கரைச் சந்தித்த போது நடந்த உரையாடல் குறித்துக் கேட்டதற்கு வைபவ், "பலர் இதை யோசிக்கிறார்கள், அவரும் கூட எதிர்காலத்தில் ரெட் பால் கிரிக்கெட் விளையாடப் போகிறீர்களா இல்லையா என்று பேசினார். அதற்கு நான், நான் ரெட் பால் மூலம் நிறைய பயிற்சி செய்துள்ளேன், செய்துகொண்டும் இருக்கிறேன் என்று பதிலளித்தேன். எனது மாநிலத்திற்காகவும் நான் நிறைய ரெட் பால் போட்டிகளில் விளையாடியுள்ளேன். நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும், அதற்காக நான் ரெட் பால் பயிற்சி செய்கிறேன்" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "இந்த வடிவத்தில் (டி20) நான் இப்படி பேட்டிங் செய்கிறேன், ஏனெனில் இந்த வடிவத்தின் தேவை அதுதான். ரெட் பால் போட்டிகளில் என்ன தேவை இருக்கிறதோ, அந்த வகையில் எனது பேட்டிங்கில் மாற்றம் செய்வேன். ஒருநாள் போட்டிகளில் என்ன தேவை இருக்கிறதோ, அந்த வகையில் மாற்றுவேன். என்னுடைய கனவு கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் விளையாடுவதுதான்" என்றார்.
ஐபிஎல் ஒரு நீண்ட தொடர் என்றும், இதில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் தகுதியுடன் இருக்க வேண்டும் என்றும் வைபவ் கூறினார்.
அவர், "போட்டிக்கு முன்பு நாம் எப்படி விளையாட வேண்டும் என்று முடிவு செய்வோம். போட்டிக்கு பின்பும் அமர்ந்து அடுத்த போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வோம். நம்மால் செய்ய முடியாமல் போனது என்ன, என்ன தவறு நடந்தது, அதை அடுத்த போட்டியில் மீண்டும் செய்யக்கூடாது என்று பேசுவோம்" என்றார்.
"இதனால் அணிக்கு நிறைய பலன் கிடைத்தது. பரஸ்பரம் பேசிக் கொள்ளும் போது நிறைய பலன் கிடைக்கிறது, நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது."
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்ததற்காக வைபவ் ஆரஞ்சு தொப்பியை வென்றார்.
இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், "ஐபிஎல்லில் யாருக்காவது ஆரஞ்சு தொப்பி கிடைப்பதைப் பார்க்கும் போதெல்லாம், நானும் அதைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்" என்றார்.
"இன்று ஆரஞ்சு தொப்பி கிடைத்துவிட்டது, ஆனால் எனது ஆட்டத்தை சிறப்பாக அமையச் செய்யுமாறு நான் கடவுளிடம் ஒருபோதும் பிரார்த்தனை செய்வதில்லை. கடவுளிடம் நான் கேட்பதெல்லாம் அவரது ஆசீர்வாதம் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான். எனக்கு ஆற்றலைக் கொடுத்து என்னை வலுவாக வைத்திருக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்."
"எந்தவொரு பந்துவீச்சாளருக்கு எதிராகவும் எப்படி விளையாட வேண்டும் என்று நான் தனி அறையில் யோசிப்பேன். முன்னதாகவே தயாரிப்புடன் இருந்தால், போட்டியின் போது நீங்கள் மனரீதியாக உங்களை வலுவாக உணர்வீர்கள். நீங்கள் இறுதிப்போட்டியில் விளையாடுகிறீர்கள் என்றால், அங்கு உங்களை மனரீதியாக மிகவும் வலுவாக வைத்திருக்க வேண்டும்."
'ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணி கிடைத்ததில் மகிழ்ச்சி'
ரசிகர்களிடமிருந்து தனக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக அவர் கூறினார்.
"போட்டிக்கு பிறகு நான் சமூக ஊடகங்களில் பார்த்தேன், நான் ஆட்டமிழக்கும் போது எனது ரசிகர்களின் குடும்பத்தினர் எப்படி ஏமாற்றமடைந்தார்கள் என்று. நான் நன்றாக விளையாடும் போது அவர்கள் கொண்டாடினார்கள். எனக்குக் கிடைக்கும் ஆதரவு, அன்பு மற்றும் ஆசீர்வாதம் காரணமாகத்தான் என்னால் விளையாட முடிகிறது" என்றார் அவர்.
"ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாததும், என்னால் அங்கு விளையாட முடியாததும் வருத்தமாக இருந்தது. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் நான்கு-ஐந்து கோப்பைகளையும் வெல்வோம் என்று நம்புகிறேன்."
"நான் இவ்வளவு நன்றாக விளையாடினாலும் எனக்காக இரண்டு அணிகள் மட்டுமே ஏன் ஏலம் கேட்டன என்று நான் முன்பு நினைத்துள்ளேன். ஆனால் இன்று நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இங்குள்ள சூழல் குடும்பம் போன்றது. எனது மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவு ஊழியர்கள் என அனைவரும் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்" என்றார் வைபவ் சூர்யவன்ஷி.
"நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் இறுதிப்போட்டியைப் பார்க்கும் போது, எனது அணியும் இறுதிப்போட்டியில் விளையாடியிருக்கக் கூடாதா என்று எனக்குத் தோன்றியது. நான் அமர்ந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன், விளையாடியிருந்தால் ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் கோப்பையை வென்றிருக்கும்."
'கோலியுடன் பேசியது ஒரு கனவு போல இருந்தது'
"வரவிருக்கும் 20 ஆண்டுகளுக்கு நான் எப்போது விளையாடினாலும், இவர் தனியாகவே ஆட்டத்தை முடித்து வைக்கக்கூடிய ஒரு வீரர் என்று மக்கள் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த ஆதிக்கம் தெரிய வேண்டும்."
"வெறுமனே கிரிக்கெட் ஆடுவதற்காக விளையாடக் கூடாது, பத்து ஆண்டுகள், இருபது ஆண்டுகள் வரை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்."
"நன்றாக விளையாட வேண்டும். நான் ரசிப்பதற்காகவே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். எனவே, விளையாடும் வரை நன்றாக விளையாட வேண்டும், ரசிக்க வேண்டும்."
"நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தேன். நான் எனது தொப்பியில் அவரது ஆட்டோகிராஃப் வாங்கினேன். நான் ஆரஞ்சு தொப்பியை அணியாத போது, அந்தத் தொப்பியைத்தான் அணிகிறேன். எனது தோளில் கை போட்டு அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது, அது ஒரு கனவு போல இருந்தது."
"நான் விராட் கோலியுடன் பேசுகிறேன் என்றே எனக்குத் தோன்றவில்லை. ஒரு மூத்த அண்ணனைப் போல நான் என்ன நன்றாகச் செய்கிறேன், நான் என்ன நன்றாகச் செய்ய முடியும் அல்லது செய்ய வேண்டும் என்று எனக்குப் புரியவைத்தார். எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும், எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்."
"ஜே ஷாவும் என்னைச் சந்திக்கும் போது நிறைய விஷயங்களைச் சொல்கிறார். கவனத்துடன் இருக்க வேண்டும், இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். கால்களைத் தரையில் வைத்துக்கொண்டு உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்பார்."
பிகார் மற்றும் பிகார் மக்களின் ஆதரவு பற்றிக் கேட்டதற்கு, அங்குள்ள மக்கள் எந்த கேள்வியும் இன்றி தன்னை ஊக்குவிக்கிறார்கள் என்று கூறினார்.
அவர், "நீங்கள் சமூக ஊடகங்களில் பார்த்தால், அவர்கள் என்னை எப்படி ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம், அது நம்ப முடியாதது. நான் தவறாக விளையாடியிருக்கலாம், ரன்கள் எடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் என் மீது காட்டும் நேர்மறையான அணுகுமுறை மற்றும் ஆதரவு பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவுதான். பாட்னா விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது அங்கிருக்கும் சூழலே தனித்துவமானது. வீட்டிற்கு வந்துவிட்டது போல, பாதுகாப்பாக இருப்பது போல தோன்றும், எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போது வெளியே செல்வது கொஞ்சம் கடினமாகிவிட்டது... இல்லை, நான் பகலில், மாலையில், இரவில் நடந்து செல்லத்தான் முயற்சி செய்கிறேன். அது ஒரு தனி பாசம். முகம் தெரியாதவர்களிடம் பேசினாலும், பல நாட்களாகத் தெரிந்தவர்களைப் போல இருக்கும். எதையாவது கேட்டால் மிகவும் அன்பாகப் பேசுவார்கள்."
"நான் எனது வேலையைச் செய்கிறேன். எனது கவனம் அப்படியே இருக்க வேண்டும். மற்றவை எல்லாம் தானாகக் கிடைக்கும்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு