You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரூ.15 லட்சம் கோடி 'போலி கணக்கு' காட்டிய நிறுவனத்தில் எல்ஐசி செய்த பெரும் முதலீடால் எழும் கேள்விகள்
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைய (செபி) கண்காணிப்பின் கீழ் இருக்கும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், 2020-21 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தனது வருவாயை ரூ.15.15 லட்சம் கோடி அளவுக்கு அதிகமாகக் காட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், மும்பை பங்குச்சந்தைக்கு (பிஎஸ்ஈ) அளித்த அறிக்கையில் செபியின் இந்தக் குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் மறுத்துள்ளது.
வருவாய் தொடர்பான சரியான புள்ளிவிவரங்களையே வெளியிட்டுள்ளதாகவும், எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உண்மையில், ஜூன் 4 அன்று செபி வெளியிட்ட 109 பக்க உத்தரவில், இந்த நிறுவனம் தனது வெளிநாட்டு துணை நிறுவனங்கள் மூலம் பல ஆண்டுகளாக தனது செயல்பாடுகளை மிகைப்படுத்திக் காட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
செபி கூற்றுப்படி, கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) இந்த நிறுவனத்தின் கணக்குகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால், தோராயமாக 158.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.15 லட்சம் கோடியே 16 ஆயிரம் கோடி) வருவாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொகையானது, கடந்த ஐந்து நிதியாண்டுகளில் அந்நிறுவனம் காட்டிய மொத்த வருவாயில் தோராயமாக 99.8 சதவிகிதமாகும்.
எல்.ஐ.சி முதலீடு தொடர்ந்து அதிகரிப்பு
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நகைத் தயாரிப்பு மற்றும் தங்கம் சுத்திகரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு 1995 ஆம் ஆண்டில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையில் கிடைக்கப் பெறும் அதன் பங்குதாரர் நிலவரம், கடந்த 10 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் என்று பொதுவாக அறியப்படும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதைக் காட்டுகிறது.
இந்தக் காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளின் பங்கு கிட்டத்தட்ட பெரிதாக ஒன்றுமில்லை என்கிற அளவிலேயே இருந்தது.
மார்ச் 2017 இல் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் 0.46 சதவிகித பங்குகளையே கொண்டிருந்தன. இந்த பங்களிப்பு சிறு மாற்றங்களுடன் காலப்போக்கில் ஒப்பீட்டளவில் நிலையானதாகவே இருந்துள்ளது.
மார்ச் 2026க்கான நிறுவனத்தின் தரவுகள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) இந்நிறுவனத்தின் 10.80 சதவிகிதப் பங்குகளைக் கொண்டிருந்ததைக் காட்டுகின்றன.
அதன் பங்குதாரர் முறையைப் பார்க்கும்போது, இந்நிறுவனத்தில் எல்ஐசி மட்டுமே ஒரே ஒரு பெரிய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளராக இருந்தது என்பதும் தெரியவருகிறது.
மார்ச் 2017 இல் எல்ஐசியின் பங்கு 1.19 சதவிகிதமாக இருந்தது, இது சுமார் 10 ஆண்டுகளில் 10.80 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமாக, தங்கம் மற்றும் நகைத் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தில் வேறு எந்தக் காப்பீட்டு நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை.
மார்ச் 2026 நிலவரப்படி, மற்ற காப்பீட்டு நிறுவனங்களுக்கு அதில் மிகக் குறைந்த அளவிலான பங்கு மட்டுமே இருந்தது.
அரசியலாக்கப்பட்ட விவகாரம்
இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மோதி அரசாங்கத்தைக் குறிவைத்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்ரா இதனை ஒரு ஊழல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு நீண்ட பதிவில், "ஐந்து ஆண்டுகளில், இந்நிறுவனம் ரூ. 15.5 லட்சம் கோடி அளவுக்குப் போலி வருவாயைக் காட்டியுள்ளது. சுவிஸ் நிறுவனமான வால்காம்பி எஸ்ஏ போன்ற வெளிநாட்டு துணை நிறுவனங்கள் மூலம் பெரும் வருவாயைப் பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் வாடிக்கையாளர் விவரங்களோ அல்லது அதற்கான ரசீதுகளோ அங்கு இல்லை.
அனுமதியின்றி விளம்பரதாரருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிதி மாற்றப்பட்டது. ஜூன் 3 அன்று, செபி இந்நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் இருந்து தடை செய்தது. நிறுவனத்தின் பங்குகள் 80% சரிந்தன. பங்குதாரர்களுக்கு ரூ. 12,726 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிறுவனத்தில் எல்ஐசி ரூ. 2,000 கோடி முதலீடு செய்திருந்தது, அதில் சுமார் ரூ. 1,600 கோடி நஷ்டமடைந்துள்ளது" என்று எழுதியுள்ளார்.
"மோதி அரசின் கண் முன்னாலேயே இந்த மோசடி ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்தது. பிரதமர், ராஜேஷ் மேத்தாவுடன் புகைப்படம் கூட எடுத்துக்கொண்டார். மோசடி செய்பவர்களும் சட்டத்திலிருந்து தப்பி ஓடுபவர்களும் மோதியின் கண் முன்னாலேயே தொடர்ந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கிறார்கள். கடந்த 12 ஆண்டுகளில் அவர்களில் ஒருவரைக் கூட இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வரவில்லை... 'நானும் உண்ண மாட்டேன், மற்றவர்களையும் உண்ண விடமாட்டேன்' என்ற அவரது வெற்று மற்றும் பொய் வார்த்தைகள் மீண்டும் ஒருமுறை பலமாக எதிரொலிக்கின்றன" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, "ஒரு நிறுவனத்தால் எப்படி 12 ஆண்டுகளாக ரூ. 15 லட்சம் கோடி மதிப்பிலான போலி ஏற்றுமதிகளைக் காட்டி, சிக்கிக்கொள்ளாமல் இருக்க முடிந்தது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வரி ஏய்ப்பு புகலிடங்களிலிருந்து வந்த இந்த 15 லட்சம் கோடி ரூபாய் பணம் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதா? இந்த நிறுவனத்தை யார் பாதுகாத்து வந்தார்கள்? அதிகாரத்தில் இருப்பவர்களுடன் இதற்கு என்ன தொடர்பு? இந்தப் புகைப்படம் ஒரு துப்பு கொடுக்கக்கூடும்" என்று எழுதியுள்ளார்.
பத்திரிகையாளர் ஸ்வாதி சதுர்வேதி எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.
"ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு எதிரான அசல் புகார், மார்ச் 2024 இல் செபியிடம் தாக்கல் செய்யப்பட்டது, அப்போது பிரபலமற்ற மாதபி பூரி புச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பின் தலைவராக இருந்தார். புகார் அளிக்கப்பட்டு 26 மாதங்களுக்குப் பிறகு, இந்நிறுவனம் ரூ. 15 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாயைத் தவறாகக் காட்டியுள்ளதாகக் கூறி செபி ஓர் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது" என்று எழுதியுள்ளார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தனது துணை நிறுவனமான வால்காம்பி எஸ்ஏ, தனது பல பில்லியன் டாலர் உலகளாவிய வணிகத்தின் முக்கிய தூணாக இருப்பதாக அந்நிறுவனம் கூறியது.
இருப்பினும், தணிக்கையில் அந்த துணை நிறுவனத்தின் உண்மையான வருவாய், இந்நிறுவனம் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களில் அரை சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், ரூ.11,487 கோடிக்கும் அதிகமான விற்பனை மற்றும் ரூ.11,488 கோடிக்கும் அதிகமான கொள்முதல் உள்ளிட்ட பில்லியன்கணக்கான ரூபாய் மதிப்பிலான மோசடியான பரிவர்த்தனைகளை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளதையும் செபி கண்டறிந்தது.
விசாரணையின்படி, இந்த பரிவர்த்தனையில், ராஜேஷ் மேத்தா தனிப்பட்ட முறையில் செய்த ஒப்பந்தங்கள் நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன.
"ஆர்இஎல் (ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட்) நிறுவனம் வால்காம்பி எஸ்ஏ-வின் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளைத் தனது இணையதளத்தில் வெளிப்படுத்தவில்லை என்பதும் கவனிக்கப்பட்டது, இதன் மூலம் நிறுவனத்தின் உண்மையான நிதி நிலைமை குறித்த துல்லியமான மற்றும் சரியான தகவல்களை முதலீட்டாளர்கள் பெற முடியாமல் செய்தது" என்று செபி தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் விளக்கம்
ஜூன் 4 தேதியிட்ட பங்குச்சந்தை அறிக்கையில், செபியின் வழிகாட்டுதல் ஒரு இடைக்கால உத்தரவு மட்டுமே என்றும், அது "எந்தவொரு இறுதியான எதிர்மறை முடிவுக்கும் வழிவகுக்காது" என்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
தாங்கள் "எந்தத் தவறும் செய்யவில்லை" என்றும், தாங்கள் அறிவித்த வருவாய் புள்ளிவிவரங்கள் சரியானவை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
அந்நிறுவனம் தனது அறிக்கையில், "இந்த உத்தரவில் உள்ள முக்கிய ஆட்சேபனை, வருவாயைத் தவறாக அளித்ததாகக் கூறப்படுவது தொடர்பானது. செபி தனது கணக்கீடுகளுக்கு வால்காம்பியின் வருவாய்க்குப் பதிலாக அதன் எபிட்டா (EBITDA - வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனை தவணை முறையில் திருப்பிச் செலுத்துதலுக்கு முந்தைய வருவாய்) மதிப்பை அடிப்படையாகக் கருதியதால் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே இந்தச் சூழல் உருவாகியுள்ளது. இதனால்தான் வருவாயில் தோராயமாக 97 சதவிகித வித்தியாசத்தை செபி குறிப்பிட்டுள்ளது" என்று கூறியுள்ளது.
வால்காம்பி எஸ்ஏ நிறுவனத்தின் நிதித் தரவுகள் சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டால், வருவாயில் கூறப்படும் இந்த முரண்பாடுகள் இருக்காது என்று அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
இருப்பினும், செபியின் விரிவான விசாரணை மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்குப் பிறகே இந்த விவகாரம் குறித்த இறுதி முடிவு எட்டப்படும்.
அமெரிக்காவைச் சேர்ந்த பைன்ட்ரீ மேக்ரோ நிறுவனத்தின் நிறுவனர் ரித்தேஷ் ஜெயின், செபி விசாரணையின் முடிவுகள் குறித்து வியாழக்கிழமை எக்ஸ் தளப் பதிவொன்றில் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இதன் பரந்த பொருளாதாரத் தாக்கங்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நிறுவனத்தின் கணக்குகளில் 158 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 15.15 லட்சம் கோடி) மதிப்பிலான தவறான அறிக்கைகள் அல்லது மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களை செபி கண்டறிந்துள்ளது" என்று குறிப்பிடும் ராய்ட்டர்ஸ் ஆசியா அறிக்கையைப் பகிர்ந்து, நாட்டின் ஒட்டுமொத்த வணிகத் தரவுகள் குறித்து ஜெயின் கேள்வி எழுப்பியுள்ளார்.
வருவாய் தரவுகளில் இவ்வளவு பெரிய அளவிலான முரண்பாடு இருந்தால், அது இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி தரவுகளின் நம்பகத்தன்மையையும் பாதிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு