குழந்தை சீட் பெல்ட் அணிய மறுத்ததால் விமானம் ரத்து - கிளம்பிய விவாதம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மேக்ஸ் மாட்சா
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
கனடாவில் ஒரு குழந்தை சீட் பெல்ட் அணிய மறுத்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, விமானப் பயணங்களில் குழந்தைகளின் நடத்தை, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பெற்றோரின் பொறுப்புகள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.
போர்டர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த விமானம் ஆகஸ்ட் 6ஆம் தேதி விக்டோரியாவிலிருந்து டொரோன்டோவுக்கு புறப்படத் தயாராக இருந்தது. ஆனால் பின்னர் அது மீண்டும் முனையத்துக்கு திரும்ப நேரிட்டது.
"சிறு குழந்தை ஒன்று தனது இருக்கையின் மீது நின்றுகொண்டிருந்தது; அக்குழந்தை தனது சீட் பெல்ட்டை அணியவில்லை" என விமான நிறுவனம் தெரிவித்தது.
இதன் காரணமாக விமானம் புறப்பட முடியவில்லை.
இரவு நேரம் ஆகிவிட்டதால் ஓடுதளம் மூடப்பட்டது.
இதனால் அனைத்து பயணிகளும் அடுத்த நாள் விமானத்தில் மீண்டும் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இத்தகைய சூழ்நிலைகளில் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் மற்றும் விமான நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.
இந்த முடிவை நிபுணர்கள் நியாயப்படுத்துவது ஏன்?
குழந்தையின் நடத்தையைப் பற்றி போர்டர் ஏர்லைன்ஸ் கூறும்போது, "குழந்தையுடன் வந்த பாதுகாவலரும் விமானப் பணியாளர்களும் பிரச்னையைத் தீர்க்க முயன்றனர். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை" என தெரிவித்தது.
"இத்தகைய பாதுகாப்பற்ற சூழ்நிலையில் விமானம் புறப்பட முடியாது. எனவே விமானப் பணியாளர்கள் முனையத்துக்கு திரும்பி, அந்த இரு பயணிகளையும் விமானத்திலிருந்து இறக்க முடிவு செய்தனர்" என அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் விமானப் பயண பாதுகாப்பு நிபுணரான லியா டுசோ, போர்டர் நிறுவனத்தின் பணியாளர்கள் எடுத்த முடிவு குழந்தையின் பாதுகாப்பை மட்டுமல்லாது, விமானத்தில் இருந்த மற்ற பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
விமானம் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரங்களில் காற்று கொந்தளிப்பு காரணமாக பாதுகாப்பின்றி இருக்கும் பயணப் பைகள் பயணிகள் மீது விழலாம் என்பதைப் போலவே , சீட் பெல்ட் இல்லாத குழந்தைகள் காற்றில் தூக்கி எறியப்படலாம் என்கிறார் டுசோ.
கிளம்பிய விவாதம்
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பயணம் செய்யும் குடும்பங்களிடம் விமான நிறுவனங்கள் எவ்வளவு பொறுமையாக இருக்க வேண்டும் மற்றும் பெற்றோர் விமான விதிமுறைகளை எவ்வளவு கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கேள்வி சமூக ஊடகங்களில் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
சிலர், பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் மிகுந்த 'மென்மையாக' நடந்து கொண்டால் என்ன நிகழக்கூடும் என்பதற்கான உதாரணம் இது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஃபாக்ஸ் நியூஸின் காலை நிகழ்ச்சியில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டபோது, இணை தொகுப்பாளர் சார்ல்ஸ் ஹர்ட் உடல் ரீதியான தண்டனையை ஆதரிப்பதாகக் கூறினார்.
"நாம் அனைவரும் எப்போதாவது பெற்றோர்களாக இத்தகைய சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறோம். ஆனால் இது மிகவும் எல்லை மீறிய மோசமான நிலை" என்று அவர் கூறினார்.
மறுபுறம், சிலர் குழந்தைகள் சில நேரங்களில் விமானப் பயணத்துக்கே பயப்படக்கூடும்; அவர்கள் திட்டமிட்டு பிரச்னை ஏற்படுத்த முயலவில்லை என்றும் கூறியுள்ளனர்.
அந்த விமானத்தில் பயணித்த ஆர்ய் கோஸுக் என்பவர், குழந்தை பிடிவாதமாக நடக்கவில்லை; மாறாக பயந்திருந்தது போலத் தோன்றியது என்று சிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
"அவன் வெறுமனே தனது இருக்கையின் கீழ் ஒளிந்துகொண்டிருந்தான். அவனை வலுக்கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வைத்திருந்தால், ஏதாவது வழியில் மீண்டும் அதிலிருந்து தப்பித்திருப்பான்" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், James MacDonald/Bloomberg via Getty Images
விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து எழும் கேள்விகள்
ஒரு குழந்தையின் பிரச்னைக்காக முழு விமானப் பயணத்தையும் ரத்து செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த குடும்பத்தினரை விமானத்திலிருந்து இறக்கியிருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
2018 ஆம் ஆண்டில் இதேபோன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றது. சிகாகோவிலிருந்து அட்லாண்டாவுக்கு சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில், ஒரு தந்தையையும் அவரது மகளையும் வெளியேற்றும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
அந்த வீடியோவை எடுத்த பயணியின் கூற்றுப்படி, விமானப் பணியாளர்கள் அவர்களை விமானத்திலிருந்து இறக்கப் போவதாக தந்தையிடம் தெரிவித்ததும், குழந்தை அமைதியாகி, ஐந்து நிமிடங்களுக்கு மேலாக தன் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், "ஆரம்ப தகவல்களின்படி விமானப் பணியாளர்கள் மற்றும் ஒரு சிறிய குழந்தையுடன் பயணித்த நபருக்கிடையேயான உரையாடல் பதற்றமானதாக மாறியிருந்தது" என கூறியது.
2012 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், விமானத்திலிருந்து இறக்கப்பட்ட குடும்பத்தினர் பின்னர் என்பிசியின் 'டுடே ஷோ' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விமான நிறுவனம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டினர்.
அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஜெட்ப்ளூ நிறுவனம், சில பயணிகள் நீண்ட நேரமாக விமானப் பணியாளர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை என்று தெரிவித்தது.
"விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் விமானப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட பயணிகளை விமானத்திலிருந்து இறக்க கேப்டன் முடிவு செய்தார்," என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்கள் : சாக்ஷி வெங்கடராமன்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































