மழைக்கு பயந்து வயலில் புதைக்கப்பட்ட ரூ.5 லட்சத்தை கரையான் அரித்த சோகம்; மாற்ற முடியாமல் வயதான தம்பதி வேதனை

மங்கிலால் மேக்வால், பாலோத்ரா மாவட்டத்தில் உள்ள நெய்வாய் கிராமத்தில், ராஜஸ்தானின் பாரம்பரிய விவசாயிகள் அல்லது கால்நடை மேய்ப்பவர்கள் வசிக்கும் ‘தானி’ என்றழைக்கப்படும் வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA

படக்குறிப்பு, மங்கிலால் தனது ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளை மழையிலிருந்து பாதுகாப்பதற்காக வயலில் புதைத்திருந்தார்.
    • எழுதியவர், மோஹர் சிங் மீனா
    • பதவி, பிபிசி இந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சமூக வலைதளங்களில் வயதான ஒரு தம்பதியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அவர்கள் இருவரும் தலா ஐநூறு ரூபாய் மதிப்புள்ள, கிழிந்து சேதமடைந்த பல ரூபாய் நோட்டுகளை எண்ணுவதைக் காண முடிகிறது.

இவர்கள் ராஜஸ்தானின் பச்பத்ரா பகுதியில் உள்ள நெய்வாய் கிராமத்தைச் சேர்ந்த மங்கிலால் மேக்வால் மற்றும் அவரது மனைவி சைலி தேவி.

மங்கிலால் மேக்வால், தனது நிலத்தின் ஒரு பகுதியை விற்றதாகவும், அதற்குப் பதிலாக ஐந்து லட்சம் ரூபாய் பெற்றதாகவும் கூறுகிறார்.

இந்த ரூபாய் நோட்டுகளைப் பார்க்கும்போது அழுகை வருகிறது என்றும், சாப்பிடவோ குடிக்கவோ மனம் வரவில்லை என்றும் அந்த தம்பதி கூறுகின்றனர்.

இந்த நோட்டுகளை இப்போது எப்படி மாற்றுவது என்பதுதான் தங்கள் மனதில் தோன்றும் ஒரே எண்ணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

என்ன நடந்தது ?

மங்கிலாலும் அவரது மனைவியும்

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA

படக்குறிப்பு, கரையான் அரித்த ரூபாய் நோட்டுகளுடன் காணப்படும் மங்கிலாலும் அவரது மனைவியும்

மங்கிலால் மேக்வால், பாலோத்ரா மாவட்டத்தில் உள்ள நெய்வாய் கிராமத்தில், ராஜஸ்தானின் பாரம்பரிய விவசாயிகள் அல்லது கால்நடை மேய்ப்பவர்கள் வசிக்கும் 'தானி' என்றழைக்கப்படும் வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவரது வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பிபிசி நியூஸ் இந்தி அவரைத் தொடர்புகொண்டது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தொலைபேசி உரையாடலின் போது மங்கிலால் கூறுகையில், "சுமார் ஓராண்டுக்கு முன்பு பச்பத்ராவில் எனக்கு சொந்தமான ஒரு நிலத்தை ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்றேன். அந்தப் பணத்தை வைத்து எனது குடும்பத்துக்காக ஒரு கான்கிரீட் வீட்டைக் கட்ட திட்டமிட்டிருந்தேன்.

"அப்போது மழைக்காலமாக இருந்தது. எனக்கு கான்கிரீட் வீடு இல்லை என்பதால், பணம் மழையில் நனைந்துவிடுமோ என்று பயந்தேன். அதனால், இரவில் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை ஒரு பையில் வைத்து, அதை வயலில் புதைத்து வைத்தேன்.

"பின்னர் கனமழை பெய்தது. காலையில் வயலுக்குச் சென்றபோது, பணத்தை எங்கு புதைத்தேன் என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.

பணத்தை வங்கியில் ஏன் செலுத்தவில்லை என்று அவரிடம் கேட்டோம்.

அதற்குப் பதிலளித்த மங்கிலால், "மறுநாள் காலையில் பணத்தை எடுத்து வங்கியில் செலுத்திவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், பணத்தை எங்கு மறைத்து வைத்தேன் என்பதை மறந்துவிட்டேன்" என்றார்.

பணத்தை மறைத்து வைத்த இடத்தைக் கண்டுபிடிக்க பல நாட்கள் முயன்றதாகவும், ஆனால் அவரால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் மங்கிலால் கூறுகிறார்.

இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் மங்கிலால் தெரிவிக்க முடியவில்லை. இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு இதை தனது மனைவி மற்றும் மகனிடம் தெரிவித்தார்.

"நாங்கள் நிறைய தேடினோம். ஆனால், பணம் இருந்த பை வயலில் எங்கும் கிடைக்கவில்லை" என்று மங்கிலாலின் இளைய மகன் தீபக் மேக்வால் பிபிசி நியூஸ் இந்தியிடம் கூறுகிறார்.

தொலைபேசி உரையாடலின் போதும் மங்கிலால் உணர்ச்சிவசப்பட்டார்.

அவர் கூறுகையில், "இந்தப் பணம் இனி செல்லாது என்று வங்கி ஊழியர்கள் கூறுகிறார்கள். அப்படி நடந்தால், நான் எப்படி வீடு கட்டுவேன்?" என்றார்.

ஓராண்டு கழித்து அந்தப் பணம் எப்படி கிடைத்தது?

மங்கிலால்

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA

படக்குறிப்பு, மங்கிலால் நிலத்தை விற்றதன் மூலம் இந்த ஐந்து லட்சம் ரூபாயைப் பெற்றிருந்தார்.

பச்பத்ரா பகுதியில் விவசாயம் முழுவதும் மழையை நம்பியே உள்ளது. அதனால், இங்குள்ள விவசாயிகள் பொதுவாக ஆண்டுக்கு ஒரு பயிரை மட்டுமே சாகுபடி செய்ய முடியும்.

சமீபத்தில் இந்தப் பகுதியில் நல்ல மழை பெய்ததாக மங்கிலால் கூறுகிறார். அதன் பிறகு, விதை பயிரிடுவதற்கான பணிகளைத் தொடங்குவதற்காக விவசாயிகள் வயல்களை உழுவதற்குத் தயாராகி வந்தனர்.

ஓராண்டுக்குப் பிறகு, ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை, மங்கிலாலின் குடும்பத்தினர் ஒரு டிராக்டரை வாடகைக்கு எடுத்து வயலை உழுவதற்காகச் சென்றனர்.

இதுகுறித்து மங்கிலால் கூறுகையில், "சுமார் ஐந்து மணி நேரம் வயல் உழப்பட்டது. இரவு நேரம் ஆனதும் அனைவரும் வீட்டுக்குத் திரும்பினர்" என்றார்.

மறுநாள் காலை, மங்கிலாலின் மனைவி சைலி தேவி மற்றும் அவரது மகன் வயலுக்குச் சென்றனர்.

சைலி தேவி கூறுகையில், "வயலை உழுத பிறகு, வயலில் ஒரு பை கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது, அதற்குள் பண நோட்டுகள் இருந்தன. ஆனால், அவற்றில் கரையான்கள் அரித்திருந்தன. "இதைப் பார்த்ததும் எனக்கு அழுகை வந்தது. அதை எடுத்துப் பார்த்த போது, ஒரு நல்ல நோட்டுகூட மிச்சம் இல்லை" என்றார்.

இதன்பின், இரண்டு நாட்களாக பதற்றத்தாலும் வேதனையாலும் தான் சாப்பிடக்கூட இல்லை என்கிறார் மங்கிலால்.

"இப்போது என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று அவர்கள் கூறுகின்றனர்.

'இந்தக் குடும்பம் உழைப்பால் இயங்குகிறது'

தற்போது இந்தக் குடும்பத்துக்கு மண் வீடு உள்ளது. மழைக்காலங்களில் அதன் கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும். தனது குடும்பத்துக்காக ஒரு நிரந்தரமான வீட்டைக் கட்ட வேண்டும் என்று மங்கிலால் விரும்பினார்.

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA

படக்குறிப்பு, கரையான் அரித்த ரூபாய் நோட்டுகளின் நிலை

மங்கிலாலுக்கு சுமார் 60 பிகா நிலம் உள்ளது. மழைக்காலத்தில் இந்த நிலத்தில் கம்பு மற்றும் பருப்பு வகைகளை அவர் பயிரிடுகிறார். மழை நன்றாகப் பெய்தால் பயிர் அறுவடை செய்யப்படும்; இல்லையென்றால், எதுவும் விளையாது.

மங்கிலாலும் அவரது மனைவி சைலி தேவியும் படிக்கவில்லை. இவர்களுக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

அவர்களது மகள் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு, அவர் தனது கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மூன்று மகன்களில் இளைய மகன் தீபக் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். மற்ற இரண்டு மகன்களும் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளனர்.

தற்போது இந்தக் குடும்பத்துக்கு மண் வீடு உள்ளது. மழைக்காலங்களில் அதன் கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும். தனது குடும்பத்துக்காக ஒரு நிரந்தரமான வீட்டைக் கட்ட வேண்டும் என்று மங்கிலால் விரும்பினார்.

இதுகுறித்துப் பேசிய அவர், "வீடு கட்டுவதற்காக பச்பத்ராவில் எனக்கு ஒரு நிலம் இருந்தது. அதை விற்றுவிட்டேன். ஆனால், இப்போது அந்தப் பணமும் வீணாகிவிட்டது. நோட்டுகளை கரையான்கள் அரித்துவிட்டன" என்றார்.

கரையான் அரித்துச் சேதமடைந்த அந்த ரூபாய் நோட்டுகளை தனது தாய் பச்பதாராவில் உள்ள ஒரு வங்கிக்கு எடுத்துச் சென்றதாகவும், ஆனால் அந்த நோட்டுகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், பலோத்ராவுக்குச் செல்லுமாறு வங்கி அவரிடம் கூறியதாகவும் தீபக் மேக்வால் தெரிவித்தார்.

மங்கிலாலின் மனைவி சைலி தேவி கூறுகையில், "நாங்கள் பாலோத்ராவுக்குச் சென்றோம். ஆனால், அங்குள்ள வங்கியும் இந்த நோட்டுகள் செல்லாது என்று கூறியது. ஜெய்ப்பூருக்குச் செல்லுமாறு வங்கி எங்களிடம் கூறியுள்ளது. நாங்கள் படிக்காதவர்கள். இப்போது இந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது என்று கவலைப்படுகிறோம்" என்றார்.

தனது நோட்டுகள் மாற்றிக் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் சைலி தேவி இன்னும் இருக்கிறார். அதன் மூலம் தனது குடும்பத்துக்கு ஒரு வீடு கட்ட முடியும் என்று அவர் நம்புகிறார்.

மங்கிலாலும் அவரது குடும்பத்தினரும், எப்படியாவது சேதமடைந்த தங்கள் ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டு, வங்கியில் தங்கள் பணம் மாற்றப்படும் என்று நம்புகின்றனர்.

ரிசர்வ் வங்கி ஆஃப் இந்தியாவின் (ஜெய்ப்பூர் மண்டலம்) மூத்த அதிகாரி ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசியிடம் பேசினார்.

"நோட்டுகள் மிகவும் மோசமாக சேதமடைந்திருந்தால், அவற்றை மாற்றுவதற்கான சிறப்பு நடைமுறை ரிசர்வ் வங்கியிடம் உள்ளது. அந்த நடைமுறையின் கீழ் இதுபோன்ற ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும்" என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு