"மூழ்கும் விவசாய நிலங்கள்": கில்கித்-பால்டிஸ்தானில் சிந்து நதிக்கரையில் கனரக இயந்திரங்கள் மூலம் தங்கம் தேடுவதற்கு மக்கள் எதிர்ப்பு

சிந்து நதிக்கரை, சுரங்கப் பணிகள்

பட மூலாதாரம், BAQIR ALI

படக்குறிப்பு, கில்ஜித்-பால்டிஸ்தானில் சிந்து நதியின் கரையோரமாக பயணம் செய்யும்போது, பல இடங்களில் (ஷீனா, நாசிராபாத் போன்ற பகுதிகளில்) கனரக இயந்திரங்கள் சுரங்கத் தோண்டுதல் பணிகளில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.
    • எழுதியவர், முகமது சுபைர் கான்
    • பதவி, செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள கில்கித்-பால்டிஸ்தானை சேர்ந்த பாகிர் ஹுசைனின் வாழ்வாதாரம், தோட்டமும், விவசாயமுமே ஆகும். ஆனால், சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள அவரது விவசாய நிலம் விரைந்து அரிக்கப்பட்டு மூழ்கி வருகிறது.

ஹுன்சா மாவட்டத்தின் நசீராபாத் வட்டத்தில் உள்ள ஷீனா பகுதியில் வாழும் பாகிர் ஹுசைன், "சிந்து நதிப்படுகையில் தங்கம் எடுப்பதற்காக கனரக இயந்திரங்கள் நிறுவப்பட்டதிலிருந்து மண் அரிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது" என்று கூறுகிறார்.

தனது விவசாய நிலத்தில் எல்லைக் கற்கள் இருந்த இடம் தற்போது நதியில் மூழ்கிவிட்டதென்று அவர் கூறுகிறார்.

" ஒவ்வொரு நாளும் சிந்து நதி எங்கள் நிலத்தில் ஒரு பகுதியை அடித்துச் செல்லும் போலத் தெரிகிறது," என்று அவர் வேதனைப்பட்டார். நிலைமை கவலையை ஏற்படுத்துவதாகக் கூறிய அவர், நிலத்தில் நடக்கும் விவசாயத்தைச் சார்ந்துதான் தங்கள் வாழ்வாதாரமே உள்ளதென்று கூறுகிறார்.

"இப்பிரச்னை தொடர்பான அரசுத் துறைகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என அவர் கூறுகிறார்.

எனினும், ஷீனா பகுதி மக்களுக்கு இது புதிய பிரச்னையல்ல.

சிந்து நதிக்கரையில் தங்கம் தேடுவதற்காக, கனரக இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்ததிலிருந்து தங்களது பிரச்னைகளும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தற்போது, ஷீனா பகுதி மக்கள் அனைவரும் உள்ளூர் கிராமக் கவுன்சில் தலைமையில், சிந்து நதிக்கரையில் நடைபெறும் தங்கச் சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராக, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதுபற்றி பிபிசி-யிடம் பேசிய கிராமக் கவுன்சில் தலைவரான மும்தாஸ் அலி, இந்த சூழ்நிலை காரணமாக உள்ளூர் மக்களுக்குச் சொந்தமான குறைந்தது 40 கனால் அளவு விளைநிலங்கள் நதியில் மூழ்கியுள்ளதாகக் கூறினார்.

தங்கம் எடுப்பதற்காக சிந்து நதியின் இயற்கையான கரைகள் பல இடங்களில் தோண்டப்பட்டு ஆழமான குழிகள் ஏற்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மும்தாஸ் அலியின் கூற்றுப்படி, இந்த எதிர்ப்பு ஷீனா பகுதியோடு மட்டும் நிற்கவில்லை. மாவட்டத்தை சுற்றிலும், சிந்து நதிக்கரையோரம் வாழும் மக்கள் இந்த தங்கச் சுரங்க நடவடிக்கைகளை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக, தங்கம் சேகரிக்கும் பாரம்பரிய முறைகளை கைவிட்டு, சிந்து நதிக்கரையில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளன என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.

கில்கித்-பால்டிஸ்தான் கனிமத் துறையின் கூற்றுப்படி, இதுவரை 77 தங்கச் சுரங்க குத்தகை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து ஒப்பந்தங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், மீதமுள்ளவை உள்ளூர் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இதுபற்றி கனிமத் துறையின் தலைமை இயக்குநர் முகம்மது ஜுபைர் கூறுகையில், சட்டப்பூர்வ ஒப்பந்தங்கள் மட்டுமல்லாமல், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன என்கிறார். இதைக் கட்டுப்படுத்த அரசும், சம்பந்தப்பட்ட துறைகளும் புதிய கொள்கை ஒன்றை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார்.

"எங்கள் வாழ்வுரிமையை உறுதி செய்க"

சிந்து நதிக்கரை, சுரங்கப் பணிகள்

பட மூலாதாரம், BAQIR ALI

படக்குறிப்பு, நாசிராபாத் பகுதியில் உள்ள ஷீனா பகுதி மக்கள், இயந்திரமயமாக்கப்பட்ட தங்கச் சுரங்கத் தோண்டுதல் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கில்கித்-பால்டிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் பாபா ஜான் கூறும்போது, "நாங்கள் வேறு எதையும் கேட்கவில்லை. வாழும் உரிமையைத்தான் கேட்கிறோம். கில்கித்-பால்டிஸ்தான் பகுதி, சூழலியல் உணர்திறன் அதிகம் கொண்ட பகுதி" என குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றமும், வெப்பநிலை உயர்வும் ஏற்கெனவே இப்பகுதியில் பல பிரச்னைகளை உருவாக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி தங்கம் தோண்டப்பட்டால், அதனால் அதிகரிக்கும் சேதங்களைத் தடுப்பது உள்ளூர் மக்களால் சாத்தியமற்றதாகிவிடும் என்று அவர் எச்சரித்தார்.

அண்மைக்காலம் வரை சிந்து நதியில் தங்கச்சுரங்கத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறும் அவர், பஞ்சாப் மாகாணத்திலும், கைபர் பக்துன்க்வா மாகாணத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, சட்டவிரோத சுரங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கிய பின்னரே, கில்கித்-பால்டிஸ்தான் நதிக்கரைகளுக்கு பெருமளவில் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

முன்பெல்லாம் 'சோனேவால்' பழங்குடியினர் மண்வெட்டி உள்ளிட்ட எளிய கருவிகளைக் கொண்டு கைமுறையில் இந்தப் பணியைச் செய்து வந்தனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு மிகக் குறைந்த பாதிப்பே ஏற்பட்டது. ஆனால் தற்போது பெரிய அளவிலான அழிவு தொடங்கிவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

"பஞ்சாபிலும், கைபர் பக்துன்க்வாவிலும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தால், கில்கித்-பால்டிஸ்தானில் மட்டும் ஏன் இது அனுமதிக்கப்படுகிறது?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் சமூகங்கள் தொடர்ந்து எதிர்ப்பு இயக்கங்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

ஹுன்சாவின் ஷிம்ஷால் பகுதியில் உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தி சுரங்க நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் பிற பகுதிகளிலும் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

புஞ்சியில் முக்கிய பாலங்களுக்கு அருகில் சுரங்கம்

சிந்து நதிக்கரை, சுரங்கப் பணிகள்

பட மூலாதாரம், BAQIR ALI

படக்குறிப்பு, இந்த நிலைமையால் ஆற்றங்கரை நிலங்கள் அரிக்கப்பட்டு, மெல்ல மெல்ல ஆற்றில் கலந்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிரச்னை குறித்து உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, கில்கித்-பால்டிஸ்தான் அரசின் பல்வேறு துறைகளும் கவலை தெரிவித்துள்ளன.

பிபிசி சேகரித்த அரசு ஆவணங்களின்படி, கனரக இயந்திரங்கள் மூலம் நடைபெறும் சுரங்க நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி அரசின் பல துறைகளும் எச்சரித்துள்ளன.

நதிக்கரை அரிப்பு, சிந்து நதியின் மீதுள்ள பாலங்களின் அடித்தளங்களுக்கு ஏற்படக்கூடிய சேத அபாயம், நதியின் இயற்கை ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், அணைகளில் மணல் சேகரமாதல், வண்டல் படிதல், பனிப்பாறைகள், காடுகள், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அரசு துறைகள் கவலை தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் 27 அன்று, ஆஸ்டோர் மாவட்டத்தின் புஞ்சி பகுதி துணை வட்டாட்சியர் , சுரங்க நடவடிக்கைகள் குறித்து ஒரு சிறப்பு அறிக்கையைத் தயாரித்தார்.

அந்த அறிக்கையில், சிந்து நதிக்கரையில் கனரக இயந்திரங்கள் மூலம் பரவலான அகழ்வு பணிகள் நடைபெறுவதாகவும், இதன் காரணமாக நதிக்கரை தொடர்ந்து அரிக்கப்பட்டு, புஞ்சி தொங்கு பாலம் உட்பட அருகிலுள்ள மூன்று பாலங்களின் அடித்தளங்கள் ஆபத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலங்களிலிருந்து சுமார் 300 அடிக்கு நடைபெறும் அனைத்து அகழ்வு பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென அந்த அறிக்கை பரிந்துரைத்தது.

இதைத் தொடர்ந்து, புஞ்சி ஆர்.சி.சி. பாலம், புஞ்சி தொங்கு பாலம் மற்றும் தலாச்சி ஆர்.சி.சி. பாலம் ஆகியவற்றிலிருந்து 300 அடிக்குள் அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஒரு மாதத்துக்குப் பின், தகவல் தொடர்பு மற்றும் பொதுப்பணித் துறையின் மற்றொரு அறிக்கை வெளியானது.

அதில், ஒரு சீன நிறுவனம் புஞ்சி பாலத்திலிருந்து சுமார் 250 அடி தூரத்தில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதிலிருந்து வெளியேறும் கழிவுகள் சிந்து நதியில் கொட்டப்படுவதால், நதியின் ஓட்டம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பாலத்தின் தூண்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடும் என்பதால், அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழை (NOC) ரத்து செய்ய வேண்டுமெனவும் அந்த அறிக்கை பரிந்துரைத்தது.

அரசு அறிக்கைகளின்படி, நதிக்கரைகளிலும், நதிப்படுகைகளிலும் கனரக இயந்திரங்கள், ஹைட்ராலிக் உபகரணங்களையும், பெரிய டம்பர்களையும் பயன்படுத்தி பரவலான சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புஞ்சி ஆர்.சி.சி. பாலம், தலாச்சி பாலம் மற்றும் புஞ்சி தொங்கு பாலம் ஆகியவை உடனடி மற்றும் தீவிர ஆபத்தில் உள்ளதாக கட்டுமானத் துறை எச்சரித்துள்ளது.

இந்தப் பாலங்கள், உள்ளூர் மக்களின் போக்குவரத்து, வர்த்தகப் பாதைகள், அவசரகால சேவைகள் மற்றும் வடக்கு ஒளி காலாட்படையினரின் இயக்கத்திற்கும் மிகவும் முக்கியமானவை.

எனவே, சுரங்க நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, சுரங்கத் தளங்களை மூடி, நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை அமைக்க வேண்டுமென அத்துறை பரிந்துரைத்துள்ளது.

அணைகளும் ஆபத்தில்

சிந்து நதிக்கரை, சுரங்கப் பணிகள்

பட மூலாதாரம், BAQIR ALI

படக்குறிப்பு, கனரக இயந்திரங்கள் மூலம் நதியிலிருந்து எடுக்கப்படும் மண், கற்கள் மற்றும் கழிவுகள், டம்பர்கள் மூலம் நதிக்கரையில் குவிக்கப்படுகின்றன.

புஞ்சி பகுதி பாலங்கள் தொடர்பான கவலைகளைத் தாண்டி, வடிவ நீர் மற்றும் மின் மேம்பாட்டு ஆணையமும் (WAPDA) சுரங்க நடவடிக்கைகள் குறித்து எச்சரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, தியாமர் அணைத் திட்ட அதிகாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமைக்கு எழுதிய கடிதத்தில், சில்லாஸ் அருகே பஸ்ரி முதல் ராய்கோட் வரையிலான சிந்து நதிப்படுகையில் மிகப்பெரிய அளவில் தங்கச் சுரங்கம் நடந்து வருவதாகத் தெரிவித்திருந்தனர்.

இந்தப் பகுதியானது முன்மொழியப்பட்ட அணையின் நீர்த்தேக்கப் பகுதிக்குள் வருகிறது.

சுரங்க நடவடிக்கைகள் நதியின் இயற்கைத் தன்மையைப் பாதிப்பதோடு, நதியில் கலக்கும் சகதி, மணலின் அளவையும் அதிகரித்து வருவதாக WOPDA தெரிவித்துள்ளது.

இந்த அதிகப்படியான சகதியும் மணலும், தர்பேலா அணை உள்ளிட்ட பிற நீர்த்திட்டங்களுக்கு சென்றடையும் அபாயமும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் நீர்த்தேக்கங்களின் சேமிப்பு திறன் குறைவதுடன், மின்சார உற்பத்தி இயந்திரங்களின் செயல்திறனும், ஆயுட்காலமும் பாதிக்கப்படலாம் என்று WAPDA குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாட்டின் முக்கிய நீர்வளத் திட்டங்களின் ஒட்டுமொத்த பயன்பாட்டு ஆயுட்காலமும் குறையக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, புஞ்சியில் நடைபெறும் சுரங்க நடவடிக்கைகள் ஒரு உள்ளூர் பிரச்னை மட்டுமல்ல; அதன் தாக்கம் கீழ்பகுதிகளில் உள்ள பெரிய நீர்வளத் திட்டங்களுக்கும் பரவக்கூடும்.

சுற்றுச்சூழல் முகமையின் எச்சரிக்கை

சிந்து நதிக்கரை, சுரங்கப் பணிகள்

பட மூலாதாரம், BAQIR ALI

படக்குறிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் சிந்து நதிக்கரையில் இயந்திரங்களின் எண்ணிக்கை சாதனை அளவுக்கு அதிகரித்துள்ளதாக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

கில்கித்-பால்டிஸ்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையும் (EPA) இந்த விவகாரம் குறித்து பரவலான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.

அந்த முகமையின் கூற்றுப்படி, இப்பகுதியில் கனிம தேடலும், சுரங்க நடவடிக்கைகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன.

போதுமான சுற்றுச்சூழல் ஆய்வுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல், உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் சுரங்க வேலைகள் மேற்கொள்ளப்படுவது, தீவிரமானதும், மீட்டெடுக்க முடியாததுமான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று EPA எச்சரித்துள்ளது.

கில்கித்-பால்டிஸ்தான் ஏற்கெனவே பனிப்பாறை ஏரிகள் வெடித்தல், வெள்ளப்பெருக்கு, திடீர் கனமழை, நிலச்சரிவு, மண் ஓட்டம், நதிக்கரை அரிப்பு மற்றும் மலைச்சரிவு நிலைத்தன்மை குறைபாடு போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சுரங்கம், வெடிப்பு, சாலை அமைத்தல், காடழிப்பு போன்றவை இந்த அபாயங்களை மேலும் அதிகரிக்கக்கூடும்.

நதிக்கரைகளில் கட்டுப்பாடின்றி தோண்டுதல், நதியின் இயற்கை ஓட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துதல் மற்றும் அகழ்வு பணி கழிவுகளை மீண்டும் நதியில் கொட்டுதல் ஆகியவை நதியின் சுற்றுச்சூழல் அமைப்பை பாதிப்பதாக EPA தெரிவித்துள்ளது.

இதனால் மண் அரிப்பு அதிகரித்து, இயற்கை வடிகால் அமைப்புகள் பாதிக்கப்பட்டு, தற்காலிக ஏரிகள் உருவாகி, தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிக்கக்கூடும்.

சுரங்கத்தால் உருவாகும் மண்ணும் மணலும் நீர்த்தேக்கங்களில் தேங்கி, அவற்றின் கொள்ளளவையும், பெரிய நீர்மின் திட்டங்களின் ஆயுட்காலத்தையும் பாதிக்கலாம் என்றும் EPA தெரிவித்துள்ளது.

கனிமத் துறை , சுற்றுச்சூழல் முகமை ஆகிய இரண்டுமே, கண்காணிப்புப் பணிகளில் வளப் பற்றாக்குறை, போதிய பணியாளர் இல்லாமை மற்றும் தளவாட சிக்கல்களை எதிர்கொண்டு வருவதால், தொலைதூர பகுதிகளில் நடைபெறும் சுரங்க நடவடிக்கைகளை திறம்பட கண்காணிப்பது கடினம் என்றும் EPA கூறியுள்ளது.

அரசின் பதில் என்ன?

கில்கித்-பால்டிஸ்தான் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் வனவிலங்கு அமைச்சர் ராஜா நாசிர், பிபிசி உருதுவிடம் பேசியபோது, இந்தக் கவலைகளை அரசு அறிந்திருப்பதாகவும், இது தொடர்பான முறையான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சுரங்கத் துறையில் முதலீடு செய்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய புதிய நிர்வாக அமைப்பும், ஆணையமும் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

நதி, நதிக்கரை, உள்ளூர் மக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத இடங்களில் மட்டுமே, இயந்திரங்கள் மூலம் தங்கச் சுரங்க நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு, அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே சமர்ப்பிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில், பாதுகாப்பான இடங்களில் மட்டுமே இயந்திரங்கள் மூலம் சுரங்கம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று ராஜா நாசிர் தெரிவித்தார்.

"மக்களின் உயிர், சொத்து மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே எங்களின் மிக முக்கியமான முன்னுரிமை. கில்கித்-பால்டிஸ்தான் ஏற்கெனவே காலநிலை மாற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைப் பாதுகாப்பதற்கு தற்போதைய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது," என்று அவர் கூறினார்.

பாரம்பரிய முறையில் கைமுறையாக தங்கம் எடுக்கும் 'சோனேவால்' பழங்குடியினருக்கும் இந்த அமைப்பில் இடம் வழங்கப்பட வேண்டும் என்றும், அது ஒப்பீட்டளவில் சிறந்த மாற்று வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தை புதிய அரசு முன்னுரிமையாக எடுத்திருப்பதால், எதிர்காலத்தில் நிலைமை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சிந்து நதிக்கரையில் இயந்திரங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது என்று உள்ளூர் மக்கள் கூறும் குற்றச்சாட்டு உண்மைதான் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு