ராக் சால்ட் தினசரி உணவில் எத்தனை கிராம் சேர்க்கலாம்? சாதாரண உப்பில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது?
ராக் சால்ட் பற்றி நீங்கள் அதிகம் கேள்விபட்டிருப்பீர்கள். ராக் சால்ட் என்பது இயற்கை கனிமம். இது கடல் உப்பு போல கடலில் இருந்து எடுக்கப்படுவதில்லை, மாறாக பாறைகளிலிருந்து எடுக்கப்படுகிறது.
இது வெள்ளை, வெளிர் இளஞ்சிவப்பு, நீலம் என பல நிறங்களில் இருக்கும். சோடியம் குளோரைடு தவிர, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் இதில் காணப்படுகின்றன.
சந்தையில் ராக் சால்ட் ஆனது பின்க் சால்ட், ஹிமாலயன் சால்ட், லைட் சால்ட் அல்லது லோ சோடியம் சால்ட் போன்ற பெயர்களில் விற்கப்படுகிறது.
இந்த உப்பில் ஒப்பீட்டளவில் சோடியம் குறைவாகவும், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிகமாகவும் உள்ளன.
"ராக் சால்டை அளவோடு பயன்படுத்தும் போது அது ஆரோக்கியத்திற்கு நல்லது. அதில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. அவை செரிமானத்திற்கு உதவும், நீர்ச்சத்தை அதிகரிக்கும், எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்த உதவும்" என்கிறார் AIIMS இன் முன்னாள் உணவியல் நிபுணரும், ஒன் டயட் டுடேவின் நிறுவனருமான மருத்துவர் அனு அகர்வால்.
நிபுணர்களின் கூற்றுப்படி, உப்பை பற்றிய எளிய உண்மை என்னவென்றால், அதை அளவோடு பயன்படுத்துவதே சிறந்தது.
"நாம் உடைகளை மாற்றுவதைப் போல, வெவ்வேறு உணவுகளை உட்கொள்வதைப் போல, உப்பை உட்கொள்வதையும் மாற்ற வேண்டும். குறைந்த சோடியம் உப்பு என்ற பெயரில் ராக் சால்டை தொடர்ந்து பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்" என்கிறார் மூத்த உணவியல் நிபுணர் மருத்துவர் அதிதி சர்மா.
சரி, ராக் சால்டில் நம் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
எந்த உப்பிலும் உள்ள மிக முக்கியமான விஷயம் சோடியம். அது நம் உடலுக்கு இன்றியமையாதது.
நம் உடலில் சரியான அளவில் நீரைப் பராமரிக்கவும், அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை வழங்கவும் சோடியம் உதவியாக இருக்கும்.
ராக் சால்டை மிதமான அளவு பயன்படுத்துவது முக்கியம். அதை அதிகமாகச் சாப்பிடுவது பல உறுப்புகளை பாதிக்கும் என்கிறார் மருத்துவர் அனு அகர்வால்.
"ராக் சால்டில் அயோடின் சிறிதும் இல்லை. இந்த உப்பை பொருத்தவரை அது மிகப்பெரிய குறை. அயோடின் குறைபாடு குரல் வளை சுரப்பியில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். இது வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கும்" என்றும் அவர் கூறுகிறார்.
இதயம்:
வெள்ளை உப்பை விட சோடியம் குறைவாக இருந்தாலும் இதை அதிகமாக உட்கொள்வது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரகங்கள்:
அதிகப்படியான ராக் சால்டை உட்கொள்வது உடலில் அதிகப்படியான நீர் தேக்கத்தை ஏற்படுத்தி சிறுநீரகங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த நீரை அகற்ற சிறுநீரகம் கடினமாக வேலை செய்ய வேண்டும். இது வீக்கம் அல்லது நீர்க்கட்டுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மூளை:
அயோடின் குறைபாடு நரம்பு சமிக்ஞைகளை செயலிழக்கச் செய்து, நினைவாற்றல் மற்றும் கற்றல் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹார்மோன்கள்:
தொடர்ந்து ராக் சால்டை உட்கொள்வது டி3 மற்றும் டி4 ஹார்மோன்கள் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சரி, எவ்வளவு ராக் சால்ட் சாப்பிடலாம், எப்படி சாப்பிடலாம்?
ஆரோக்கியமான நபர்கள் தினமும் ஐந்து கிராமுக்கும் குறைவான உப்பை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. இது தோராயமாக ஒரு டீஸ்பூன் அளவு.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் குளோபல் ஹெல்த்தின் படி, சராசரி இந்தியர் தினமும் சுமார் 11 கிராம் உப்பை உட்கொள்கிறார், இது WHO பரிந்துரைத்ததை விட இரண்டு மடங்கு அதிகம்.
நகர்ப்புறங்களில் வசிக்கும் இந்தியர்கள் தினமும் சராசரியாக 9.2 கிராம் உப்பை உட்கொள்வதாகவும், கிராமப்புறங்களில் இந்த அளவு சுமார் 5.6 கிராமாக இருப்பதாகவும் என ஐசிஎம்ஆரின் தேசிய தொற்றுநோயியல் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுகிறது.
ராக் சால்டை தொடர்ந்து உட்கொள்ளக்கூடாது எனக் கூறும் உணவியல் நிபுணர் அனு அகர்வால், அதை மருத்துவ பரிந்துரையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



