காணொளி: கவனம் பெறும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மகளின் ஃபேஷன்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் மகள் வளர்ந்து வரும் அதே வேளையில், ஓர் அரசியல் பிம்பமாகவும் ‘வடிவமைக்கப்பட்டு’ வருகிறார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2013இல் பிறந்ததாகக் கூறப்படும் கிம் ஜூ அய், தற்போது டிசைனர் கோட்களை அணிந்து ஃபேஷன் தோற்றங்களை உருவாக்கி, நேர்த்தியான சிகை அலங்காரங்களுடன் தோன்றுகிறார். உயர்மட்ட வட்டாரங்களில் கிம் ஜூ அய் ‘இளவரசி’ என்று அழைக்கப்படுகிறார். அவரது ஆடைகள் காட்சிப் பிரசாரத்திற்காகவும் அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவரைப் போலன்றி, பெரும்பாலான குடிமக்கள் ஆடம்பர பொருட்களை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜூ அய், ‘ரூஸ்டர் ஹேர்கட்’ போன்ற சிகை அலங்காரத்துடனும் காணப்பட்டுள்ளார்.
அவரது தலைமுடியின் மேற்பகுதி மேல்நோக்கி அலங்கரிக்கப்பட்டு, நீண்ட முடி பாதியளவு பின்னால் கட்டப்பட்டுள்ளது. வட கொரியா, இந்த சிகை அலங்காரத்தை ஒரு சோஷலிச விரோத தோற்றம் என்று முத்திரை குத்தியுள்ளதாகவும், மற்ற வட கொரியர்கள் இதைப் பின்பற்றுவதைத் தடை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் நிபுணர் சியோங் சியோங்-சாங்(Cheong Seong-chang), ஜூ அய் அணியும் மேற்கத்திய ஆடைகள், அவரது ‘சமூக அந்தஸ்து சாதாரண குடிமக்களின் அந்தஸ்தில் இருந்து அடிப்படையில் மாறுபட்டது’ என்பதை நிரூபிப்பதாகக் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



