You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸாவில் தம்பியை சுமந்து கொண்டு 10 கி.மீ. நடந்த சிறுவன் - பெற்றோருடன் சேர்த்த வைரல் வீடியோ
தெற்கு காஸாவுக்கு இடமாறிய போது ஜடோவா, அவரின் தம்பி காலீத் குடும்பத்தில் இருந்து பிரிந்தனர். இந்த வீடியோ மீண்டும் ஒன்றிணைத்தது.
"தம்பியை தூக்கிக்கொண்டு என் மகன் வீடியோவில் இருக்கிறான் என பிறர் கூறியபோது ஆச்சர்யம் அடைந்தேன். நான் அதை பார்த்தபோது தாங்க முடியவில்லை, அழுதுவிட்டேன். ஜடோவா இதை செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. டெல் அல்-ஹவாவில் இருந்து ஹமாத் வரை வந்திருக்கிறான். பெரியவர்களாலேயே செய்ய முடியாது, குழந்தையை நினைத்துப் பாருங்கள். டெல் அல்-ஹவாவில் என் கணவருடன் உணவு வாங்க சென்றேன். அப்போது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீச தொடங்கியது. ஃபயர் பெல்ட், ரோபோட் பயன்படுத்தினர். குண்டு வீச்சு தீவிரமாக இருந்தது" என கூறுகிறார், ஜடோவாவின் தாய் நோஹா மஹ்மௌத் கலீல் அபு அரார்.
ஜடாவோவின் தந்தை ஜசீம் அபு அரார் கூறுகையில், "தெருவில் நுழைந்தபோது அடுத்தடுத்து குண்டுவீச்சு நடந்தது. கட்டடத்தின் வாயிலில் ஒளிந்தேன். எனக்குப் பின்னால் மூடப்பட்டதால் நான் அங்கே சிக்கிக்கொண்டேன். என் குழந்தைகளுக்கு என்ன ஆனது என தெரியவில்லை, நாங்கள் பிரிந்தோம். ஜடோவா நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். குண்டு வீசப்பட்டதும் அவர் ஓடிவிட்டார். பின் அம்மா இருந்த இடத்தில் அவர் இல்லை என்றதும் அழுத தம்பியை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளான். மற்றவர்களை பின் தொடர்ந்து சென்றிருக்கிறான்." என்றார்.
10 கி.மீக்கு மேல் தம்பியை சுமந்து சென்றுள்ளான் இச்சிறுவன்.
சிறுவன் ஜடோவா கூறுகையில், "அப்பா, அம்மாவை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என் தம்பியை தூக்கிக் கொண்டு நடந்தேன். நடந்தே நள்ளிரவில் இடத்தை வந்தடைந்தேன். பார்த்த எல்லோரிடமும் வழிகேட்டேன். குழந்தைகள் உயிரோடிருப்பதை இணையம் வாயிலாக அறிந்தேன். அவர்கள் இறந்துவிட்டதாக நினைத்தேன், நல்லவேளை, அப்படி நடக்கவில்லை." என்றார்.
ஜடோவாவை 3 தினங்களாக மீட்புக் குழுவினர் தேடினர். சிறுவர்களை அஹ்மது யூனிஸ் வீடியோ எடுத்து பதிவிட்டார்.
புகைப்பட பத்திரிகையாளர் அஹ்மத் யூனிஸ் கூறுகையில், "காஸாவில் பல்வேறு நிகழ்வுகளை நாங்கள் ஆவணப்படுத்துகிறோம். வீடியோ எடுப்பதில் அடிக்கடி சவால்களை எதிர்கொள்கிறோம். 'யாருக்காக வீடியோ எடுக்கிறீர்கள்? இதை யார் பார்ப்பார்கள்? ஏன்?' என பல கேள்விகளை மக்கள் கேட்பார்கள். உலகம் அறிய செய்கிறோம். இந்த வீடியோ உலகம் முழுவதும் சென்று சேர்ந்திருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு