You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாகர்கோவில் காசி வழக்கு: ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள் என்ன?
பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பல லட்சம் ரூபாயைப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நாகர்கோவிலைச் சேர்ந்த டி.காசி என்கிற சுஜிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
டிஜிட்டல் உலகில் தங்கள் தனியுரிமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் இளம்பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீதிபதிகள் தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி என்கிற சுஜி, சமூக ஊடகங்கள் மூலமாக பல்வேறு பெண்களிடம் பழகி அவர்களை வீடியோ, புகைப்படங்கள் எடுத்ததாக புகார் கூறப்பட்டது.
இந்தப் படங்களையும் வீடியோ காட்சிகளையும் காட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இதில் காசியால் பாதிக்கப்பட்டதாகக் கூறி 2020 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் புகார் அளித்தார்.
கன்னியாகுமாரி மாவட்ட எஸ்.பிக்கு மின்னஞ்சல் மூலமாக அவர் புகார் மனுவை அனுப்பியிருந்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய நாகர்கோவில் கோட்டார் காவல்நிலைய போலீசார், காசி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
காவல்துறையின் விசாரணையில் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் அவர் இத்தகைய மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மிரட்டப்படுவது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
காசி மீது ஏழு வழக்குகள்
காசியால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கந்துவட்டி, பெண்களை பாலியல்ரீதியாக துன்புறுத்தியது, வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியது உள்பட ஏழு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் காசி கைது செய்யப்பட்டார்.
காசி தொடர்புடைய அனைத்து வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பான ஆதாரங்களை மறைத்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டார். அவர் ஓராண்டு சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியில் வந்தார்.
வழக்கு தொடர்பாக காசியின் நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ் கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காசி பயன்படுத்திய மடிக்கணினி, ஸ்மார்ட்ஃபோன் ஆகியவற்றை காவல்துறை ஆராய்ந்தது.
'நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்கள்'
அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க புகைப்படங்களும் வீடியோக்களும் பதிவாகி இருப்பதைக் கண்டறிந்தனர். இதுதொடர்பான வழக்குகள் அனைத்தும் நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்திலும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்திலும் (பாதிக்கப்பட்டதில் ஒருவர் சிறார் என்பதால்) நடந்து வந்தது.
வழக்கின் விசாரணையில் 21 வயது பெண் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து மிரட்டி துன்புறுத்தியதாக சிபிசிஐடி பதிவு செய்த வழக்கு ஒன்றும் நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
மகிளா நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் அளித்த தீர்ப்பில், பாதிக்கப்பட்ட பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக காசிக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டணையும் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
'அறிவியல்பூர்வ சாட்சியங்கள்'
தீர்ப்பு குறித்து அப்போது பிபிசி தமிழிடம் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் லிவிங்ஸ்டன், "இந்த வழக்கில் அறிவியல்பூர்வ சாட்சியங்களும் (Scientifical evidences), வாய்மொழி சாட்சியங்களும் (Oral evidences) தான் அதிகம் இருந்தன" எனக் கூறினார்.
"வாய்மொழி சாட்சியம், பாதிக்கப்பட்ட பெண் கூறியவை, அறிவியல்பூர்வமான சாட்சியங்கள், குற்றம் சுமத்தப்பட்ட காசி பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை இணைய வல்லுநர்கள் மூலம் நீதிமன்றத்தில் நிரூபித்தோம்" எனவும் அவர் கூறினார்.
மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுவை காசி தாக்கல் செய்தார். நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
'காதல் மோசடிக்கு உதாரணம்' - நீதிபதிகள்
வழக்கில் ஜூலை 14 ஆம் தேதியன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், காசிக்கு மகிளா நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். 'ஏமாற்றுதல், மோசடி மூலம் பாலியல் வன்புணர்வு செய்தல், பணம் பறித்தல் என காதல் மோசடி (romance fraud) செயல்களுக்கு இந்த வழக்கு சிறந்த உதாரணமாக உள்ளதாக தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
'வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நபர், பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கை, உணர்வுபூர்வமான பலவீனம் மற்றும் பொருளாதார தேவை ஆகியவற்றை தனக்கு சாதகமாக பல வழிகளில் பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்' எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையம் அல்லது தொழில்நுட்பம் சார்ந்து ஈடுபடும்போது இளைஞர்களும் குடும்பத்தினரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்குமாறு நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
டிஜிட்டல் தகவல் தொடர்பு, சமூக ஊடகங்களின் வளர்ச்சி ஆகியவை மனிதர்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தியுள்ளது என்றாலும் ஏமாற்றுதல், உணர்வுபூர்வமான ஆதிக்கம் செலுத்துதல், கட்டாயப்படுத்துதல், நெருக்கமான படங்களை அனுமதியின்றி பதிவு செய்தல், அதன் மூலம் மிரட்டுதல் என சுரண்டலுக்கான வாய்ப்பையும் உருவாக்கியுள்ளதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு, எச்சரிக்கை உணர்வு மற்றும் உரிய நேரத்தில் புகார் அளிப்பது அவசியமானது எனவும் தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெண்களின் நலனுக்காக மட்டுமல்லாமல் தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் சுரண்டலுக்கு ஆளாகக் கூடிய சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த வேண்டுகோளை தாங்கள் விடுப்பதாக, நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது.
'முன்னெச்சரிக்கை அவசியம்' - நீதிபதிகள்
'அன்பு, நம்பிக்கை அல்லது ரகசியம் காப்பதாக அளிக்கப்படும் வாக்குறுதிகள் எவ்வளவு ஆழமானதாக நினைத்தாலும் மின்னணு சாதனங்கள் மூலம் நெருக்கமான புகைப்படங்கள், காணொளிகளை ஒருபோதும் பகிரக் கூடாது' என பெண்களுக்கு வேண்டுகோள் வைப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
'நம்பிக்கை துரோகம் ஏற்பட்ட பிறகு சட்டரீதியான தீர்வைத் தேடும் கடினமான ஒரு செயல்முறையைவிட முன்னெச்சரிக்கையுடன் இருப்பதே சிறந்தது' எனவும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
'வழக்கின் விசாரணையின்போது வன்முறை சம்பவங்களை நேரடியாக பார்க்கும் கட்டாயம் ஏற்படுகிறது. பாலியல் குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்களில் மனித நடத்தை சம்பவங்களை வீடியோ, புகைப்படங்களாக சமர்ப்பிக்கின்றனர்' என நீதிபதிகள் கூறினர்.
'அதிகாரிகளுக்கு மனச்சோர்வு'
வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரிகள், இதுபோன்ற காணொளி, புகைப்படங்களை பலமுறை ஆராய வேண்டியுள்ளதால், மனசோர்வுக்கு ஆளாக நேரிடுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தச் சவாலை வெளிப்படையாக எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது எனக் கூறிய நீதிபதிகள், 'கட்டாய மனநல பரிசோதனை, கவுன்சிலிங், மனஅழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள், அத்தகைய காட்சிகளைக் கையாளும் பணியாளர்களை அவ்வப்போது மாற்றுதல் அவசியம்' எனக் கூறினர்.
'பிறர் அனுபவிக்கும் துயரத்தால் ஏற்படும் மன பாதிப்பை (vicarious trauma) அடையாளம் கண்டு அதற்கேற்ப செயல்படுவதற்கான பயிற்சி ஆகியவற்றின் மூலம் இதனைச் செயல்படுத்தும் மனிதர்களைப் பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
வழக்கின் பின்னணி
நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி (28). இவர் பொறியியல் படித்துள்ளார். காசியின் தந்தை, அதே பகுதியில் கோழி இறைச்சிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
பொறியியல் படிப்பை முடித்த காசி, தந்தைக்கு உதவியாக கடையில் வியாபாரம் செய்து வந்தார்.
சமூக வலைதளங்களில் அவரிடம் பேசும் பெண்களிடம் உரையாடுவது, அந்தரங்க புகைப்படங்களைக் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக வழக்கின் புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை வைத்து அவர்களை மிரட்டி பணம், நகை பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சில பெண்களுடன் பாலுறவில் ஈடுபடும் போது அதனை காணொளியாக பதிவு செய்து, அதை வைத்து பெண்ணின் தோழிகளிடம் தன்னை அறிமுகப்படுத்தி வைக்குமாறு மிரட்டியதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.
இதுதொடர்பான வழக்குகள் அனைத்தும் நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்திலும், போக்சோ சிறப்பு நீதிமன்றத்திலும் நடந்து வந்தது. இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
மகிளா நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய், பாதிக்கப்பட்ட பெண்ணை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக காசிக்கு ஐபிசி 376(2), 354 சி மற்றும் 506(22) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டணையும், ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
வழக்கில் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடியில் 2022 ஆம் ஆண்டு வரை பணியாற்றி பிறகு பணி மாறுதலாகி கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த சாந்தியிடம் மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான நேரத்தில் பிபிசி தமிழ் பேசியது.
அவர் கூறும்போது, "இந்த வழக்கு விசாரணை மிகவும் சவாலாக இருந்தது. நாங்களும் கடுமையாக தொடர்ந்து பணியாற்றினோம். தொடர்புடைய நபர் பிணையில் விடுதலை ஆக முடியாதபடி, உரிய காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம்" என்கிறார்.
இதனால் கைது செய்யப்பட்டதிலிருந்து சுமார் மூன்று ஆண்டுகளாக சிறையிலேயே காசி இருந்ததாகவும் காவல் ஆய்வாளர் சாந்தி தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்டவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆய்வக அதிகாரிகளிடம் பேசி, முடிவுகளை விரைவாக பெற்று தந்தோம். இதனால் விசாரணை விரைவாக நடைபெற்று, விசாரணை கைதியாக சிறையில் இருந்த காலத்திலேயே காசிக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது" என்கிறார் அவர்.
தொடர்ந்து பேசிய காவல் ஆய்வாளர் சாந்தி, "இவ்வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பெரும்பாலானவர்கள் மிக எளிய பின்புலம் கொண்டவர்களாக உள்ளனர்" எனக் கூறினார்.
'இயற்கையாக சாகும் வரை ஆயுள் தண்டனை' என 2023 ஆம் ஆண்டு நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, 2026 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு