You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இரு வெற்றியாளர்களின் தொடக்கம்'; மெஸ்ஸி கையில் குழந்தையாக யமால் - சுவாரஸ்ய பின்னணி
இது 2007 ஆம் ஆண்டில் நடந்த நிகழ்வு.
தொண்டு நிறுவனத்தின் நாள்காட்டி புகைப்படப் படப்பிடிப்பின்போது, பார்சிலோனாவில் உள்ள 'கேம்ப் நௌ' மைதானத்தின் உடை மாற்றும் அறையில் லியோனல் மெஸ்ஸி ஒரு குழந்தையுடன் புகைப்படம் எடுக்கப்பட்டார்.
அப்போது மெஸ்ஸிக்கு 20 வயதுதான் ஆகியிருந்தது.
அவரது பெயர் உலக அரங்கில் அப்போதுதான் ஒளிரத் தொடங்கியிருந்தது, மேலும் வரும் ஆண்டுகளில் அவர் கால்பந்து உலகின் நட்சத்திரமாக மாறப் போகிறார் என்பதும் தெளிவாகத் தெரியத் தொடங்கியிருந்தது.
ஆனால், மெஸ்ஸியின் கைகளில் இருந்த அந்தக் குழந்தை, விரைவில் மெஸ்ஸியின் காலடிச்சுவடுகளைப் பின்பற்றி, இருபது வயதை எட்டுவதற்கு முன்பே கால்பந்து உலகில் ஒரு புதிய பரபரப்பை உருவாக்கும் என்று அந்தப் புகைப்படக் கலைஞர் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
மெஸ்ஸி கையில் வைத்திருந்த அந்தக் குழந்தைதான் லாமின் யமால்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த யமால் எனும் வீரரைக் குறித்து தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஸ்பெயின் அணி ஃபிஃபா உலகக் கோப்பையில் பிரான்சைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த வெற்றியில் யமால் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், பட்டத்தை வெல்லக்கூடிய வலுவான அணிகளில் ஒன்றான பிரான்சை ஸ்பெயின் தோற்கடித்தது.
இப்போது, அர்ஜென்டினாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றால், மெஸ்ஸியும் லாமின் யமாலும் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு ஏற்படும்.
' இரண்டு வெற்றியாளர்களின் தொடக்கம்'
லாமின் யமால் ஸ்பெயின் அணிக்காக விளையாடிய எந்தவொரு போட்டியிலும் இதுவரை தோல்வியடைந்ததில்லை.
உலகக் கோப்பை மற்றும் யூரோ தொடரில் இணைந்து அவர் தொடக்க வீரராக களமிறங்கிய 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்த இரண்டு தொடர்களிலும் தொடக்க வீரராக களமிறங்கிய ஐரோப்பிய வீரர்களில் 100% வெற்றி விகிதத்தை பதிவு செய்த ஒரே வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
லாமின் யமால் 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார்.
அப்போது அவருக்கு 17 வயது கூட ஆகவில்லை.
அவருக்கு 16 வயது 362 நாட்களும் ஆகியிருந்தன. அதாவது, 17 வயதை எட்டுவதற்கு அப்போது சில மணி நேரங்களே இருந்தன. இந்த கோல் மூலம், இத்தொடரின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
அப்போதே, நீண்ட காலமாக மறக்கப்பட்டிருந்த மெஸ்ஸி மற்றும் யமாலின் இந்த பழைய புகைப்படம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அப்போது யமாலின் தந்தை, 'இரண்டு ஜாம்பவான்களின் தொடக்கம்' என்ற தலைப்புடன் அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தின் வரலாறு என்ன?
இந்தப் புகைப்படங்களை அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் சுயாதீன புகைப்படக் கலைஞரான ஜோன் மான்ஃபோர்ட் எடுத்தார்.
லாமினின் குடும்பத்தினர் வசிக்கும் மாதாரோ நகரில் யுனிசெஃப் அமைப்பு ஒரு அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியை நடத்தியதாகவும், அதற்குப் பிறகே இந்தப் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடந்ததாகவும் அவர் அப்போது கூறினார்.
"கேம்ப் நௌ மைதானத்தில் பார்சா வீரர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக அவர் ஒரு அதிர்ஷ்டக் குலுக்கலில் பங்கேற்றார், அதில் அவர் வெற்றியும் பெற்றார்" என்று மான்ஃபோர்ட் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்தப் பணி சற்று சவாலானது என்று கூறிய அவர் "மெஸ்ஸி மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர்" என்றார்.
"அவர் உடை மாற்றும் அறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார், திடீரென்று அவர் மற்றொரு உடை மாற்றும் அறைக்குள் இருப்பதைக் கண்டார். அங்கே தண்ணீர் நிறைந்த ஒரு பிளாஸ்டிக் தொட்டியும், அதற்குள் ஒரு குழந்தையும் இருந்தது",
"அந்தச் சூழ்நிலை சற்று கடினமாக இருந்தது. ஆரம்பத்தில், குழந்தையை எப்படிப் பிடிப்பது என்று கூட அவருக்குத் தெரியவில்லை" என அவர் விவரித்தார்.
மெஸ்ஸியைப் போலவே, யமாலும் பார்சிலோனா அணிக்காக விளையாடத் தொடங்கினார். அங்கு அவர் கிளப்பின் வரலாற்றிலேயே தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கி கோல் அடித்த மிக இளைய வீரர் என்ற பெருமையையும், ஸ்பானிஷ் லீக்கில் கோல் அடித்த மிக இளைய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
2024-ல், அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலான பிறகு, அதில் இருந்த குழந்தை யமால் என்பதை, தான் உணர்ந்ததாக மான்ஃபோர்ட் கூறினார்.
"இவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றோடு நாம் தொடர்பு கொண்டிருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது" என்று பகிர்ந்து கொண்ட அவர், "உண்மையைச் சொல்லப்போனால், இது ஒரு அருமையான உணர்வு" என்றும் குறிப்பிட்டார்.
'லாமின் ஒரு நட்சத்திரமாக உருவெடுப்பார் என்று எனக்குத் தெரியும்'
லாமினின் பெற்றோரும் ஆப்ரிக்காவிலிருந்து குடிபெயர்ந்தனர்.
அவரது தந்தை மொனீர் நர்சோய் மொராக்கோவில் பிறந்தவர், அவரது தாய் ஷீலா இபானா கினியாவைச் சேர்ந்தவர். அவர்கள் பார்சிலோனாவின் புறநகர்ப் பகுதியில் வசித்து வந்தனர்.
"அவர் பிறந்த தருணத்திலேயே அவர் ஒரு நட்சத்திரமாக மாறப்போகிறார் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்" என்று அவரது தந்தை யூரோ 2024 இறுதிப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பெருமையுடன் தெரிவித்தார்.
அவர் குழந்தையாக இருந்தபோது, வரலாற்றின் மிகச்சிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸியைச் சந்தித்தார்.
அர்ஜென்டினா வீரரான மெஸ்ஸிக்கு அப்போது 20 வயதுதான் ஆகியிருந்தது, மேலும் அவர் யுனிசெஃப் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
அவர் பார்சிலோனா கால்பந்து கிளப்பில் லாமினுடன் ஒரு புகைப்படம் எடுத்திருந்தார்.
"அவர் லாமினை ஆசீர்வதித்தது அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு தற்செயலான நிகழ்வு" என்று லாமினின் தந்தை குறும்புத்தனமாகக் கூறுகிறார்.
இப்போது, இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவும் ஸ்பெயினும் மோதினால், மெஸ்ஸியும் யமாலும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வார்கள். அந்தத் தருணம் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு எவ்வளவு சிறப்பானதாக இருக்குமோ, அதேபோல யமாலுக்கும் அது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு