You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிஎஸ்கேவை உச்சத்திற்கு கொண்டு சென்ற ஃப்ளெமிங் அதன் சரிவுக்கும் ஒரு காரணமானது எப்படி?
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் ஸ்டீஃபன் ஃபிளெமிங். 2009-ஆம் ஆண்டு முதல் நீண்ட காலம் சிஎஸ்கே அணியின் அங்கமாக இருந்த அவர் சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பில் இருந்துமே விலகியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான பயிற்சியாளர் இவர்தான். ஐபிஎல் தொடரில் அதிக முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியும் சிஎஸ்கேதான். அதில் 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி அதில் 5 கோப்பைகளையும் வென்றிருக்கிறது. வேறு எந்த அணியுமே ஐபிஎல் தொடரில் இவ்வளவு முறை பிளே ஆஃப் சுற்றுக்கோ, இறுதிப் போட்டிக்கோ நுழைந்ததில்லை.
அதுமட்டுமல்லாமல், முன்பு நடந்துகொண்டிருந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரிலும் 5 சீசன்களில் இரண்டு முறை சிஎஸ்கே அணிக்கு கோப்பை வென்று கொடுத்திருக்கிறார் ஃபிளெமிங்.
இப்படி பல சாதனைகள் படைத்திருந்தாலும், ஐபிஎல் அரங்கில் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாகவே அவருடைய பயிற்சியின் மீதும், அணிக் கட்டமைப்பின் மீதும் பெரும் விமர்சனங்கள் எழுந்தன.
தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சிஎஸ்கே, கடந்த 3 சீசன்களாக தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போனதால், ஃபிளெமிங் மீதான விமர்சனங்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தன. அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று ரசிகர்களும் சமூக ஊடகங்களில் வாதிட்டனர். இந்நிலையில், ஜூலை 13 அன்று அவர் பதவி விலகிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஒரு பலமான, சீரான சூப்பர் கிங்ஸ் அணியைக் கட்டமைத்ததில் ஃபிளெமிங் பங்களிப்பு என்ன? சூப்பர் கிங்ஸின் சரிவில் அவர் செய்த தவறுகள் என்ன? எந்த விஷயத்தில் அவர் பின்தங்கினார்? அலசுவோம்.
ஃபிளெமிங்கின் சிஎஸ்கே பாரம்பரியம்
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஃபிளெமிங், அதோடு ஓய்வு பெற்றுவிட்டு, அடுத்த சீசனில் பயிற்சியாளர் பொறுப்பை எடுத்துக்கொண்டார்.
'ஐபிஎல் என்பது சிஎஸ்கே அணியுடன் யார் ஃபைனலில் மோதுவது என்பதற்காக 7 அணிகளுக்குள் நடக்கும் தொடர்' என்றெல்லாம் கூட பேசப்பட்டதுண்டு.
அப்படியான ஒரு நிலையான செயல்பாட்டுக்கு அவர்களின் அணிக் கட்டமைப்பே முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது. ஒரு குடும்பம் போன்ற சூழல் உருவாக்குவது, ஒரு நிலையான அணி, அதில் வீரர்களுக்குக் கொடுக்கப்படும் உத்திரவாதம் போன்றவை அந்த அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கிய அங்கமாக விளங்கின.
மற்ற அணிகள் இளைஞர்கள் மீதும், அதிரடி சூப்பர் ஸ்டார்கள் மீதும் கவனம் செலுத்தும்போது, சிஎஸ்கே அனுபவத்தின் பக்கம் நிற்கும். தங்கள் சூழலுக்கு ஏற்ற வீரர்களையே அந்த அணி ஒப்பந்தம் செய்ய நினைக்கும். ராபின் உத்தப்பா, அஜிங்க்யா ரஹானே போன்ற வீரர்கள் அதற்கான உதாரணங்கள்.
மற்ற அணிகளில் தடுமாறிக்கொண்டிருந்தவர்கள் சூப்பர் கிங்ஸில் ஜொலித்ததன் காரணம் அதுதான். அவர்களுக்கென்று சரியான 'ரோல்' கொடுக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கான உத்திரவாதமும் அங்கு இருக்கும்.
கேப்டன் தோனி - பயிற்சியாளர் ஃபிளெமிங் கூட்டணி அந்த அணிக்குள் இப்படியொரு நிலையான சூழலை உருவாக்கினார்கள். நெடுங்காலம் அதுவே சிஎஸ்கே அணியின் அடையாளமாக இருந்துவந்தது. தன் சிறப்பான வீரர் மேலான்மை மூலம் அதை உறுதிப்படுத்தினார் ஃபிளெமிங்.
உதாரணமாக 2023 ஐபிஎல். பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரரை 16.25 கோடி ரூபாய்க்கு எடுத்திருந்தாலும் அவரை அவர்கள் களமிறக்கியது இரண்டே போட்டிகளில் தான். ஒரு மிகப் பெரிய வீரரை பெரும் தொகைக்கு எடுத்துவிட்டோம் என்ற காரணத்துக்காக அவர்கள் ஸ்டோக்ஸை களமிறக்கவேண்டும் என்ற கட்டாயத்துக்கு செல்லவில்லை.
இன்னொருபக்கம், அப்படியொரு பெரிய வீரர் வெளியிலேயே அமரவைக்கப்படும்போது, அது சலசலப்புகளை உண்டாக்கும். அணிக்குள் சில நேரங்களில் நிலைத்தன்மையைக் கூட பாதிக்கும். ஆனால், இதுபோன்ற சூழ்நிலைகளில் தான் ஃபிளெமிங் தன் குணத்தாலும், தன் அணுகுமுறையாலும் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார்.
வீரர்களிடம் அவர் அதிகமாகப் பேசுபவர் அல்ல. ஆனால், பேசும்போது ஒளிவு மறைவு இல்லாமல் நேர்மையாக ஒரு விஷயத்தைப் பரிமாறக்கூடியவர். அதை தன்மையாகவும் சொல்லக்கூடியவர். அதனால், அந்த வீரர்களும் அதை நல்லபடியாக எடுத்துக்கொள்கிறார்கள்.
சமீபத்தில் இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தளத்தில் உரையாடியபோது ஃபிளெமிங் பற்றிப் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, "ஃபிளெமிங் அரிதாகவே உங்களிடம் வந்து ஒரு விஷயத்தைச் சொல்வார். அவர் அப்படிச் சொன்னாலே அதை ஆத்மார்த்தமாக சொல்கிறார் என்றுதான் அர்த்தம். அதை நீங்கள் அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் பேசவேண்டும் என்பதற்காக எதையும் சொல்லிவிடமாட்டார்." என்றார்.
அதே உரையாடலின்போது, சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹெய்டன், 2010-இல் நடந்த ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். "2010ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் விளையாடினோம். அப்போது என் கிரிக்கெட் கரியரின் அந்திமக் காலம். எனக்கும் பெரிதாக உத்வேகம் ஏதும் இருக்கவில்லை. நான் நல்ல உடல் தகுதியோடுதான் இருந்தேன். ஆனால், முழுமையான ஈடுபாட்டைக் காட்டவில்லை.
அதனால், என்னை அணியிலிருந்து நீக்கவேண்டிய சூழல் ஃபிளெமிங்குக்கு ஏற்பட்டது. அந்த விஷயத்தைச் சொல்ல என் அறைக்கு வந்த அவருக்கு வார்த்தையே வரவில்லை. மிகவும் பதற்றமாக இருந்தார். வார்த்தைகளை விழுங்கி விழுங்கி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். 'நான் உங்கள் வேலையை எளிதாக்குகிறேன். நான் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன்' என்று நானே சொல்லிவிட்டேன். இருவரும் சத்தமாகச் சிரித்தோம்." என்று அவர் கூறினார்.
அனுபவ வீரர்களுக்கு எப்போதுமே மதிப்பும், முன்னுரிமையும் கொடுக்கும் ஓர் அணி, அதன் பயிற்சியாளர் இப்படி வீரர்களை அணுகுவதிலும் தன்மையாக நடந்துகொள்ளும்போது அங்கே ஒரு நிலையான சூழல் ஏற்பட்டுவிடுமல்லவா. சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிப் பயணத்துக்கு அது முக்கியமானதாக இருந்தது.
வீரர்களின் நலனைக் காப்பதில் யாரும் பேசாத இன்னொரு விஷயமும் இருக்கிறது - பத்திரிகையாளர் சந்திப்பு. ஒரு போட்டி முடிந்ததும் இரு அணிகளின் சார்பாகவும் ஒவ்வொருவர் வந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்வது வழக்கம். ஒவ்வொரு அணியிலுமே வெற்றி, தோல்விக்குப் பின்னர் பயிற்சியாளர்கள், வீரர்கள் என மாறி மாறி வருவார்கள். ஆனால், சிஎஸ்கே இந்த விஷயத்தில் தனித்து விளங்கியது.
அந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால், வீரர்கள் வந்து பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள். அதுவே தோல்வியடைந்தால், பயிற்சியாளர்கள் மட்டும்தான் வருவார்கள். ஒன்று ஃபிளெமிங் வருவார். அல்லது பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர் போன்ற பயிற்சியாளர் குழுவில் இருந்து ஒருவர் வந்து கேள்விகளை எதிர்கொள்வார்.
பத்திரிகையாளர்களின் கடினமான கேள்விகளை வீரர்கள் எதிர்கொள்ள அவர் விடமாட்டார்கள். இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் கூட வீரர்களை நல்ல மனநிலையில் வைத்திருப்பதை சிஎஸ்கே உறுதி செய்திருந்தது.
தலைகீழாக மாறிய சூழ்நிலை
2023 வரை மிகச் சிறப்பாக சென்றுகொண்டிருந்த சூப்பர் கிங்ஸின் பயணம், கடந்த 3 ஆண்டுகளில் தடம்புரண்டுவிட்டது. தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின், அடுத்த 3 ஆண்டுகளில் அந்த அணி ஒருமுறை கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. ஆனால், தோனி கேப்டனாக இல்லாதது மட்டுமே இதற்கு காரணம் இல்லை.
2024-ஆம் ஆண்டு ஐபிஎல் ஒரு பெரும் பரிணாம மாற்றத்தைச் சந்தித்தது. இம்பேக்ட் பிளேயர் விதியை அணிகள் நன்கு புரிந்துகொண்டபின், அதிரடி அடுத்த கட்டத்துக்குச் சென்றது. சன்ரைசர்ஸ், நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகள் அதிரடியையே தங்கள் தாரக மந்திரமாக மாற்ற, 250 என்பது எளிதில் கடக்கக்கூடிய ஸ்கோராக மாறியது. மற்ற அணிகளெல்லாம் அதற்கு தகவமைத்துக்கொள்ள, அதற்கு ஏற்ப தங்கள் அணியின் கட்டமைப்பையும் மாற்ற, சிஎஸ்கே பழைய அணுகுமுறையிலிருந்து விலக மறுத்தது.
2025 ஐபிஎல் தொடருக்கு முன்பான மெகா ஏலத்தில் அப்படி பழைய பாணியிலான ஓர் அணியையே கட்டமைதத்து சிஎஸ்கே. அது அவர்களைக் கடைசி இடத்துக்குத் தள்ளியது. ஆனால், பிரச்னைகளை ஏற்றுக்கொள்ள சிஎஸ்கே தயாராக இல்லை. அனுபவ வீரர்களைத் தொடர்ந்து நம்பியதில் தவறில்லை என்றாலும், ஐபிஎல் சென்ற பாதைக்கு ஏற்ற வீரர்களை அவர்கள் தேர்வு செய்யவில்லை.
2026 சீசனுக்கு முன்பான ஏலத்தில் அதை சரிசெய்ய முயற்சி செய்தவர்கள், ஒரேயடியாக இரு இளம் வீரர்களில் மொத்தமாக முதலீடு செய்ய, அணியின் காம்பினேஷன் பெரும் அடி வாங்கியது. சூப்பர் கிங்ஸால் ஒரு நிலையான அணியை உருவாக்கவே முடியவில்லை.
"முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை", "எங்கள் அணுகுமுறையாலும் ஆட்டத்தை வெல்லலாம், அப்படித்தான் இத்தனை காலம் சோபித்திருக்கிறோம்", "டி20 கிரிக்கெட்டில் ஃபினிஷர் என்ற ரோலே இல்லை" என்று திட்டத்தை மாற்றாத தங்கள் முடிவுக்குப் பிடிவாதமாக காரணங்கள் சொல்லிக்கொண்டே இருந்தார் ஃபிளெமிங்.
அதையே மற்ற பயிற்சியாளர்களும், அணியின் கேப்டனும் பின்பற்ற, அது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. ஒருசில அணிகள் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு கட்டமைப்பை மாற்றிக்கொள்ள, சிஎஸ்கே அதைச் செய்யாததால் பின்தங்கத் தொடங்கியது. அதனாலேயே கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், முன்பு சிஎஸ்கே அணியின் பலமாகக் கருதப்பட்ட 'வீரர்களின் ரோல் தெளிவு' கடந்த 2 ஆண்டுகளில் இல்லை. யாருக்கு என்ன வேலை என்பதே சந்தேகமாக இருந்தது. அந்தத் தெளிவு இல்லாததால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. மாற்றமே செய்யாத ஓர் அணி, போட்டிக்குப் போட்டி பல மாற்றங்கள் செய்தது. இப்படி தாங்கள் இருந்ததற்கு நேர்மாறான ஒரு பாதையில் சூப்பர் கிங்ஸ் சென்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கவே, ஃபிளெமிங் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும் என்ற வாதம் எழுந்தது.
மற்ற லீகைச் சேர்ந்த சூப்பர் கிங்ஸ் அணிகளும் சாம்பியன் பட்டம் வெல்லத் தவறவே அந்த வாதம் வலுக்கத் தொடங்கியது. சரியாக, எம்எல்சி தொடரில் டெக்சஸ் சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தில் முடித்த ஒரு சில நாள்களில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
ஃபிளெமிங் மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் சொன்னது என்ன?
சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவு பற்றிப் பேசிய ஃபிளெமிங், "விளையாட்டுத் துறையில் பதினெட்டு ஆண்டுகள் என்பது ஒரு வாழ்நாளாகும். நான் நன்றி உணர்வுடன் மட்டுமே விடைபெறுகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான காலம், எனது பயிற்சியாளர் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். நாம் சாதித்த எல்லாவற்றையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
நாம் அனைவரும் இணைந்து, மறக்க முடியாத வெற்றிகளைக் கொண்டாடினோம், கடினமான தருணங்களைக் கடந்து வந்தோம், மேலும் என்னுடன் எப்போதும் நிலைத்திருக்கும் நினைவுகளை உருவாக்கினோம். சிஎஸ்கே எப்போதும் எனது இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். மேலும், வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கும் நான் இந்த அணிக்காக ஆதரவளித்துக் கொண்டே இருப்பேன்." என்று கூறியதாக அந்த அணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஃபிளெமிங் சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அந்த அணியின் உரிமையாளர் ரூபா குருநாத், "இந்த அணியின் ஒட்டுமொத்த பயணத்திலும் ஸ்டீஃபன் ஃபிளெமிங் எங்கள் பயிற்சியாளர் குழுவின் உயிராக விளங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட கடந்த இரண்டு தசாப்தங்களாக, நமது தனித்துவம், தொலைநோக்கு பார்வை மற்றும் இலக்குகளை வடிவமைக்க அவர் உதவியுள்ளார்.
சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள அனைவரின் சார்பாகவும், அவரது அயராத அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் தலைமைத்துவத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மைதானத்தில் நமது பயணம் முடிவுக்கு வந்தாலும், அவர் எப்போதும் அணியின் வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாகவே இருப்பார்." என்று கூறினார்.
சிஎஸ்கே எப்படிப்பட்ட அணியாக இருக்கவேண்டும் என்பதை வரையறுக்க ஃபிளெமிங் உதவியதாகத் தெரிவித்தார் அந்த அணியின் தலைமை நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன்.
"இந்தப் பயணத்தின் ஆரம்ப நாட்களிலிருந்தே, நாம் எப்படி விளையாடினோம் என்பதை மட்டுமல்லாமல், ஓர் அணியாக நாம் என்னவாக இருக்க விரும்புகிறோம் என்பதையும் வரையறுக்க ஃபிளெமிங் உதவினார். அவர் சீரான தன்மை, பணிவு மற்றும் அணிக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு கலாசாரத்தை உருவாக்கினார்.
மனிதர்களைப் புரிந்து கொண்டு, அணியில் உள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் சிறந்த திறமையை வெளிக்கொண்டு வரும் அவரது ஆற்றல், அவரது மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அவரது தாக்கம் மைதானத்தின் எல்லைகளைத் தாண்டியும் பரவிய ஒன்று. இந்தச் சிறப்பான பயணத்தை ஒன்றாகப் பகிர்ந்து கொண்டதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்," என்று கூறினார்.
ஃபிளெமிங் தலைமையில் சூப்பர் கிங்ஸ் அணிகளின் முடிவுகள்
கிட்டத்தட்ட 2 தசாப்தங்களாக சூப்பர் கிங்ஸ் அணியோடு பயணித்த ஸ்டீஃபன் ஃபிளெமிங் அனைத்து அணிகளுடனுமே சிறப்பான முடிவுகளைப் பதிவு செய்திருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ஐபிஎல்
2009 - அரையிறுதி
2010 - சாம்பியன்
2011 - சாம்பியன்
2012 - இரண்டாம் இடம்
2013 - இரண்டாம் இடம்
2014 - பிளே ஆஃப்
2015 - இரண்டாம் இடம்
2018 - சாம்பியன்
2019 - இரண்டாம் இடம்
2020 - 7வது இடம் (8 அணிகள்)
2021 - சாம்பியன்
2022 - 9வது இடம் (10 அணிகள்)
2023 - சாம்பியன்
2024 - 5வது இடம் (10 அணிகள்)
2025 - 10வது இடம் (10 அணிகள்)
2026 - 8வது இடம் (10 அணிகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் - சாம்பியன்ஸ் லீக் டி20
2010 - சாம்பியன்
2011 - குரூப் சுற்று
2012 - குரூப் சுற்று
2013 - அரையிறுதி
2014 - சாம்பியன்
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - எஸ்ஏ20
2023 - அரையிறுதி
2024 - பிளே ஆஃப்
2025 - பிளே ஆஃப்
2026 - பிளே ஆஃப்
டெக்சஸ் சூப்பர் கிங்ஸ் - எம்எல்சி
2023 - பிளே ஆஃப்
2024 - பிளே ஆஃப்
2025 - பிளே ஆஃப்
2026 - 6வது இடம்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு