செம்பி - சினிமா விமர்சனம்

கோவை சரளா

பட மூலாதாரம், @tridentartsoffl

பிரசுரிக்கப்பட்டது

நடிகர்கள்: கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா, நிலா, நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா, கு. ஞானசம்பந்தன்; ஒளிப்பதிவு: எம். ஜீவன்; இசை: நிவாஸ் கே. பிரசன்னா; இயக்கம்: பிரபு சாலமன்.

 

மலை, காடு சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி தொடர்ந்து படங்களை இயக்கி வரும் பிரபு சாலமன் 'காடன்' படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் இது. பெரிதும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே நடித்துவரும் கோவை சரளா, கதையின் நாயகியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

 

செம்பி படத்தின் கதை இதுதான்: கொடைக்கானலின் புலியூரைச் சேர்ந்த பழங்குடியின பெண் வீரத்தாயி (கோவை சரளா). தன் 10 வயது பேத்தி செம்பியுடன் (நிலா) வாழ்ந்து வருகிறார். காட்டுப்பகுதியில் கிடைக்கும் மலைத்தேன், கிழங்குகளை விற்று தன் அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் வீரத்தாயின் பேத்தி செம்பியை கொடைக்கானலை சுற்றிப் பார்க்க வந்த மூன்று இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குகின்றனர். தன் பேத்திக்கு நியாயம் பெற்றுத் தர போராடுகிறார் வீரத்தாயி. குற்றவாளிகள் யார், அந்தப் போராட்டத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகத் துவங்கியுள்ளன. பெரும்பாலான விமர்சனங்கள், சில குறைகள் இருந்தாலும் பொதுவாக படம் சிறப்பாக இருப்பதாகவே கூறியுள்ளன.

படத்தில் தென்படும் தடுமாற்றம்

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பிரச்னையை கையிலெடுத்து, அழுத்தமான வலியை கடத்த நினைத்திருக்கும் பிரபு சாலமனின் 'செம்பி' சில தடுமாற்றங்களால் திணறியிருக்கிறது என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.

 

"பாலியல் வன்கொடுமையை தேர்தலுக்காக பயன்படுத்தும் கட்சிகள், அதிகாரத்துக்கும் பணத்துக்கும் படியும் காவல் துறை, பொது சமூகத்தின் கண்ணோட்டம் என பல்வேறு விஷயங்களை பேசுகிறது படம். ஆனால், படத்தில் ஓடும் பேருந்து ஓரிடத்திற்கு பிறகு தடம் மாறுவது போல, படமும் அதன் பாதையிலிருந்து விலகி விடுகிறது. தொடக்கத்தில் கோவை சரளா பார்வையிலிருந்து பயணிக்கும் படம், ஒரு கட்டத்தில் மீட்பராக வரும் அஸ்வினிடம் தஞ்சம் புகுந்து ஹீரோயிசத்திற்கு அடிபணிவது நெருடல்.

 

‘மைனா’ படத்தை நினைவூட்டும் பேருந்து காட்சிகளும், அதில் நீளும் பாடமெடுக்கும் வசனங்களும், அதீத உரையாடல்களும் அயற்சி.

அஸ்வினை நல்லவராக காட்ட வைக்கப்பட்ட காட்சிகளும், சண்டைக் காட்சிகளும், நாயக பிம்பத்தை கட்டமைப்பதும் பலவீனம்.

யதார்த்தத்திலிருந்து விலகும் பேருந்து சாகச காட்சிகளும், மேலோட்டமாக நகரும் நீதிமன்ற காட்சியும் தேவையான அழுத்தத்தைக் கூட்டவில்லை" என்கிறது இந்து தமிழ் திசை.

கோவை சரளா

பட மூலாதாரம், @tridentartsoffl

சின்ன, சின்ன யோசனை

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

'லாஜிக்' குறைகளை அடைக்கும் வகையில் திரைக்கதையில் வேலை செய்திருந்தால் செம்பி இன்னும் சிறப்பான ஒன்றாக இருந்திருக்கும் என்கிறது தினமணியின் விமர்சனம்.

 

"பிரபு சாலமன் காவல்துறையின் குறைகளை எந்தளவு சுட்டிக் காட்ட முடியுமோ அதை சேர்த்தே திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.

முதல் பாதியில் காவல்துறை அதிகாரியாக வரும் நடிகர், கோவை சரளாவிடம் பேசும் வசனங்கள் சாதாரண பொதுமக்களை நோக்கி வைக்கப்படும் அதிகாரத்தின் ஏளனங்களாக மிக யதார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது. 

வலிமையான கதைக்கு இன்னும் வேகமான திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம். இரண்டாம் பாதி முழுவதும் பேருந்திலேயே கதை நகர்கிறது.

அதில் நடக்கும் உரையாடல்களும், நடவடிக்கைகளும் இயல்பு வாழ்க்கையில் யாருடைய வாழ்விலும் நடைபெறாதது. திரைக்காக அப்படியொரு காட்சிகள் வைக்கப்பட்டாலும் அதனை இன்னும் அழுத்தமாக படமாக்கியிருக்கலாம் எனத் தோன்றியது.

 

படத்திற்கான நல்ல ஆறுதல் நகைச்சுவை. சரியான ஒரு கதையில் சற்று பிசகினாலும் சிக்கலைத் தெரிய வாய்ப்பிருக்கும் நகைச்சுவை காட்சிகளை மெனக்கெட்டு சரியாக அமைத்துள்ளனர் என சொல்லலாம்.

தம்பி ராமையா தொடங்கி பேருந்தில் பயணிக்கும் சக பயணிகள் வரை நகைச்சுவை காட்சிகளை சிறப்பாகக் கொடுத்திருக்கின்றனர்.

செம்பிக்கு உதவ உடனடியாக நீதிமன்றத்தில் முறையிடுவது தொடங்கி அதற்காக ஆதாரங்களைத் திரட்ட சைபர் கிரைம் வசதி வரை பேருந்துக்குள்ளேயே ஏற்பாடு செய்யும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளதெல்லாம் பார்வையாளர்களை நம்பவைக்கும் அளவு உருவாக்கப்பட்டவில்லை.

போக்சோ சட்டம் குறித்து பல கோணங்களை பேச முயற்சித்துள்ளதை இன்னும் தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம். 

இவை அனைத்தும் திரைமொழிக்கான குறைகளேயன்றி திரைப்படத்தின் நோக்கத்தின் மீதான குறைகள் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் ஆதரவாக நிற்க வேண்டிய சமூகம் அமைதி காப்பது எந்தளவு ஆபத்தானது என பேசும் செம்பி அந்த ஆதரவு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வழிசெய்யும் என்பதையும் சுட்டிக்காட்ட முயற்சித்துள்ளது.

அன்பை பேச முயற்சித்திருக்கிறது செம்பி. இதன் குறைகளை பெரிதாக பொருட்படுத்தத் தேவையில்லை" என்கிறது தினமணியின் விமர்சனம்.

இரண்டாம் பாதியில் இது மிஸ்ஸிங்

கோவை சரளா

பட மூலாதாரம், @tridentartsoffl

படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்று பலவீனமாக இருப்பதோடு, சில காட்சிகள் தர்க்கத்திற்கு பொருந்தாத வகையிலும் இருக்கின்றன. ஆனால், படம் சுவாரஸ்யமாகவே நகர்கிறது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம்.

 

"செம்பி நாம் இதுவரை காணாத ஒரு கதையில்லை. ஆனால், இதில் வரும் பாத்திரங்களும் கதை அமைப்பும்தான் புதுமையானவை. தேனடையிலிருந்து எப்படி தேனை எடுக்க வேண்டுமென பேத்திக்கு வீராயி சொல்லித்தரும் முதல் காட்சியிலேயே நாம் வீராயியை நேசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

 

காவல்துறை அதிகாரியை வீராயி அடித்துத் துவைத்துவிட்டு பேத்தியுடன் தப்பிச் செல்லும் காட்சி அட்டகாசமாக வந்திருக்கிறது. ஆனால், இந்தத் தன்மையை படம் நெடுக கொண்டுவர இயக்குநர் தவறிவிட்டார்.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் நிகழ்ச்சிகள் இன்னும் சுவாரஸ்யத்தைக் கூட்டுபவையாகவும் தீவிரமாகவும் இருந்திருக்க வேண்டும். பேருந்தில் இருக்கும் 24 பேரும் வேறொரு பேருந்துக்கு மாற்றப்படும் காட்சி சிறப்பாக படம்பிடிக்கப்பட்டிருந்தாலும் கதைக்கு உதவவில்லை.

கோவை சரளா

பட மூலாதாரம், @tridentartsoffl

இயக்குநருக்கு பாராட்டு

மையப் பாத்திரங்களின் வலியை, படம் பார்ப்பவர்களை உணரச் செய்வதன் மூலம், இயக்குநர் ஒரு உண்மையான படைப்பைக் கொடுத்திருக்கிறார்."  என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம்.

 

இந்தப் படத்தில் கோவை சரளா, அஸ்வின் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பை அனைத்து விமர்சனங்களுமே பாராட்டியுள்ளன. அதேபோல, ஜீவனின் ஒளிப்பதிவையும் நிவாஸ் கே. பிரசன்னாவின் பின்னணி இசையையும் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதாக விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

 

"தன்னுடைய முகத்தோற்றத்தை மாற்றி, சுருக்கம் உள்ளிட்ட நுணுக்கங்களுடன் பழங்குடியின மக்களில் ஒருவராக திரையில் தோன்றுகிறார் கோவை சரளா. இதுவரை நடித்ததிலேயே முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அனுபவம் வாய்ந்த தனது நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த திரையையும் ஆக்கிரமித்து மிரட்டுகிறார். ஓரிடத்தில் அவர் உடைந்து அழும் காட்சியில் கலங்கச் செய்து முத்திரைப் பதிக்கிறார்.

 

செம்பியாக நடித்திருக்கும் சிறுமி நிலா, நேர்த்தியான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுக்கிறார். குறிப்பாக குற்றவாளிகளைக் கண்டு நடுங்கும் காட்சியும், க்ளைமாக்ஸின் நடிப்பும் திரைத் துறையில் அவருக்கான எதிர்கால இடத்தை உறுதி செய்கிறது. அஸ்வின் தனக்கான கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் நடிப்பை பதிவு செய்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, ஞான சம்பந்தன் உள்ளிட்டோர் துணைக் கதாபாத்திரங்களுகளில் வலு சேர்க்கின்றனர்" என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.

தினமணியின் விமர்சனமும் இதையே சுட்டிக்காட்டுகிறது.

 

"முதல்பாதி கோவை சரளாவிற்கு என்றால் இரண்டாம் பாதி அஸ்வினுக்கு. தொடர்ந்து தன்னை மெருகேற்றி வருகிறார் அஸ்வின்.

பின்னணி இசை ரசிக்கும்படியாக இருக்கிறது. முதல் பாதியில் வரும் இயற்கை சார்ந்த காட்சிகளுக்கு பின்னணி இசை பக்கபலமாக இருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல.

இவை தவிர மற்ற அவ்வப்போது அரசியல்வாதிகளாக வரும் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் சரியான தேர்வு." என்கிறது தினமணி.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, படத்தின் முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க படமாக செம்பி இருப்பதாக ஊடக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: