த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், சன்னி லியோன், கோவை சரளா: வெல்லப்போவது யார்?

பட மூலாதாரம், LycaProductions/Twitter
த்ரிஷா, சன்னிலியோன், ஐஸ்வர்யா ராஜேஷ், கோவை சரளா என நாயகிகளை மையப்படுத்திய நான்கு படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன.
பொங்கலுக்கு இரு வாரங்களே இருக்கும் நிலையில், பெரிய நடிகர்களின் படங்களோ, பெரிய பட்ஜெட் படங்களோ அடுத்த இரண்டு வாரங்களில் வெளியாக வாய்ப்பில்லை. ஆகவே, இந்த இரண்டு வார வசூலை குறிவைத்து பல படங்கள் இந்த இரு வாரங்களுக்குள் வெளியாகின்றன.
இந்த வாரத்தைப் பொறுத்தவரை, த்ரிஷா நடித்த 'ராங்கி', சன்னி லியோன் நடித்த 'ஓ மை கோஸ்ட்', ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'டிரைவர் ஜமுனா', கோவை சரளா நடித்த 'செம்பி' ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்த நான்கு படங்களிலுமே நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
1. ராங்கி: எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய எம். சரவணன் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது ராங்கி. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தில் த்ரிஷா பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லரும், காவல்துறை அதிகாரியுடன் த்ரிஷா மோதும் காட்சிகளும் ஏற்கனவே வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. "பொம்பளைய கதறவிட ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது, அதுக்கு மேலயும் வேணும், கீழயும் வேணும்" என்று அவர் பேசும் வசனும் கவனிப்பைப் பெற்றிருக்கிறது. த்ரிஷா இதற்கு முன்பாக மோகினி, நாயகி போன்ற நாயகியை மையப்படுத்திய படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும், இந்தப் படத்தில் அவருக்கு பல ஆக்ஷன் காட்சிகளும் இருக்கின்றன என்பதால், பெரும் வரவேற்பைப் பெரும் என படக்குழு நம்புகிறது.
2. ஓ மை கோஸ்ட்: ஏற்கனவே 'வடகறி' படத்தில் லேசாகத் தலையைக் காட்டியிருந்தாலும், இந்தப் படத்தில் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார் சன்னி லியோன். சதீஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், ஜி.பி. முத்து, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்க, நகைச்சுவை, கவர்ச்சி கலந்த பேய்ப் படமாக உருவாகியிருக்கிறது இந்தப் படம். சிந்தனை செய் படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குநர் ஆர். யுவனின் அடுத்த படம் இது. சன்னி லியோன், ஜி,பி. முத்து என சமூக வலைதள பிரபலங்கள் இருப்பதால் படத்திற்கு நல்ல ஓபனிங் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
3. டிரைவர் ஜமுனா: ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே க.பெ. ரணசிங்கம் போன்ற நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், அந்தப் படத்தில் கதாநாயகர்களும் இருப்பார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க ஐஸ்வர்யா ராஜேசின் பாத்திரத்தைச் சுற்றியே எழுதப்பட்டிருக்கிறது கதை. குடும்பச் சூழலின் காரணமாக டாக்ஸி ஓட்டும் வேலையைச் செய்கிறார் ஐஸ்வர்யா. இந்த நிலையில், ஒரு கூலிப்படை இவரது காரில் ஏறுகிறார்கள். அவர்களைக் காவல்துறை துரத்த ஆரம்பிக்கிறது. இதனால், ஐஸ்வர்யா ராஜேஷை பிணைக் கைதியாக்குகிறார்கள். இந்தச் சிக்கல்களில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. நாயகனோ, காதல் காட்சிகளோ, பாடல்களோ படத்தில் இல்லை என்பதால் விறுவிறுப்பாக படம் நகர்வதாகச் சொல்கிறார்கள்.

பட மூலாதாரம், @tridentartsoffl/Twitter
4. செம்பி: மைனா, கயல், கும்கி படங்களை இயக்கிய பிரபு சாலமனின் அடுத்த படம் இது. அழுத்தமான கதைகளையே எடுத்துக் கொள்ளும் பிரபு சாலமன், இந்தப் படத்தில் பேத்திக்காகப் போராடும் பாட்டியின் கதையைச் சொல்கிறார். தனது பத்து வயதுப் பேத்திக்கு நியாயம் பெற்றுத்தர போராடும் வீரத்தாயி என்ற பழங்குடியினப் பெண்ணாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் கோவை சரளா. கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே சதி லீலாவதி போன்ற சில படங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம் முழுக்க முழுக்க கோவை சரளாவின் பாத்திரத்தையே சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக தனது வழக்கமான உடல்மொழியையே மாற்றியிருக்கிறார் அவர்.
இந்தப் படங்கள் தவிர, பி.வி. பிரசாத் இயக்கி நடித்திருக்கும் சகுந்தலாவின் காதலன், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் காலேஜ் ரோட், ஆர்.கே.வி. இயக்கத்தில் கடைசி காதல் கதை ஆகிய படங்களும் வெளியாகின்றன. இது தவிர, ஆஹா ஓடிடி தளத்தில் உடன்பால் என்ற படம் நேரடியாக வெளியாகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்































