பெண்ணின் கருப்பைக்குப் பதிலாக கல்லீரலில் 3 மாத கரு - உத்தரபிரதேசத்தில் என்ன நடந்தது?
உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷஹரை சேர்ந்த சர்வேஷ் என்ற பெண் ஒருவரின் கல்லீரலில் கரு உருவாகி, சிசுவாக வளர்ந்துள்ளது. எப்படி? என்ன நடந்தது?
அறுவை சிகிச்சை மூலம் சிசுவை நீக்கிய பிறகு தற்போது சர்வேஷ் ஓய்வில் இருக்கிறார். இதுகுறித்துப் பேசிய அவர், "உடல்நிலை மோசமடைந்து, நான் அதிகமாக வாந்தி எடுத்தேன். என்னால் எதையும் சாப்பிட, குடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில்தான் எனது கல்லீரலில் ஒரு குழந்தை இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மேலும், குழந்தை தொடர்ந்து வளர்ந்தால் கல்லீரல் வெடித்துவிடும் என்றார்கள்" என்று தெரிவித்தார்.
அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கிய போது, மருத்துவர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யச் சொன்னதாக அவர் கூறுகிறார். ஆனால் அல்ட்ராசவுண்ட் ரிப்போர்ட்டிலும் எதுவும் தெரியவில்லை, வயிற்று தொற்றுக்கு மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டார் சர்வேஷ்.
ஆனால் ஒரு மாதம் மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவர் மீண்டும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது, மிகவும் அரிதான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. மருத்துவர்களுக்குக் கூட, நம்புவதற்கு கடினமான செய்தியாக அது இருந்தது.
அல்ட்ராசவுண்ட் செய்த மருத்துவர் சானியா ஜெஹ்ரா, சர்வேஷின் கல்லீரலில் ஒரு குழந்தை இருப்பதாகக் கூறினார். இது சர்வேஷுக்கும் அவரது கணவர் பரம்வீருக்கும் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவலை உறுதிப்படுத்த, புலந்த்சாஹரிலிருந்து மீரட்டுக்குச் சென்று மீண்டும் அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து கொண்டார் சர்வேஷ்.
அங்கு கிடைத்த அறிக்கையும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வேஷின் மாதவிடாய் சுழற்சி, எப்போதும் போல சாதாரணமாக இருந்ததால், இந்தத் தகவலை நம்புவது அவருக்கு கடினமாக இருந்தது.
எம்ஆர்ஐ ஸ்கேன் செய்த கதிரியக்க நிபுணர் மருத்துவர் கே.கே. குப்தா, தனது 20 ஆண்டுகால வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு சம்பவத்தைப் பார்த்ததில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, அவர் அந்த மருத்துவ அறிக்கையை பலமுறை படித்து, மாதவிடாய் சாதாரணமாக இருக்கிறதா இல்லையா என்பதை சர்வேஷிடம் அவர் திரும்பத் திரும்பக் கேட்டுள்ளார்.
"அந்தப் பெண்ணுக்கு கல்லீரலின் வலது புறம் 12 வார கரு இருந்தது, அதில் இதயத் துடிப்பும் தெளிவாகத் தெரிந்தது. இந்த நிலை 'இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்' என்று அழைக்கப்படுகிறது.
இது மிகவும் அரிதானது.
இதுபோன்ற சூழ்நிலையில், பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது, இதனை அவர்கள் சாதாரண மாதவிடாய் என்று கருதுகிறார்கள். இவ்வகையான கர்ப்பத்தைக் கண்டறிய நேரம் எடுக்கும்" என்று அவர் கூறுகிறார்.
புலந்த்ஷாஹரில் உள்ள எந்த மருத்துவரும் சர்வேஷுக்கு மருத்துவம் அளிக்க தயாராக இல்லை என்று பரம்வீர் கூறுகிறார். அதன் பிறகு அவர் மீரட்டுக்குச் சென்றுள்ளார், ஆனால் அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
இது ஒரு கடினமான நிகழ்வு என்றும், தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். அதேபோல் அனைவரும் அவரை டெல்லிக்குச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
"நாங்கள் ஏழைகள், டெல்லிக்குச் சென்று அங்குள்ள செலவுகளைச் சமாளிக்க எங்களுக்கு வசதி இல்லை. பல முறை யோசித்த பிறகு, இங்கேயே சிகிச்சை பெறுவது என்று முடிவு செய்தோம்" என்று சர்வேஷ் கூறினார்.
இறுதியாக, மீரட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு சர்வேஷுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டது.
"நோயாளி என்னிடம் வந்தபோது, மூன்று மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். அவர் அல்ட்ராசோனோ மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனை முடிவுகளை கொண்டு வந்திருந்தார். அதில் இது 'ஹெபடிக் எக்டோபிக்' கர்ப்பம். (அதாவது கல்லீரலில் கரு வளர்ந்துள்ள நிலை) என்பது தெளிவாக தெரிந்தது.
'இன்ட்ராஹெபடிக் எக்டோபிக் கர்ப்பம்' என்றால் என்ன?
பொதுவாக ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து வெளியாகும் கருமுட்டை, விந்தணுவுடன் இணைந்தால், அப்பெண் கர்ப்பமாகிறார்.
இந்த கருவுற்ற முட்டை ஃபெலோபியன் குழாய் வழியாக கருப்பையை நோக்கி நகர்கிறது, பின்னர் கருப்பையிலேயே கரு வளர்கிறது.
சில சந்தர்ப்பங்களில், கருவுற்ற முட்டை கருப்பையை அடைவதற்குப் பதிலாக, ஃபெலோபியன் குழாயிலேயே இருக்கும் அல்லது வேறு சில உறுப்பின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று பிஎச்யு மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் மருத்துவர் மம்தா கூறுகிறார்.
"உதாரணமாக, சர்வேஷ் விஷயத்தில் கரு கல்லீரலில் சிக்கிக் கொண்டது. கல்லீரலுக்கு நன்றாக ரத்த ஓட்டம் இருப்பதால், ஆரம்ப நாட்களில் கரு வளர 'வளமான இடமாக' அது செயல்படுகிறது. ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது, அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை," என்றார் மம்தா.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



