You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2024 பொதுத் தேர்தலுக்கு முன்பான இடைக்கால பட்ஜெட். முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய திட்டங்கள் என்ன?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று (வியாழன், பிப்ரவரி 1) மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் விவசாயிகள், ஆகியோர் மீது கவனம் செலுத்தப்பட்டது. அவர்களுக்காக இதுவரை செயல்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களையும் புதிய திட்டங்களையும் விளக்கினார்.
இந்த அரசு 25 கோடி மக்களை பல்முனை ஏழ்மையிலிருந்து வெளியேற்றியிருப்பதாகக் கூறினார் நிர்மலா சீதாராமன். நேரடி வரி வசூல் மூன்று மடங்காக உயர்ந்திருப்பதாகக் கூறிய அவர், இந்த பட்ஜெட்டில் வரி வசூல் சார்ந்து எந்த மாற்றமும் செய்யப்படாது என்றார்.
பெண்களுக்கான திட்டங்களைப் பட்டியலிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கு 30 கோடி முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பெண்கள் மேற்படிப்பில் சேர்வது 28% உயர்ந்திருப்பதாகக் கூறினார்.
“தற்போது நாடு முழுவதும் 83 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 9 கோடி பெண்கள் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர். 2 கோடி பெண்கள் சுய உதவிக் குழுக்களை உருவாக்கும் இலக்கு 3 கோடியாக இலக்கு உயர்த்தப்பட்டுள்ளது,” என்றார்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் இந்த அரசின் குறிக்கோள் என்ற அவர், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எரிவாயு, மின்சாரம், வங்கிச் சேவைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன என்றும், இதனால் கிராமப்புற மக்களுக்கு வருமானம் உயர்ந்துள்ளது என்றும் சொன்னார்.
இடைக்கால பட்ஜெட் என்பது, தேர்தலுக்கு அடுத்து வரும் அரசு அடுத்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது வரையிலான காலத்திற்கான பட்ஜெட்.
இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதன் மூலம், முன்னர் ஐந்து முறை ஆண்டு பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிகர் செய்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை (ஜனவரி 30) அன்று துவங்கியது. இரு அவைகளும் இணைந்த கூட்டத்தை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றித் துவங்கிவைத்தார். அதில், இந்தியா தொடர்ந்து இரண்டு காலாண்டுகளுக்கு 7.5% வளர்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.
விரைவில் இந்தியப் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால், இந்த இடைக்கால் பட்ஜெட் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)