ப்ரியாவின் மரணத்திற்கு தந்த இழப்பீட்டை திரும்பத் தர தயார்: குடும்பத்தினர் வருத்தம்

கால்பந்து வீராங்கனை ப்ரியா
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் உயிரிழந்தது சர்ச்சையான நிலையில், தவறிழைத்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தமிழக அரசு அளித்த இழப்பீட்டை திருப்பியளிக்கவுள்ளதாக ப்ரியாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கால்பந்து வீராங்கனை ப்ரியாவுக்கு அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நவம்பர் 15ம் தேதி மரணமடைந்ததாகவும், ப்ரியாவின் மரணத்துக்கு காரணமான மருத்துவர்களைக் கைது செய்ய வேண்டும் என அவரது தந்தை ரவிக்குமார் குற்றம்சாட்டினார். மாணவிக்கு சிகிச்சையளித்த இரண்டு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ப்ரியாவின் குடும்பத்தை நேரில் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ10 லட்சம் நிவாரணம் அளித்தார். ப்ரியாவின் சகோதரருக்கு அரசு வேலையும், அவரின் குடும்பத்திற்கு ஒரு வீடும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தவறு இழைத்த மருத்துவர்கள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் காலத்தில்அறுவைசிகிச்சை காரணமாக நிகழும் மரணங்கள், தவறான சிகிச்சை காரணமாக நடக்கும் மரணங்கள் என மருத்துவமனையில் நடக்கும் மரணங்களுக்கான காரணங்கள் பற்றி விரிவான ஆய்வை நடத்தி, தவறுகளை களைய குழுக்கள் அமைக்கவுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருவதாக அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர்கள் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுவரை அவர்கள் கைதுசெய்யப்படவில்லை என்பதால், ப்ரியாவின் குடும்பத்தினர் வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

"நடவடிக்கை எடுப்பதில் தாமதம்"

பிபிசி தமிழிடம் பேசிய ப்ரியாவின் சகோதரர் வசந்த், தமிழக அரசின் நடவடிக்கைகள் நம்பிக்கை அளிப்பதாகவும், மருத்துவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதில் தாமதம் இருப்பது கவலை தருவதாகவும் கூறினார்.

''எங்கள் பாப்பா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக கூட்டிச்செல்லும் போது கூட, நன்றாக நடந்தபடிதான் சென்றாள். தற்போது அவள் உயிருடன் இல்லை என்பதை எங்களால் ஏற்கமுடியவில்லை. தமிழக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நல்ல சிகிச்சை அளித்தது. பெரியார் நகர் மருத்துவமனையில்தான் பிரச்னை நடந்தது. அங்கிருந்த இரண்டு மருத்துவர்கள் தவறான சிகிச்சை செய்துவிட்டதால்தான் எங்கள் பாப்பாவை நாங்கள் இழந்துவிட்டோம். மருத்துவர்கள் கவனக்குறைவாக சிகிச்சை கொடுத்துவிட்டார்கள் என்கிறார்கள். மருத்துவர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு அதேபோன்று சிகிச்சை கொடுப்பார்களா?,'' என்கிறார் வசந்த்.

தொடர்ந்து பேசிய அவர், ''எங்களுக்கு உடனே இழப்பீடு கொடுத்தார்கள், வீடு கொடுத்தார்கள், அண்ணனுக்கு வேலை கொடுத்தார்கள். ஆனால் இதுவரை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் கேட்பதெல்லாம், அந்த இரண்டு மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பதை தடை செய்யவேண்டும். அவர்கள் சிறைக்கு சென்றுவிட்டுவருவதால், எந்த நன்மையையும் இல்லை. அவர்கள் மீண்டும் தவறாக சிகிச்சை தரக்கூடாது, எங்களை போல வேறு யாரும் குடும்ப உறுப்பினரை இழக்கக்கூடாது என்பதுதான்,'' என்கிறார் வசந்த்.

மா.சுப்ரமணியன்

பட மூலாதாரம், MA SUBRAMANIAN FACEBOOK PAGE

''அரசு கொடுத்த இழப்பீட்டை வாங்கிவிட்டதால், தவறான சிகிச்சையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பல நண்பர்களுக்கு இதில் விருப்பம் இல்லை. நீதி கிடைக்கவில்லை எனில் போராட்டம் நடத்த தயாராக உள்ளனர். எங்களுக்கு நேர்ந்தது திருப்பித்தரமுடியாத இழப்பு. அந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எங்களுக்கு தரப்பட்ட இழப்பீட்டை நாங்கள் திருப்பி தந்துவிடுவோம். எங்களுக்கு தேவை எங்கள் பாப்பாவுக்கு நீதி. இதுபோல யாரும் இறக்கக்கூடாது. எங்களால் தற்போதும் நம்பமுடியவில்லை. எங்கள் பாப்பா சீக்கிரம் வந்துவிடுவாள் என்ற உறுதியான நம்பிக்கையோடுதான் இருந்தோம்,''என்கிறார் வசந்த்.

''மருத்துவர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தமிழக காவல்துறையில் எவ்வளவு சிறப்பான அதிகாரிகள் இருக்கிறார்கள். இரண்டு மருத்துவர்களை கண்டறிய முயற்சிகள் செய்தால், அது ப்ரியாவுக்கு நீதி கிடைப்பதற்கான செயல். தலைமறைவாக இருப்பதால் நடவடிக்கை தாமதம் ஆவதை எப்படி ஏற்றுக்கொள்வது?,''என்றும் கேள்வியெழுப்புகிறார் வசந்த்.

தணிக்கைக்குழு ஏற்படுத்த முயற்சி

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதற்கிடையில், கடந்த வாரம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பாதுகாப்பான அறுவை சிகிச்சை குறித்த நிகழ்ச்சியில் 600 அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர். அதில், பாதுகாப்பான அறுவை சிகிச்சை-நெறிமுறைகள் மற்றும் சரிபார்ப்புப் பட்டியல்கள்- பாதுகாப்பான அறுவை சிகிச்சை முறைகள் குறித்த பயிற்சி பட்டறை ஒன்றையும் அரசு நடத்தியது. அதில் பேசிய அமைச்சர் சுப்ரமணியன், தமிழகத்தில் இதுபோன்ற தவறுகளை களைவதற்காக தணிக்கை குழு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறினார்.

ப்ரியாவின் குடும்பத்தினர் தெரிவிக்கும் கருத்துக்கள் பற்றி அமைச்சர் சுப்ரமணியனிடம் பேசியபோது, ''அவர்களின் வருத்தம் நியாயமானது. நாங்கள் உடனடியாக செய்யவேண்டிய பணிநீக்கத்தை செய்துவிட்டோம். இழப்பீட்டை கொடுத்தோம். உச்சநீதிமன்ற ஆணையின்படி, இதுபோன்ற சம்பவங்களில் மருத்துவர்களை கைது செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும், துறை ரீதியாக வேறு என்ன நடவடிக்கை எடுக்கமுடியும் என்று கேட்டிருக்கிறோம். நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம்தான் நிற்கிறோம். அதுவும் எங்கள் நடவடிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்கிறோம்,''என்றார் .

"தயக்கம் காட்டவில்லை"

மருத்துவர்கள் தலைமறைவாக இருப்பது குறித்த கேட்டபோது, ''மருத்துவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில் நாங்கள் தயக்கம் காட்டவில்லை. அவர்களின் கவனக்குறைவுக்கு சட்டப்படி என்ன நடவடிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதோ அதை தாமதமின்றி பின்பற்றுகிறோம்,''என்றார்.

மேலும், தமிழ்நாட்டில், 5,000 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் சுகாதார மையங்களில் பணிபுரிகின்றனர் என்றும் தினமும் குறைந்தது 10,000 அறுவை சிகிச்சைகள் தமிழக அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுகின்றன என்றார்.

''ப்ரியாவின் மரணத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவது போலவே, அறுவை சிகிச்சை காரணமான மரணங்கள் மற்றும் மருத்துவமனையில் ஏற்படும் மரணங்கள் என எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து தவறுகளை தணிக்கை குழு கண்டறியும் என்றும் தவறுகளை குறைப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றும் அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, இரு கால்களை இழந்தாலும் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: