You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரிமேடு: சென்னையில் ஆங்கிலேயர்களை அச்சுறுத்திய பகுதி முற்று முழுதாக அழிந்தது எப்படி?
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் பிரதான பகுதியில் நரிமேடு என்று அழைக்கப்பட்ட ஓரிடம் இருந்துள்ளது. அந்த இடம், "ஆங்கிலேயர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டதாக" வரலாற்று ஆய்வாளர் வி. ஸ்ரீராம் கூறுகிறார்.
ஆங்கிலேயர்களுக்கு நரிமேடு பகுதி அச்சுறுத்தலாக மாறியது ஏன்? சென்னையின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற அந்தப் பகுதி அழிவைச் சந்தித்தது எப்படி?
மதராஸ் உருவானதைக் குறிப்பிடும் நாளாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்படுகிறது.
கடந்த 1639ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசர் பெத்த வேங்கட ராயரின் அனுமதியுடன், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதி பிரான்சிஸ் டே, உள்ளூர் நாயக்க ஆட்சியாளரிடம் இருந்து மதராசப்பட்டினம் கடற்கரைப் பகுதியை நில மானியமாகப் பெற்றார்.
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் மதராஸ் குடியேற்றம் உருவாவதற்கு அடிப்படையான இந்த நில ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 2026ஆம் ஆண்டுடன் 387 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
சென்னைக்குப் பல்வேறு வரலாற்றுப் பெருமைகள் இருந்தாலும், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட நரிமேடும் அவற்றில் ஒன்று.
"சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் ஓர் உயரமான மேட்டுப் பகுதி இருந்தது. அது புனித ஜார்ஜ் கோட்டையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது. அந்த மேட்டுப் பகுதியைச் சமன்படுத்த வேண்டும் என்று ஸ்டீபன் பாப்ஹாம் அரசிடம் வலியுறுத்தினார்" என்று மெட் ராஸ் மியூசிங்ஸில் (Madras Musings) வரலாற்று ஆய்வாளர் வி. ஸ்ரீராம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கறிஞரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்டீபன் பாப்ஹாம், 1778ஆம் ஆண்டு மதராஸுக்கு வந்தார். பின்னர் நகரின் குடிமை மற்றும் காவல் நிர்வாகச் சீர்திருத்தங்களில் அவர் ஈடுபட்டார்.
1750களிலேயே தொடங்கிய முயற்சி
கடந்த 1750களிலேயே நரிமேடு பகுதியைச் சமன்படுத்தும் பணி தொடங்கிவிட்டது. சில தசாப்தங்களுக்குப் பிறகு, அந்தப் பணியை விரைவுபடுத்த வேண்டுமென பாப்ஹாம் வலியுறுத்தினார். ஆனால், மேட்டுப் பகுதியை இடிக்கும் ஒப்பந்தத்தை அவர் மேற்கொள்ளவில்லை. அந்த ஒப்பந்தம் ஹால் ப்ளூமர் என்பவருக்கு வழங்கப்பட்டதாக ஸ்ரீராம் கூறுகிறார்.
நரிமேட்டில் இருந்து அகற்றப்பட்ட மண்ணின் ஒரு பகுதி, நியூ பிளாக் டவுனில் பாப்ஹாமுக்கு சொந்தமான தாழ்வான நிலத்தை நிரப்பப் பயன்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் உருவான சாலை 'பாப்ஹாம்ஸ் பிராட்வே' என்று அறியப்பட்டு, தற்போது பிராட்வே என்று அழைக்கப்படுகிறது.
அகற்றப்பட்ட மண்ணின் மற்றொரு பகுதி மண்ணடி தெருவை நிரப்பப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
இதனுடன் மண்ணடி என்ற பெயரை இணைக்கும் ஒரு பரவலான விளக்கமும் உள்ளது. ஆனால், அங்கு மண்ணைக் கொட்டியதால்தான் அந்தப் பெயர் உருவானது என்பதை உறுதிப்படுத்துவதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை.
பெத்த வேங்கட ராயர் வழங்கிய நில மானிய ஆவணத்தில் இந்த இடம் 'நரிமேடு' என்று அல்லாமல் 'நாரிமேடு' எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதாக ஸ்ரீராம் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
இந்தப் பகுதி குறித்து, 1913ஆம் ஆண்டு வெளியான ஹென்றி டேவிசன் லவ் எழுதிய 'வெஸ்டிஜஸ் ஆஃப் ஓல்ட் மெட்ராஸ்' (Vestiges of Old Madras) புத்தகத்தில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
எலம்பூர் ஆற்றின் வடக்குக் கரையில் இருந்த மிக உயரமான பகுதி பிற்காலத்தில் ஹாக் ஹில் என்று அழைக்கப்பட்டதாக லவ் கூறியுள்ளார். நரிமேடு தற்போதைய சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதியில் அமைந்திருக்கலாம் என்றும் அவர் கருதியுள்ளார்.
இருப்பினும், நரிமேட்டின் துல்லியமான அமைவிடம் உறுதியாகக் கண்டறியப்படவில்லை என்று ஸ்ரீராம் சுட்டிக்காட்டுகிறார். இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அமைந்துள்ள இடத்தில்தான் நரிமேடு இருந்ததாகப் பரவலாகக் கூறப்பட்டாலும், சென்ட்ரல் ரயில் நிலையம் ஹாக் ஹில் நிலத்தில் அமைக்கப்படவில்லை என்பதையே கிடைக்கக்கூடிய ஆவணங்கள் காட்டுவதாக அவர் கூறுகிறார்.
பெத்த வேங்கட ராயர் வழங்கிய நில மானிய ஆவணத்தில், நரிமேடு மதராஸிலிருந்து தனியாகக் குறிப்பிடப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததாகவும் லவ் தெரிவித்துள்ளார்.
விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைந்த பிறகு, அதன் கட்டுப்பாட்டில் இருந்த தென்னிந்தியப் பகுதிகள் கோல்கொண்டா சுல்தானகத்தின் ஆளுகைக்குள் வந்தன. 1672ஆம் ஆண்டு கோல்கொண்டா சுல்தானகத்தின் அதிகாரியும் படைத் தளபதியுமான நெக்னாம் கான், நரிமேட்டுப் பகுதியை ஆங்கிலேயர்கள் பயன்படுத்துவதற்கான உரிமையை உறுதிப்படுத்தியுள்ளார்.
கோல்கொண்டா படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த நெக்னாம் கானின் அதிகாரம், மதராஸ் அமைந்துள்ள வங்காள விரிகுடா கடற்கரைப் பகுதி வரை பரவியிருந்தது.
அவர் வழங்கிய உரிமை ஆவணத்தில், "மதராசப்பட்டினத்தின் நிலம் மற்றும் அது சார்ந்த பழமையான உரிமைகளை ஆங்கிலேயர்கள் எவ்வாறு அனுபவித்து வருகிறார்களோ, அதேபோல நரிமேட்டுப் பகுதியிலும் அனுபவிக்கலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக லவ் பதிவு செய்துள்ளார்.
"லவ் எழுதிய புத்தகத்தில் அதற்குப் பிறகு நரிமேடு பற்றிய குறிப்புகள் இல்லை. மாறாக, ஹாக் ஹில் பற்றிய ஏராளமான குறிப்புகள் உள்ளன. எனவே, இரண்டு பெயர்களும் ஒரே இடத்தைக் குறிப்பதாகக் கருதுகிறோம்" என்று ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
கோட்டைக்கு மாற்றாகக் கருதப்பட்ட மேடு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்த நரிமேடு, 1750களில் மீண்டும் முக்கியத்துவம் பெற்றது.
"ஆவணங்களின்படி, எலம்பூர் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்திருந்த மேடான பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் மருத்துவமனை இருந்தது" என்கிறார் ஸ்ரீராம்.
அங்கு கிழக்கிந்திய கம்பெனியின் மருத்துவமனை மட்டுமின்றி, குதிரைப்படைப் பிரிவுகள் மற்றும் கிங்ஸ் ரெஜிமென்ட் படைப்பிரிவுக்கான மருத்துவமனைகளும் செயல்பட்டு வந்தன. மேலும், சில வீடுகளும் அங்கு இருந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
புனித ஜார்ஜ் கோட்டை கடலால் சேதமடைந்தால், அதற்கு மாற்றாகப் புதிய கோட்டை கட்டுவதற்கு ஏற்ற உயரமான இடமாக 18ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதி கருதப்பட்டதாக ஹென்றி டேவிசன் லவ் தெரிவித்துள்ளார்.
புனித ஜார்ஜ் கோட்டையின் பாதுகாப்பு 1757ஆம் ஆண்டில் முக்கியமானதாகக் கருதப்பட்டபோது, வடக்குக் கரையில் இருந்த மருத்துவமனையும் வீடுகளும் கோட்டையின் பாதுகாப்புக்குப் பாதகமாக இருப்பதை கேப்டன் புரோஹியர் கண்டறிந்ததாக லவ் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து, மருத்துவமனையும் சில கட்டடங்களும் அகற்றப்பட்டன. மருத்துவமனை ஆற்றின் மறுபக்கத்திலுள்ள தற்போதைய இடத்துக்கு மாற்றப்பட்டது. அதன் அருகில் பின்னர் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி உருவானது.
அந்தக் காலகட்டத்திலேயே மேடான நிலத்தின் ஒரு பகுதியும் வெட்டி அகற்றப்பட்டது. இதன்மூலம் ஹாக் ஹில்லைச் சமன்படுத்தும் பணி 1750களிலேயே தொடங்கியிருந்தது; சில தசாப்தங்களுக்குப் பிறகு நடைபெற்ற நடவடிக்கைகள் அந்தப் பணியின் தொடர்ச்சியே என ஸ்ரீராம் கூறுகிறார்.
ஹைதர் அலியின் படைகளால் ஏற்பட்ட அச்சம்
சுமார் 1767ஆம் ஆண்டு ஹைதர் அலியின் படைகள் கர்நாடகப் பகுதிக்குள் நுழைந்து புனித ஜார்ஜ் கோட்டையை நெருங்கலாம் என்ற அச்சத்தில் எதிரிப் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக ஹாக் ஹில்லில் கிழக்கிந்திய கம்பெனி காவல் படைப்பிரிவு ஒன்றை நிறுத்தியது. கோட்டையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதப்பட்ட அதே மேட்டின் உயரம், அந்தத் தருணத்தில் எதிரிகளைக் கண்காணிக்க உதவியது.
தலைமைப் பொறியாளரின் பரிந்துரை அடிப்படையில் 1779ஆம் ஆண்டு, ஹாக் ஹில் பகுதியை ஆய்வு செய்யுமாறு அப்போதைய மதராஸ் ஆளுநர் சர் தாமஸ் ரம்போல்ட் உத்தரவிட்டார்.
"ஹாக் ஹில்லில் இருந்து சுமார் 2,14,000 கன கஜம் மணலை அகற்றிக் கடலில் கொட்டுவதற்கு 41,000 பகோடாக்கள் செலவாகும்" என்று மேஜர் மால் மதிப்பிட்டிருந்ததாக ஸ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்.
ஹாக் ஹில்லில் இருந்த வீடுகளின் மதிப்பு 1,86,940 பகோடாக்கள் எனக் கணக்கிடப்பட்டது. அந்த மதிப்புக்கு இணையான இழப்பீட்டை உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
"ஆனால், நிலத்தை அனுபவித்து வந்தவர்களில் பாதிப் பேரால்கூட தெளிவான உரிமை ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால் அரசுக்கான இழப்பீட்டுச் செலவு குறைந்தது" என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
'மதராஸின் பாதுகாப்புக்கு யாரும் பொறுப்பேற்க முடியாது'
கடந்த 1780ஆம் ஆண்டு ஹைதர் அலியின் படைகள் மீண்டும் மதராஸை அச்சுறுத்தக்கூடும் என்ற சூழலில், ஹாக் ஹில்லை சமன்படுத்தும் பணியை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டீபன் பாப்ஹாம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தினார்.
பிரிட்டனின் ஒப்புதலுக்காகவும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறைகளுக்காகவும் காத்திருக்கக் கூடாது என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது.
இரண்டாம் ஆங்கிலோ–மைசூர் போரால் மதராஸுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த சூழலில், மேட்டுப் பகுதியையும் அங்கிருந்த வீடுகளையும் அகற்றாவிட்டால் மதராஸின் பாதுகாப்புக்கு யாரும் பொறுப்பேற்க முடியாதென நகரின் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்ட பிரிட்டிஷ் ராணுவத் தளபதி சர் அயர் கூட் கூறியதாக லவ் பதிவு செய்துள்ளார்.
மேட்டுப் பகுதியை இடிப்பதற்குப் பலர் முன்மொழிவுகளை அளித்தனர். அவர்களில் ஹால் ப்ளூமர், வில்லியம் டூரிங் மற்றும் கட்டடக் கலைஞர் பிலிப் ஸ்டோவி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பாப்ஹாம் இந்த ஒப்பந்தத்துக்கான முன்மொழிவை அளிக்கவில்லை.
இறுதியில் ஹால் ப்ளூமரின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அங்கு வசித்த மக்கள் வெளியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அவர்களால் அரசின் முடிவை மாற்ற முடியவில்லை.
பிரெஞ்சு கடற்படை புதுச்சேரியில் இருந்து வந்து ஹைதர் அலிக்கு உதவக்கூடும் என்ற வதந்திகளும் அப்போது பரவின. இதனால் மேட்டுப் பகுதியை இடிக்கும் பணி மேலும் அவசரப்படுத்தப்பட்டது.
சில மாதங்களில் தரைமட்டமான மேடு
கடந்த 1781ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மேட்டுப்பகுதியைச் சமன்படுத்தும் பணி தொடங்கிவிட்டதாக கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஆண்டு மே மாதத்தில் சுமார் 4,000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அக்டோபர் மாதத்துக்குள் பணிகள் முடிந்துவிட்டதாக ஹால் ப்ளூமர் அறிக்கை அளித்தார்.
அங்கிருந்து அகற்றப்பட்ட மண்ணின் ஒரு சிறிய பகுதி ஸ்டீபன் பாப்ஹாமின் நிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. மற்ற பகுதிகள் மண்ணடி தெருவையும், இந்த நோக்கத்துக்காக கிழக்கிந்திய கம்பெனி அடையாளம் கண்ட வேறு சில இடங்களையும் நிரப்பப் பயன்படுத்தப்பட்டதாக ஸ்ரீராம் கூறுகிறார்.
"ஹாக் ஹில்லில் எடுக்கப்பட்ட மண்ணால் பயனடைந்த இடங்களில், பின்னர் பிராட்வேயாக மாறிய பாப்ஹாமின் நிலமே அதிக முக்கியத்துவம் பெற்றது" என்கிறார் அவர்.
பிராட்வேயாக மாறிய தனது நிலத்தை விற்றதன் மூலம் பாப்ஹாம் பொருளாதாரப் பலன் பெற்றதாகவும், மேட்டுப்பகுதியை இடிக்கும் ஒப்பந்தத்தின் மூலம் ஹால் ப்ளூமர் பலன் பெற்றதாகவும் ஸ்ரீராம் கூறுகிறார்.
"ஆங்கிலேயர்கள் அச்சப்பட்ட அளவுக்கு ஹைதர் அலியின் படைகளால் மதராஸில் விளைவுகள் ஏற்படவில்லை. பின்னர் ஹைதர் அலியும் இறந்துவிட்டார். பிரெஞ்சு கடற்படையும் வரவில்லை. ஆனால், ஹாக் ஹில் முற்றிலுமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹாக் ஹில்லில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு வேறு இடங்களில் நிலங்கள் வழங்கப்பட்டதாகவும் ஸ்ரீராம் கூறுகிறார். அதற்கான மாற்று நிலங்களை உருவாக்கும் நடவடிக்கைகளின்போது, பிளாக் டவுன் பகுதியில் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வசித்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகவும் அவரது கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
அதேநேரம், நரிமேடு அல்லது நாரிமேடு என்று இந்த இடம் அழைக்கப்பட்டு இருந்தாலும், அங்கு குள்ளநரிகள் எந்த அளவுக்குப் பரவியிருந்தன என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை பிபிசி தமிழால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.
நகரமயமாக்கலால் சுருங்கிய குள்ளநரிகளின் வாழ்விடங்கள்
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் பல பகுதிகளில் காடுகள், புதர்க்காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகள் இருந்ததாக சென்னை பாம்புப் பூங்காவின் இணை இயக்குநர் அறிவழகன் கூறுகிறார்.
அப்போது கணிசமான எண்ணிக்கையில் குள்ளநரிகள் இருந்ததாகவும், காலப்போக்கில் அவற்றின் எண்ணிக்கையும் பரவலும் குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையின் பல பகுதிகளில் காடுகளும் திறந்தவெளி வாழ்விடங்களும் இருந்ததாக அவர் கூறுகிறார். கடற்கரையை ஒட்டிய மேட்டுப் பகுதிகளில் வாழ்ந்த குள்ளநரிகளுக்கு நண்டு, மீன் உள்ளிட்ட உயிரினங்கள் உணவாகக் கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிண்டி ஆளுநர் மாளிகை, கிண்டி தேசியப் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் இன்றளவும் குள்ளநரிகள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலும் குள்ளநரிகள் இருப்பது அண்மைக் காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் அவற்றின் தற்போதைய எண்ணிக்கை குறித்த முழுமையான கணக்கெடுப்பு வெளியாகவில்லை.
முயல்கள், சிறிய பறவைகள், கொறித்துண்ணிகள், மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களை குள்ளநரிகள் உணவாக உட்கொள்ளக்கூடும். அவை நீண்டகால இணைப் பிணைப்பைக் கொண்ட உயிரினங்களாக இருந்தாலும், தனியாக இரை தேடுவதும் குடும்பக் குழுக்களாக இயங்குவதும் உண்டு.
நகரமயமாக்கலால் காடுகள், புதர்க்காடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகள் அழிந்ததால், ஒரு காலத்தில் சென்னையின் பல இடங்களில் காணப்பட்ட குள்ளநரிகளின் வாழ்விடங்களும் பரவலும் பெருமளவில் சுருங்கிவிட்டதாக அறிவழகன் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு