You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமிட்ட முஸ்லிம் பெண் ஐபிஎஸ் அதிகாரி - காரணம் என்ன?
- எழுதியவர், ஷுரைஹ் நியாஸி
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
மத்தியப் பிரதேசம், குவாலியர் நகரின் பூல்பாக் பகுதியில் திங்கள்கிழமை மாலை ஒரு நிர்வாக உத்தரவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு, மத ரீதியான மோதலாக மாறியது.
இந்த மோதலில் ஒரு பக்கம் நகர காவல் கண்காணிப்பாளர் ஹினா கானும், மறுபுறம், வழக்கறிஞர் அனில் மிஸ்ராவும், அவரது ஆதரவாளர்களும் இருந்தனர்.
அனில் மிஸ்ராவும் அவரது குழுவினரும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷம் எழுப்பி, ஹினா கான் 'சனாதன தர்மத்துக்கு' எதிரானவர் என குற்றம் சாட்டினர். மறுபுறம், ஹினா கானும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பினார்.
"அந்த சமயத்தில் ஒருவித பதற்றம் நிலவியது. ஹினா கான் கோஷமிட்ட பிறகு அந்த பதற்றம் குறைந்தது"என்று இச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் (பெயர் வெளியிட விரும்பாத நிலையில்) கூறினார்.
ஹினா கான், குணா மாவட்டத்தின் ஆரோன் பகுதியில் வசிப்பவர். அவர் 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
"நான் இந்த விஷயத்தை நல்ல விதமாகவே பார்க்கிறேன். நான் என் கடமையைச் செய்தேன். அமைதியை பேணுவதுதான் என் நோக்கம்"என இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய ஹினா கான் கூறினார்.
"ஒரு அதிகாரியாக, நிலைமை மோசமாகாமல் பார்த்துக்கொள்ளவே நான் முயற்சி செய்தேன். அமைதியும் ஒற்றுமையும் நிலவ வேண்டும் என்பதற்காக சட்ட ஒழுங்கை பராமரிக்க முயன்றேன்"என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்ன நடந்தது ?
இந்த சம்பவம், குவாலியர் உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச் வளாகத்தில் பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் 10 அடி உயர சிலையை நிறுவும் திட்டத்துடன் தொடர்புடையது.
பிப்ரவரி 19, 2025 அன்று, சில வழக்கறிஞர்கள் குவாலியர் உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சுரேஷ்குமார்-ஐ அணுகி, பீம்ராவ் அம்பேத்கரின் சிலையை பெஞ்ச் வளாகத்தில் நிறுவ அனுமதி கோரி வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கறிஞர்கள் விஸ்வஜீத் ரடோனியா, தர்மேந்திர குஷ்வாஹா மற்றும் ராய் சிங் ஆகியோர் அனுமதி கோரி ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தனர். பின்னர் தலைமை நீதிபதி அதற்கு வாய்மொழியாக ஒப்புதல் அளித்தார்.
இதற்குப் பிறகு, மாவட்ட நீதிமன்ற அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பொதுப்பணித் துறை, நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்காக ஒரு மேடை கட்டியது. வழக்கறிஞர்கள் நன்கொடை திரட்டி, சிலை அமைக்க ஆர்டர் கொடுத்தனர்.
பின்னர், சிலை நிறுவுவது குறித்து வழக்கறிஞர் சங்கத்துக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், கட்டடக் குழுவிடமிருந்து அனுமதி பெறப்படவில்லை என்றும் வாதிட்டு, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் சர்ச்சையும் பதற்றமும் அதிகரித்தது.
இந்த சர்ச்சையில் அம்பேத்கர் சிலையை எதிர்த்தவர்களில் அனில் மிஸ்ராவும் ஒருவர். சமீபத்தில் அவர் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ வைரலானது.
அம்பேத்கருக்கு எதிரான ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததற்காக அனில் மிஸ்ரா மீது பிஎன்எஸ் (பாரதிய நியாய் சன்ஹிதா) சட்டப்பிரிவுகள் 223, 353(2) மற்றும் 196(1) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அனில் மிஸ்ராவின் கூற்று என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக நகரத்தில் பதற்றம் நிலவியது. அப்பகுதி முழுவதும் காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டனர். அனில் மிஸ்ராவும் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை உள்ளூர் கோவிலில் ஹனுமான் சாலிசா பாராயணம் நடத்தப்போவதாக அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பூல்பாக் பகுதி உயர் நீதிமன்றத்துக்கு அருகில் இருப்பதால், அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
அந்த இடத்தில் தான் ஹினா கான், அனில் மிஸ்ராவையும் அவரது ஆதரவாளர்களையும் தடுக்க முயன்றார்.
அதற்கு பதிலாக, அனில் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஹினா கானை "சனாதன தர்மத்துக்கு எதிரானவர்" என்று அழைத்தனர். அதற்கு, ஹினா கான் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிட்டார்.
"அவர்கள் அழுத்தத்தின் கீழ் கோஷங்களை எழுப்பினர். எங்கள் ராமசரிதமானஸ் பாராயணம் அனுமன் கோவிலில் நடைபெற இருந்தது. ஆனால் காவல்துறை கோவிலை பூட்டி எங்களை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. இதற்காக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம், எங்கள் கோவில்கள் பூட்டப்பட்டால் கண்டிப்பாக தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிப்போம்" என இதுகுறித்து அனில் மிஸ்ரா கூறினார்.
உள்ளூர் காவல்துறை அந்தப் பகுதியில் பிஎன்ஸ் (பாரதிய நியாய் சன்ஹிதா) 163 பிரிவின் கீழ் தடை உத்தரவுகளை விதித்திருந்தது.
அந்த உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோஷங்கள் எழுப்புவதற்கும், கூட்டம் நடத்துவதற்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கும் மக்கள் திரள்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பீம்ராவ் அம்பேத்கர் குறித்து அனில் மிஸ்ரா கூறிய கருத்துக்குப் பிறகு, பீம் ஆர்மி, ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் ஓபிசி மகாசபா போன்ற அமைப்புகள் அக்டோபர் 15 அன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன.
ஆனால், நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருந்தாலும், நகரத்தில் பதற்றம் தொடர்கிறது. பாதுகாப்பு அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சில பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த சர்ச்சை இப்போது ஒரு சிலை விவகாரம் தொடர்பானதாக மட்டும் இல்லாமல், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாதி தொடர்பான மோதல் ஏற்படலாம் என்பதால், நகரம் முழுவதும் 4,000 காவல்துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் சமூக ஊடகங்களில் வெளியான 500க்கும் மேற்பட்ட பதிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 700 கூடுதல் போலீசாரும் பதற்றம் அதிகமான பகுதிகளில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹினா கான் என்பவர் யார்?
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, நகர காவல் கண்காணிப்பாளர் ஹினா கான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
குணா மாவட்டத்தில் உள்ள ஆரோன் தெஹ்சிலில் பிறந்தவர் ஹினா கான். அவரது தந்தை ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். அவரது தாயார் ஒரு இல்லத்தரசி.
பிசியோதெரபியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள ஹினா, சிறிது காலம் ஜிஎஸ்டி துறையில் உதவி வணிக வரி அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்சி (MPPSC) தேர்வில் தேர்ச்சி பெற்ற ஹினா கான், 2018 முதல் காவல் துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஹினா கானுக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் உள்ளனர். அவர்கள் மூவரும் வழக்கறிஞர்களாக உள்ளனர்.
அனில் மிஸ்ராவுடன் ஏற்பட்ட தகராறு குறித்துப் பேசியபோது , வழக்கறிஞர்களுடன் தனக்கு பழைய தொடர்பு இருப்பதாக ஹினா கான் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு