You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மரண தண்டனை நிறுத்தம்: நிமிஷா பிரியா வழக்கில் அடுத்தது என்ன?
ஏமன் குடிமகன் தலால் அப்தே மஹ்தி கொலை வழக்கில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை இறுதி நேரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஹூத்தி பிரிவின் கீழ் இயங்கும் யேமன் குடியரசின் நீதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நிமிஷா பிரியாவுக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைக்க அட்டர்னி ஜெனரல் முடிவெடுத்திருப்பதாக' கூறப்பட்டது.
2017ஆம் ஆண்டில், தலால் மஹ்தியின் உடல் ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது. இந்த வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது யேமன் தலைநகர் சனாவின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொலையுண்ட மஹ்தியின் குடும்பத்தினரின் மன்னிப்பு மட்டுமே நிமிஷா மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்படுவதற்கான ஒரே வாய்ப்பு என அவரது குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.
தற்போது மரண தண்டனை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மஹ்தி குடும்பத்துடன் சமரசப் பேச்சில் ஈடுபட அவர்கள் முயன்று வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சேவ் நிமிஷா பிரியா கவுன்சில் உறுப்பினருமான சுபாஷ் சந்திரா பிபிசி ஹிந்தியிடம் பேசும்போது , "சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சிலின் உறுப்பினர்கள் கேரளாவில் மிகவும் மதிக்கப்படும் இஸ்லாமிய மதகுருவான கிராண்ட் முஃப்தியைச் சந்தித்தனர். அதன் பிறகு அவர், யேமனில் சில செல்வாக்கு மிக்க ஷேக்குகளுடன் பேசினர்" என்று கூறினார்.
"மஹ்தியின் உறவினர்கள் உள்பட, யேமனில் செல்வாக்கு மிக்கவர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றும் சுபாஷ் சந்திரா கூறினார்.
எனினும், நிமிஷா - தலால் இடையே திருமணம் நடந்ததாக கூறப்படுவதை நிமிஷாவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
மஹ்தி, நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் தரப்பினர் பிபிசி தமிழிடம் கூறியிருந்தனர். இதனை தலாலின் சகோதரர் மறுத்தார்.
நிமிஷாவின் தரப்பினர் சமரசத்துக்கான முயற்சிகளை எடுத்துவருவதாக கூறியிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் தங்களின் நிலைபாடு தெளிவாக இருப்பதாக தலாலின் சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹ்தி கூறியுள்ளார்.