You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை: இரு கைகளும் துண்டிக்கப்பட்ட நபருக்கு வலது கையில் இடது கையின் ஒரு பகுதி பொருத்தம்
இந்த கட்டுரையில் சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரக்கூடும்
ஒரு ரயில் விபத்தில் சிக்கிய பிகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு இரு கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில், இடது கையின் ஒரு பகுதியை எடுத்து வலது கையில் பொருத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இதுபோல கைகளை மாற்றிப் பொருத்தும் அறுவை சிகிச்சை அரிதான ஒன்று என்கிறார்கள் மருத்துவர்கள்.
பிகார் கூலித் தொழிலாளிக்கு என்ன நடந்தது?
பிகாரைச் சேர்ந்த 28 வயதான தொழிலாளி ஒருவர் சென்னையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி இவர் சென்னை பூங்கா நகர் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது இரு கைகளுமே கடுமையாக சேதமடைந்தன. இடது கையைப் பொறுத்தவரை, தோள்பட்டையிலிருந்து முழங்கை வரை மிக மோசமாக சிதைந்துபோனது. வலது கையைப் பொறுத்தவரை மணிக்கட்டு பகுதிவரை சிதைந்துபோயிருந்தது.
மிக ஆபத்தான நிலையில், இவர் அருகில் இருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு என்னவிதமான சிகிச்சை அளிப்பது என ஆலோசிக்கப்பட்டது. இடது கையைப் பொறுத்தவரை, தோள்பட்டைக்குச் சற்றுக் கீழே இருந்து மணிக்கட்டிற்கு சற்று மேல்வரை சிதைந்து போயிருந்தது. அதனால், அந்தக் கரத்தை காப்பாற்ற முடியாது என்பது புரிந்தது. ஆனால், மணிக்கட்டை ஒட்டியுள்ள பகுதிகள் நன்றாகவே இருந்தன. வலதுகையைப் பொறுத்தவரை மணிகட்டுவரை மிக மோசமாக சேதமடைந்திருந்தது.
மருத்துவர்கள் முடிவு
"ஏதாவது ஒரு கையை அவர் பயன்படுத்தும் நிலைக்கு கொண்டுவரலாம் என முடிவெடுத்தோம். ஆகவே, இடது கையில் மணிக்கட்டிலிருந்து கீழே உள்ள பகுதியை வலது கையோடு இணைக்கும் Cross hand replantation செய்வதென முடிவு செய்யப்பட்டது" என்கிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் துறையின் தலைவரான பேராசிரியர் டாக்டர் பி. ராஜேஸ்வரி.
துண்டிக்கப்பட்ட கரங்களைத் திரும்பப் பொருத்துவது, துண்டிக்கப்பட்ட விரல்களைப் பொருத்துவது போன்ற அறுவை சிகிச்சைகள் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனை மட்டுமல்லாமல் பல மருத்துவமனைகளில் நடந்திருக்கின்றன. ஆனால், கரங்களை மாற்றிப் பொருத்தும் அறுவை சிகிச்சை என்பது அரிதான ஒன்று. இரு கைகளும் துண்டிக்கப்பட்ட நபருக்கு ஒரு கையையாவது செயல்படும் நிலைக்குக் கொண்டுவந்தால், அது அவரது தினசரி செயல்பாடுகளைச் சுயமாக மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்பதற்காக, அந்த சிக்கலான, சவால் மிகுந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
டாக்டர் ராஜேஸ்வரி தலைமையில் மருத்துவர்கள் ரஷீதா பேகம், வி.எஸ். வளர்மதி, வி. ஸ்வேதா, ஷோனு, அன்னபூரணி, சந்தோஷினி, ஜி. சண்முகப்ரியா ஆகியோர் அடங்கிய குழு அறுவை சிகிச்சையைத் துவங்கியது. இந்த அறுவை சிகிச்சை சுமார் பத்து மணி நேரம் நீடித்தது. இந்த அறுவை சிகிச்சையின்போது எலும்பு கட்டமைப்புத் திருத்தம், தசைகளை இணைப்பது, நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களை இணைப்பது ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
"ரத்தக் குழாய் மறுசீரமைப்பு முடிந்தவுடனேயே இணைக்கப்பட்ட கை புத்துயிர் பெற்றது" என்கிறார் டாக்டர் பி. ராஜேஸ்வரி.
இதுபோல, துண்டிக்கப்பட்ட ஒரு கையை வேறொரு கையில் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் உலக அளவிலேயே மிக அரிதானவை. இந்தியாவில் இவை இன்னும் அரிதாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
துண்டிக்கப்பட்ட கைகளைத் திரும்பப் பொருத்தும் அறுவை சிகிச்சைகளே மிகச் சிக்கலானவைதான். ஆனால், இதுபோல கைகளை மாற்றிப் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் இன்னும் சிக்கலானவை. "காரணம், வலது கையில் இருக்கும் விரல் அமைப்புக்கு முற்றிலும் மாறானதாக இடது கையில் விரல்களின் அமைப்பு இருக்கும். இதனை மூளை புரிந்துகொள்ள சில நாட்களாகும். இது மூளைக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, அந்த நோயாளி கண்ணாடிக்கு முன்பாக நின்று பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் மூளைக்கு புரிய ஆரம்பிக்கும்" என்கிறார்கள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள்.
இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 18 நாட்கள் ஆகிவிட்டன. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட கை இயங்க ஆரம்பிக்க இன்னும் எவ்வளவு நாட்களாகலாம்?
"காயங்கள் இன்னும் சில நாட்களில் ஆறிவிடும். உணர்வு நரம்புகளைப் பொறுத்தவரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு மில்லி மீட்டர் அளவுக்கு புத்துயிர் பெறும். ஆகவே தற்போதைய சூழலிலேயே நோயாளியால் விரும்பும் விரல்களை அசைக்க முடியும்" என்கிறார் பி. ராஜேஸ்வரி.
இப்போது இந்த சிகிச்சையைப் பெற்ற நோயாளி, தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொது வார்டிற்கு மாற்றப்பட்டிருக்கிறார். "தற்போது இணைக்கப்பட்ட கையில் நல்ல ரத்த ஓட்டமும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. அந்தக் கை முழுமையான பயன்பாட்டைப் பெற இயன்முறை சிகிச்சையும் மனச்சிந்தனை மீள் பயிற்சியும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த சவால் மிகுந்த அறுவை சிகிச்சையில் மற்றும் ஒரு கவனிக்கத்தக்க அம்சமும் இருக்கிறது. அதாவது இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் அனைவருமே பெண் மருத்துவர்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு