You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹூத்தி குழு மீது அமெரிக்கா தாக்குதல் - இரானை எச்சரித்த டிரம்ப்
ஏமனில் ஹூத்தி கிளர்ச்சி குழுக்களின் மீது அமெரிக்கா தொடர் வான்வழி தாக்குல்களை நடத்தி உள்ளது. செங்கடலில் செல்லும் கப்பல் மீதான ஹூத்திக்களின் தாக்குதல் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 101 பேர் காயமடைந்ததாகவும் ஹூத்தி சுகாதார அமைச்சகம் கூறுகிறது. அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்போம் என ஹூத்திகள் கூறியுள்ளனர்.
இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகள், காஸா போரில் பாலத்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் தொடர்புடைய கப்பல்களை மட்டுமே குறிவைப்பதாக கூறிவருகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், "ஹூத்தி பயங்கரவாதிகளே உங்கள் நேரம் முடிந்துவிட்டது. உங்கள் தாக்குதல்கள் இன்றிலிருந்து நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் நீங்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு தாக்குதல் நடத்துவோம்" என எச்சரித்துள்ளார்.
மேலும், இரானை எச்சரித்துள்ள டிரம்ப், ஹூத்திகளுக்கான ஆதரவு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு பதிலளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையித் அப்பாஸ் அரக்ஷி, "இரான் வெளியுறவுக் கொள்கை குறித்து ஆணையிட அமெரிக்க அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. அந்த சகாப்தம் 1979 இல் முடிந்தது. இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் பயங்கரவாதத்துக்கான ஆதரவை நிறுத்துங்கள். ஏமன் மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)