கடத்தப்பட்டு 11 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த 300 ஆண்டுகள் பழமையான சிலைகள்

பிரசுரிக்கப்பட்டது

உளுந்தூர்ப்பேட்டையில் 2011ஆம் ஆண்டில் திருடப்பட்ட சிலைகள் சென்னையில் ஒரு வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. பிரபல சிலை கடத்தல்காரரான தீனதயாளனால் இந்தச் சிலைகள் விற்கப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தெரிவிக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் தேதி இரவு ஒரு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.

இதில் கோவிலைச் சேர்ந்த ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சிலைகள் திருடுபோயின.  இது தொடர்பாக கோவிலின் அர்ச்சகர் அடுத்த நாள் புகார் அளித்தார்.

ஆனால், இரண்டு ஆண்டுகள் தேடியும் இந்தச் சிலைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து 2013ஆம் ஆண்டில், வழக்கு மூடப்பட்டது.

இந்த நிலையில், இந்தியத் தொல்லியல் துறையில் பழங்காலச் சிலைகளைப் பதிவுசெய்தவர்களின் பட்டியலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வுசெய்தனர். அதில், சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஒரு முகவரியில் 6 பழங்காலச் சிலைகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கடந்த டிசம்பர் ஏழாம் தேதியன்று ஆர்.ஏ. புரத்தில் அந்த முகவரியில் வசித்துவந்த ஷோபா துரைராஜன் என்பவரது வீட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின்போது, அவரது வீட்டில் ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அஸ்திரதேவர், அம்மன், வீரபத்ரர், மகாதேவி ஆகிய ஏழு சிலைகள்  கண்டுபிடிக்கப்பட்டன.

பழங்கால கலைப் பொருட்களைச் சேகரிப்பது தனது பொழுதுபோக்காக இருந்ததாகவும் இந்தச் சிலைகளை 2008லும் 2015லும் அபர்ணா ஆர்ட் கேலரியின் தீனதயாளனிடம் இந்தச் சிலைகளை வாங்கியதாகவும் இந்தச் சிலைகளை வைத்திருந்த ஷோபா தெரிவித்தார்.

இதற்கான ரசீதுகளையும் தொல்லியல் துறையில் செய்யப்பட்ட பதிவுகளைவும் அவர் சமர்ப்பித்தார்.

இந்தச் சிலைகளை ஆய்வுசெய்தபோது ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி சிலைகளின் அடியில் உளுந்தூர்ப்பேட்டை ஆதிகேசப் பெருமாள் கோவில் என பொறிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, சிலை காணாமல் போன வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்த உளுந்தூர்ப்பேட்டை காவல்நிலையத்திற்குச் சென்று பழைய புகாரைத் தேடி எடுத்தனர். அந்தப் புகாரோடு, காணாமல் போன சிலைகளின் புகைப்படங்களும் இருந்தன.

ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியின் சிலைகளை ஷோபா, ஷிமோகாவில் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் அலுவலகத்தில் பதிவுசெய்திருந்தார். இந்தச் சிலைகள் முன்னூறு ஆண்டுகள் பழமையானவை என்றும் சர்வதேச சந்தையில் ஐந்து கோடி ரூபாய் மதிப்புடையவை என்றும் தெரியவந்துள்ளது.

மீதமுள்ள நான்கு சிலைகள், சென்னையில் உள்ள இந்தியத் தொல்லியல் துறை அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இவை 2008ஆம் ஆண்டுக்கு முன்பு திருடப்பட்டவை.

மீதமுள்ள நான்கு சிலைகள் எந்தக் கோவில்களில் திருடப்பட்டவை என்பதை அடையாளம் காண, இந்தச் சிலைகளின் புகைப்படங்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியின் சிலைகளை சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவில்களில் திருடப்பட்ட சிலைகள், உள்நாட்டிலேயே பல ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றப்படுவது இதுதான் முதல்முறை என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தெரிவிக்கிறது.

இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் தீனதயாளன், பல சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர். இவர் சமீபத்தில் காலமாகிவிட்டார். இந்த நிலையில், அபர்ணா ஆர்ட் கேலரியின் ஊழியர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: