மத்திய பட்ஜெட்டில் பிகார், ஆந்திராவுக்கு சிறப்புத் திட்டங்கள் - தமிழ்நாட்டிற்கு என்ன?

மத்திய பட்ஜெட்டில் பிகார், ஆந்திராவுக்கு சிறப்புத் திட்டங்கள் - தமிழ்நாட்டிற்கு என்ன?
பிரசுரிக்கப்பட்டது

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 2024 - 2025 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆட்சியில் உள்ள பிகார் மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு பல ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தனிநபர் வருமான வரியைப் பொறுத்தவரை புதிய வருமான வரித் திட்டத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய வருமான வரியை பின்பற்றுபவர்களுக்கு எவ்வித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதை இந்த காணொளியில் விரிவாக காணலாம்.

2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 9 விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பதாக தனது உரையில் குறிப்பிட்டார். அவை என்னென்ன என்பதை விவரித்தார்.

’விவசாயத்தில் உற்பத்தித்திறன் மற்றும் மீட்சி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, மனித வள மேம்பாடு மற்றும் சமூக நீதி, உற்பத்தி மற்றும் சேவைகள், நகர்ப்புற வளர்ச்சி, ஆற்றல் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அடுத்த தலைமுறை சீர்த்திருத்தங்கள் ஆகியவையே அந்த அம்சங்கள் என குறிப்பிட்டார்.

அடுத்த சில ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன், கூட்டுறவுத் துறையின் முறையான, ஒழுங்கான மேம்பாட்டிற்கான தேசிய கூட்டுறவு கொள்கையை அரசாங்கம் வெளியிடும்  எனவும் அறிவித்தார்.

வேலைவாய்ப்பை அதிகரிக்க 3 திட்டங்கள்

வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு துறை சார்ந்து சில முக்கிய திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. நிறுவனங்கள் வேலைக்கு புதிய ஆட்களை எடுப்பதை ஊக்குவிக்கும் நோக்கோடு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திட்டம் A: புதிதாக வேலைக்கு சேரும் நபர்கள்

அதன்படி, அனைத்து துறைகளிலும் புதிதாக வேலைக்கு சேரும் நபர்களுக்கு ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன.

இந்தத் திட்டத்திற்கு தகுதிப் பெற மாத வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அதிகபட்சமாக மத்திய அரசு 15 ஆயிரம் ரூபாய்  வழங்கும். வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். பி.எப் பதிவு செய்யும் நபர்களுக்கு இந்தத் தொகை ரூ.15,000 வரை மூன்று தவணைகளாக வழங்கப்படும்.

திட்டம் B: உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல்

உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஊக்கப்படுத்தும் விதமாக, இதில் புதிதாக வேலைக்கு சேரும் நபர்களுக்கும், அவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்களுக்கும்  சேர்த்து முதல் 4 ஆண்டுகளுக்கு  குறிப்பிடத்தக்க தொகையை ஊக்கத் தொகையாக மத்திய அரசு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டம் C: நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல்

நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஊழியர்களை வேலைக்கு எடுக்கும்போது,  அந்த  ஊழியர்களுக்கு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பி.எப் பங்களிப்புக்கு மாதம் ரூ. 3000 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு அரசு வழங்கும்.

அதாவது நிறுவனங்கள், ஊழியர்களுக்கு தமது பி.எப் பங்கை செலுத்திவிட்டு அரசிடம் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். எனினும், இந்த ஊழியர்களுக்கான ஊதியம் மாதத்திற்கு 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நிறுவனங்கள் கூடுதலாக ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை ஊக்குவிக்கும் முன்னிட்டு இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. திறன் மேம்பாட்டுக்கு 1000 தொழிற்பயிற்சி நிறுவனங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு 500 முன்னணி நிறுவனங்களில் இண்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டர்ன்ஷிப் உதவித் தொகையாக மத்திய அரசு சார்பில் மாதம் ரூ.5000 வழங்கப்படும் என்றும் இதனுடன் கூடுதலாக ஒருமுறை உதவியாக 6000 ரூபாய் வழங்கப்படும் என்றும் பயிற்சி கட்டணம், இண்டர்ன்ஷிப் கட்டணத்தில் 10 சதவீதம் ஆகியவற்றை நிறுவனங்களே ஏற்கும் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

வேலையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, வேலைசெய்யும் நிறுவனங்களுடன் இணைந்து பெண்களுக்கு விடுதி அமைத்தல், குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகார், ஆந்திராவுக்கு சிறப்புத் திட்டங்கள்

பிகார், ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிகாரில் சாலைகளின் கட்டமைப்பிற்காக 26 ஆயிரம் கோடி ரூபாய், வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக 11500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்த நிர்மலா சீதாராமன், 21400 கோடி ரூபாய் மதிப்பில் மின்சார திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். மேலும், கயாவில் தொழில்துறை வளர்ச்சிக்கு  மத்திய அரசு உதவும் என்றும் இது இந்தியாவின்  கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

ஆந்திர பிரதேசம் மறுசீரமைப்பு சட்டம் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாக தனது உரையில் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், ஆந்திர தலைநகர் வளர்ச்சிக்கு  சிறப்பு நிதி உதவிகள் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றார்.

போலவரம் பாசன திட்டத்தை விரைவாக நிறைவேற்றவும் நிதி வழங்கவும் மத்திய அரசு உதவும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், விசாகப்பட்டணம்- சென்னை இடையேயான தொழில்துறை மேம்பாட்டு வழித்தடம்,  சென்னை- ஹைதராபாத் இடையேயான தொழில்துறை மேம்பாட்டு வழித்தடம் ஆகியவற்றின் முதலீடுக்கு கூடுதல் நிதியை வழங்குவதாக அறிவித்தார். ராயலசீமா, பிரகாசம், வடக்கு கடற்கரையோர ஆந்திரா ஆகிய பின் தங்கிய பகுதிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள பிகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஆகியவை ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. என்.டி.ஏ. கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பல ஆண்டுகளாகவே பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரி வருகிறது. மோதி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு,  நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுவில் பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும், அடுத்த ஆண்டு பிகாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதிக முத்திரைக் கட்டணம் வசூலிக்கும் மாநிலங்கள் அவற்றை அனைவருக்குமான மிதமான கட்டணங்களாக குறைக்க வேண்டும், பெண்கள் வாங்கும் சொத்துக்களுக்கான வரிகளை குறைக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளுக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியம் ஆக்கப்பட்டுள்ளது. செல்போன்கள், அதற்கான சார்ஜர்கள் போன்றவற்றுக்கான சுங்க வரியும் 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தனி நபர் வருமான வரியைப் பொறுத்தவரை புதிய வருமான வரி திட்டத்தை பின்பற்றுபவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது, 3 லட்சத்துக்கு மேல் 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதமும் 7 லட்சத்துக்கு மேல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதமும், 10 லட்சத்துக்கு மேல் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீதமும், 12 லட்சத்துக்கு மேல் 15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதமும் வரி பிடிக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்படும்.

இதேபோல், புதிய வருமான வரி திட்டத்தை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நிலையான கழிவு 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வருவான வரித் திட்டத்தை பின்பற்றுபவர்களுக்கு சலுகைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென சிறப்பு திட்டங்களோ, அறிவிப்புகளோ எதுவும் இடம்பெறவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)