You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி வெற்றி பெற்றதா? - மதராஸி ஊடக விமர்சனம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி திரைப்படம் இன்று (செப்.5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் கல்லரக்கல் (சார்பட்டா டான்சிங் ரோஸ் ) உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
'அமரன்' படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் ஆக்ஷன் படத்தில் நடித்திருப்பதாலும், 2020ல் தர்பார் படத்திற்குப் பின் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்திருப்பதாலும் இப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் அனிருத், சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும் எதிர்பார்ப்புக்கான மற்றொரு காரணம்.
இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இப்படம் பூர்த்தி செய்துள்ளதா? ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன?
மதராஸி படத்தின் கதை என்ன?
தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்தை புகுத்தும் நோக்கில் 6 கண்டெய்னர்களில் துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பதுக்கி வைக்கப்படுகிறது. இந்த வேலையை வில்லன் வித்யூத் மற்றும் ஷபீர் இணைந்து செய்கிறார்கள்.
இந்த துப்பாக்கிகளை அழிக்க நேர்மையான போலீஸ் அதிகாரியான பிஜு மேனன் முயல்கிறார். அதற்கு சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுக்கிறார். இவர் அந்த தொழிற்சாலைக்குள் சாதாரண தொழிலாளியாக நுழைகிறார்.
காதல் தோல்வியில் இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு மன நோயாளி என்பது பின்பு தான் பிஜு மேனனுக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன ஆனது? பதுக்கி வைத்த துப்பாக்கிகளை அவர் அழித்தாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
படம் எப்படி இருக்கிறது?
"தமிழகத்தில் ஊடுருவும் துப்பாக்கி கலாசாரத்தை வேரறுக்கும் கதை. சமூக பேரழிவுகளை தொடர்ந்து படங்களில் முன்னிறுத்தி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், இந்த முறை துப்பாக்கி கலாசாரத்தை கையில் எடுத்துள்ளார். பரபரப்பான திருப்பம் நிறைந்த காட்சிகளாய் படத்தை இயக்கி மீண்டும் தனது முத்திரையை ஆழமாக பதித்துள்ளார்" என தினத் தந்தி நாளிதழ் தனது விமர்சனத்தில் இப்படத்தை பாராட்டியுள்ளது.
"படத்தில் அரங்கேறும் அத்தனை திருப்பங்களும் படத்தின் மாஸ் ட்விஸ்ட். இடைவெளி காட்சி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்" என டைம்ஸ் நவ் விமர்சனம் தெரிவித்துள்ளது.
தி இந்து தமிழ் நாளிதழ் தனது விமர்சனத்தில், "ஓர் அட்டகாசமான ஆக்ஷன் காட்சியுடன் படம் தொடங்குகிறது. வித்யூத் ஜம்வாலும், ஷபீர் கல்லரக்கல்லும் தங்களை தடுக்க வரும் போலீஸ் அதிகாரிகளுடன் சண்டையிடும் காட்சி உலகத் தரம். ஹாலிவுட் படங்களை விஞ்சும் வகையில் அந்த காட்சியின் ஸ்டண்ட் கலைஞர்களும், ஒளிப்பதிவாளரும் போட்டி போட்டு உழைத்துள்ளனர்." எனப் பாராட்டியுள்ளது.
படத்தின் பலம் என்ன?
சிவகார்த்திகேயனின் நடிப்பு குறித்து தினத் தந்தி நாளிதழ், தனது விமர்சனத்தில் "அதிரடி ஆக்சனில் புகுந்து விளையாடியிருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்து கலக்கி இருக்கிறார். நகைச்சுவைக்கு ஆட்கள் இல்லையே என்ற குறையையும் போக்கியிருக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளது.
அழகாலும், யதார்த்த நடிப்பாலும் ருக்மினி வசந்த் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார் என்றும் காதல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார் என்றும் அவரை பாராட்டியுள்ளது தினத் தந்தி விமர்சனம்.
மேலும் இவர்களுடன் கதையில் பயணிக்கும் விக்ராந்த், பிஜூ மேனன், வித்யூத் ஜம்வால், ஷபீர் கல்லரக்கல் என அனைவரும் தங்களது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக டைம்ஸ் நவ் விமர்சனம் கூறுகிறது.
"சுதீப் இளமோன் ஒளிப்பதிவு படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது. ஆக்சன் காட்சிகளில் மாயாஜாலம் செய்துள்ளார். அனிருத்தின் இசை ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் பிரமாதம்" என தினத் தந்தி நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
படத்தின் இடைவேளை காட்சி ஆடியன்ஸின் கைதட்டலை பெறும் அளவுக்கு நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. படம் முழுக்க சிவகார்த்திகேயனின் ஒன்லைன் கவுன்டர்கள் ரசிக்கும்படி உள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் பாராட்டியுள்ளது.
படத்தில் குறைகளே இல்லையா?
"படத்தில் அடுத்து என்ன என்பதை ரசிகர்கள் முன்பே கணித்து விடுவது தான் படத்தின் மைனஸ். சில இடங்களில் கதையில் தொய்வு தெரிந்தாலும், முழுமையாக படம் முடியும் போது, அந்த குறைகள் மறந்து போகின்றன." என டைம்ஸ் நவ் குறிப்பிட்டு விமர்சித்துள்ளது.
ஆனால், சிவகார்த்திகேயன் - ருக்மிணி வசந்த் காதல் காட்சிகள் எல்லாம் படத்துடன் ஒட்டவே இல்லை. 'கஜினி' டைப் காதல் காட்சிகள் வைக்கிறேன் பேர்வழி என எந்தவித உயிரோட்டமும் இல்லாத காட்சிகளை எழுதியிருக்கிறார். படம் தொடங்கிய முதல் அரை மணி நேரத்தில் மூன்று பாடல்களை வைத்திருப்பதே திரைக்கதையில் சரக்கு இல்லை என்பதை காட்டி விடுகிறது." என இந்து தமிழ் விமர்சித்துள்ளது.
படத்தில் சில காட்சிகளை யூகிக்க முடிந்தாலும் பரபரப்பான திரைக்கதை அதை மறக்கடித்து விடுகிறது என தினத் தந்தி கூறுகிறது.
"மேலும், வெறும் நான்கைந்து நல்ல காட்சிகளை எழுதிவிட்டு அதற்காக அவசரகதியில் ஒரு திரைக்கதையை எழுதி முடித்ததைப் போல இருக்கிறது. ஆரம்ப ஸ்டண்ட் காட்சியிலும், இடைவேளை காட்சியிலும் கொடுத்த உழைப்பையும் புத்திசாலித்தனத்தையும் திரைக்கதையில் போட்டியிருந்தால் இன்னொரு 'கஜினி'யாகவோ, 'துப்பாக்கி'யாகவோ இப்படம் கொண்டாடப்பட்டிருக்கும்." இந்து தமிழ் நாளிதழ் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில் மதராஸி நம்பி செல்பவர்களை ஏமாற்ற மாட்டான் என டைம்ஸ் நவ் நாளிதழ் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.